ஜக்கி வாசுதேவை முடிந்தால் கைது செய்யுமாறு ஹெச்.ராஜா சவால் விட்டாரா ?

பரவிய செய்தி
தமிழக அரசிற்கும் ஸ்டாலினுக்கும் கோடிக்கணக்கான ஹிந்துக்களின் சார்பில் வெளிப்படையான சவால். உங்களுக்கு தைரியம் இருந்தால் திராணி இருந்தால் துணிச்சல் இருந்தால் ஸ்ரீ சத்குரு ஜீ அவர்கள் மீது கை வைத்தோ கைது செய்தோ பாருங்கள். எங்களை எல்லாம் தாண்டி தான் அவரை உங்களால் நெருங்க முடியும். ஹிந்துக்களின் நம்பிக்கையை சீண்டாதீர் – ஹெச்.ராஜா
மதிப்பீடு
விளக்கம்
சட்டவிதிமீறல்களை செய்துள்ளதாகக் கூறி கோவை ஈஷா மையம் மீதும், ஜக்கி வாசுதேவ் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு பல்வேறு கோரிக்கைகள் சமூக வலைதளங்களில் வந்து கொண்ட இருப்பதை பார்க்க முடிந்தது. தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் தன்னுடைய பேட்டியில் ஜக்கி வாசுதேவ் மீது விரைவிலோ அல்லது பின்னரோ நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்து இருந்ததாக செய்திகளில் வெளியாகியது.
இந்நிலையில், பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா தன்னுடைய முகநூல் பக்கத்தில், ஜக்கி வாசுதேவை முடிந்தால் கைது செய்து பாருங்கள் என சவால் விட்டதாக இப்பதிவு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. திமுக ஆதரவாளர்கள் முகநூல் பக்கங்களில் இப்பதிவு சுற்றி வருகிறது.
உண்மை என்ன ?
ஹெச்.ராஜா அவர்களின் ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட பக்கங்களை ஆராய்கையில், கடந்த சில தினங்களாக எந்தப் பதிவும் வெளியாகவில்லை என்பதை அறிய முடிந்தது. இதுபோன்ற எந்த பதிவும் இடம்பெறவில்லை. வைரல் செய்யப்படும் ட்வீட் ஸ்க்ரீன்ஷார்டில் எழுத்துக்களின் வரிசை சரியாக இல்லை என்பதை பார்க்கலாம்.
மே 10-ம் தேதி ஹெச்.ராஜா உடைய முகநூல் பக்கத்தில், ” இந்துவிரோத அரசின் முதல் இந்து விரோதச் செயல். அரசே ஜீயரை நியமிக்க முனைவது மிகப் பெரிய அராஜகம். கார்டினல் ஆர்ச்பிஷப் பாதிரியாரை நியமிக்கும் துணிச்சல் இந்த இந்து விரோதிகளுக்கு வருமா? வீதிக்கு வந்து போராடுவது தவிர வேறு வழியில்லை போலும் ” என ஜீயர் நியமனம் தொடர்பாக வெளியிட்ட ட்வீட் பதிவே இருந்தது.
இதையும் வைரல் ட்வீட் ஸ்க்ரீன்ஷார்டை ஒப்பிட்டு பார்க்கையில், இந்த பதிவில் தான் எடிட் செய்து இருக்கிறார்கள் எனத் தெளிவாய் தெரிகிறது.
தமிழக நிதியமைச்சர் ஜக்கி வாசுதேவ் பற்றி பேசியதற்கு தமிழக பாஜகவின் காயத்ரி ரகுராம் தன் ட்விட்டர் பக்கத்தில், ” இந்து ஆலயங்களின் சொத்துக்களை பாதுகாக்கவேண்டும் என சொன்னதற்காக ஜக்கி வாசுதேவ் மீது தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராசன் குற்றம் சொல்வதும் அவரை மிரட்டி பார்த்து இந்துக்களை கிள்ளுக்கீரைகள் என நினைக்கிறார் தைரியமிருந்தால் திராணியிருந்தால் அய்யா ஜக்கி வாசுதேவை தொட்டு பாருங்கள்! தமிழகம் கொந்தளிக்கும ” எனப் பதிவிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாருங்கள்! தமிழகம் கொந்தளிக்கும்.
— Gayathri Raguramm (@BJP_Gayathri_R) May 17, 2021
முடிவு :
நம் தேடலில், முடிந்தால் ஜக்கி வாசுதேவை கைது செய்யும்படி பாஜக தலைவர் ஹெச்.ராஜா தமிழக அரசிற்கும், மு.க.ஸ்டாலினுக்கும் சவால் விட்டதாக பரவும் பதிவு எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.