இந்த பூச்சிக் கடித்தால் தண்ணீர் தாகம் எடுத்து இறக்க நேரிடுமா ?

பரவிய செய்தி
அனைவரும் இதை சேர் பண்ணுங்க நண்பர்களே ஏனென்றால் படத்தில் இருக்கும் பூச்சி கடித்தால் தண்ணீர் தாகம் எடுக்கும். தண்ணீர் குடித்தவுடன் உயிர்போகும் வாய்ப்புள்ளது. இது வெயில் காலங்களில் வீட்டில் அதிகம் காணப்படும். எனவே குழந்தைகளின் நன்மைக்காக இதை சேர் பண்ணுங்க pls.
மதிப்பீடு
விளக்கம்
படத்தில் காண்பிக்கப்பட்டு இருக்கும் பூச்சி மனிதர்களை கடித்தால் தண்ணீர் தாகம் எடுக்கும், அப்படி தாகம் எடுக்கும் பொழுது தண்ணீரை அருந்தினால் உயிர் போகும் வாய்ப்பும் இருப்பதாக ஓர் செய்தி பல வருடங்களாகவே சமூக ஊடகத்தில், இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் பூச்சியின் தகவல் குறித்து விரிவான தகவலை அளிக்க நாங்கள் பூச்சிக் குறித்து தேடிப் பார்த்தோம். பார்ப்பதற்கு பூரானைப் போன்று இருக்கும் அந்த பூச்சியின் புகைப்படத்தை ரிவர்ஜ் இமேஜ் சேர்ச் செய்து தேடுகையில், Scutigera coleoptrata (House Centipede) எனும் பெயர் கிடைத்தது. வீட்டில் காணப்படும் பூரான் வகையைச் சேர்ந்த ஸ்குட்டைகேரா கலியோப்ட்ரடா கடித்தால் தண்ணீர் தாகம் எடுத்து, உயிர் போகும் அபாயமில்லை.
ஸ்குட்டைகேரா கலியோப்ட்ரடா எனும் பூச்சி ஆனது ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா உள்ளிட்ட கண்டங்களில் உள்ள நாடுகளில் காணப்படுகிறது. இவை மற்ற பூரான் வகைகளை போன்றே மனிதர்களின் வசிப்பிடங்களில் மறைந்து வாழும் தன்மையும் கொண்டது.
ஹவுஸ் சென்டிபேடேஸ் எனும் வீடுகளில் இருக்கும் பூரான் வகை பூச்சிகள் மனிதர்களை கடிக்கும் பொழுது சிறிது வலி ஏற்படுவதோடு கடித்த இடத்தில் சிவந்தும் போகும். இந்த பூச்சிகளின் கடிகள் தேனீக்கள் கொட்டுவதைப் போன்று இருக்கும் மற்றும் பூச்சிக் கடியின் வலியும், அடையாளமும் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு மறைந்து விடும் எனக் கூறப்படுகிறது. எனினும், சிலருக்கு அலர்ஜி போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.
ஸ்குட்டைகேரா கலியோப்ட்ரடா கடித்தால் மரணம் நிகழுமா என மருத்துவர் பிரவீன் அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசிய பொழுது, ” எப்பொழுதும் இல்லை, சென்டிபேடேஸ் (பூரான்) கடிப்பது வழக்கமானது. இதனால் கடித்த இடத்தில் வீக்கம் மற்றும் சிவப்பாக மாறுவது, வலி ஏற்படக்கூடும். இறப்பு என்பது வதந்தியே. மேற்காணும் பூச்சியுடன் தவறான தகவல் பரப்பப்படுகிறது ” எனத் தெரிவித்து இருந்தார்.
2017-ம் ஆண்டிலேயே படத்தில் காணப்படும் பூச்சி கடித்தால் உயிரிழப்பு நேரிடும் என பரவிய தகவலை தவறானது என யூடர்ன் மீம் வடிவில் பொய் என வெளியிட்டு இருந்தோம். எனினும், அந்த பொய்யான தகவல் இன்றுவரை பரவி வருகிறது.
நம் வீட்டில் காணப்படும் பூரானைக் கண்டால் உடனே அடித்துக் கொல்வது இந்தியர்களின் வழக்கம். சிலருக்கு பூரான் கடித்த சம்பவமும் நிகழ்ந்து இருக்கிறது. இதுபோன்ற பூச்சிகள் குறித்து இணையத்தில் உலாவும் தகவல்களை உண்மை என நினைத்து அச்சம் கொள்ளாமல் சரியான தகவலை மட்டும் பகிரவும்.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.