ஹெச்.ராஜா அதிமுகவை யானையின் சாணி என விமர்சித்ததாக போலி செய்தி !

பரவிய செய்தி
திமுக யானை என்றால் அதிலிருந்து பிரிந்து வந்த அதிமுக அதன் சாணியே . ஆனால் இப்போது எங்களுடன் சேர்ந்து அதிமுக பிள்ளையார் ஆகியிருக்கிறது – பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா
மதிப்பீடு
விளக்கம்
தமிழக பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா, ” திமுக யானை என்றால் அதிலிருந்து பிரிந்து வந்த அதிமுக அதன் சாணியே. ஆனால் இப்போது எங்களுடன் சேர்ந்து அதிமுக பிள்ளையார் ஆகியிருக்கிறது ” என தங்கள் கூட்டணியில் இருக்கும் அதிமுகவை விமர்சித்தது போல் கருத்தை கூறியதாக ஜூன் 24-ம் தேதியிட்ட தந்தி டிவி நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
சட்டப் பேரவையில் ஆளுநர் உரை குறித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பார்கள். இந்த அறிக்கையில் மணியோசையும் இல்லை, யானையும் இல்லை ” எனக் கூறினார். இதற்கு பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ” யானை என்று சொன்னதற்காக நான் அவரை பாராட்டுகிறேன். அடக்கப்பட்ட யானைக்குத்தான் மணி கட்டுவார்கள். திமுக என்பது யாராலும் அடக்க முடியாத யானை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் ” எனக் கூறினார்.
இதையடுத்தே, ஹெச்.ராஜா இப்படியொரு கருத்தைக் கூறியதாக தந்தி டிவி நியூஸ் கார்டு வைரலாகி இருக்கிறது. இதுகுறித்து தேடுகையில், அப்படி எந்தவொரு கருத்தையும் ஹெச்.ராஜா அவர்கள் கூறவில்லை, அப்படி எந்த செய்தியும் வெளியாவில்லை. எடிட் செய்த போலி செய்தியை வைரல் செய்து இருக்கிறார்கள்.
தந்தி டிவி செய்தியும், வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டை தாங்கள் வெளியிடவில்லை, அது போலியானது எனப் பதிவிட்டு இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், திமுக யானை என்றால் அதிலிருந்து பிரிந்து வந்த அதிமுக அதன் சாணியே . ஆனால் இப்போது எங்களுடன் சேர்ந்து அதிமுக பிள்ளையார் ஆகியிருக்கிறது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.