கோவிலுக்குள் நரிக்குறவர்களை வரவழைத்ததை ஹெச்.ராஜா கண்டித்ததாகப் போலிச் செய்தி !

பரவிய செய்தி
புனிதமான பெருமாள் கோவிலுக்குள் நரிக்குறவர்களை வரவழைத்து, இந்துக்கள் மனதை புண்படுத்திவிட்டார் சேகர் பாபு. சேகர் பாபுவின் செயல் கண்டனத்திற்குரியது.. எச்சரிக்கும் ஹெச்.ராஜா
மதிப்பீடு
விளக்கம்
புனிதமான பெருமாள் கோவிலுக்குள் நரிக்குறவர்களை வரவழைத்து, இந்துக்கள் மனதை புண்படுத்திவிட்டார் சேகர் பாபு என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்ததாக நியூஸ் 18 உடைய டெம்பிளேட் உடன் ஓர் தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
சில நாட்களுக்கு முன்பாக கோவிலில் அளிக்கப்படும் அன்னதானத்தில் சாப்பிட அனுமதிக்கவில்லை என நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உணர்ச்சிமிகு வகையில் பேசிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி ஆதரவு குரலை பெற்றது.
இந்நிலையில், கோவிலில் அதே பெண்ணை அருகே அமர வைத்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உணவு உண்ணச் செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் பலத்த ஆதாரவைப் பெற்று வருகிறது.
மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்கள் வழிகாட்டுதல்படி, மாமல்லபுரம் அ/மி ஸ்தலசயன பெருமாள் திருக்கோயிலில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினோம். திருக்கோயில் அன்னதானம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானது. இன்று பொதுமக்களோடு அன்னதான உணவு உட்கொண்டோம். pic.twitter.com/36a8G2Araz
— P.K. Sekar Babu (@PKSekarbabu) October 29, 2021
அக்டோபர் 29-ம் தேதி அமைச்சர் சேகர் பாபுவின் ட்விட்டர் பக்கத்தில், ” மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்கள் வழிகாட்டுதல்படி, மாமல்லபுரம் அ/மி ஸ்தலசயன பெருமாள் திருக்கோயிலில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினோம். திருக்கோயில் அன்னதானம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானது. இன்று பொதுமக்களோடு அன்னதான உணவு உட்கொண்டோம் ” என அப்பெண்ணுடன் உணவு அருந்தும் புகைப்படங்களையும் இணைத்து பதிவிடப்பட்டது.
இதையடுத்து, புனிதமான பெருமாள் கோவிலுக்குள் நரிக்குறவர்களை வரவழைத்து, இந்துக்கள் மனதை புண்படுத்திவிட்டார் சேகர் பாபு என ஹெச்.ராஜா புகைப்படத்துடன் ஓர் எடிட் செய்யப்பட்ட நியூஸ் 18 டெம்பிளேட் பரப்பப்பட்டு வருகிறது. இது போலியான செய்தி.
ஒரு வருடத்திற்கு முன்பாக 2020 ஏப்ரல் மாதம் நியூஸ் 18 தமிழ் சேனலில், ” ஊரடங்கை அமல்படுத்தி இருக்காவிட்டால்… எச்சரிக்கும் ஹெச்.ராஜா ” என வெளியான செய்தியின் டெம்பிளேடில் எடிட் செய்து இருக்கிறார்கள்.
கோவில் அன்னதானத்தில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உணவு அருந்தியதற்கு ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்ததாக எந்த செய்தியும், பதிவும் இல்லை. யாரோ வேண்டுமென்றே எடிட் செய்து தவறாக பரப்பி வருகிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், புனிதமான பெருமாள் கோவிலுக்குள் நரிக்குறவர்களை வரவழைத்து, இந்துக்கள் மனதை புண்படுத்திவிட்டார் சேகர் பாபு என பாஜக தலைவர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்ததாக பரப்பப்படும் செய்தி போலியானது என அறிய முடிகிறது.