இந்துக்கள் இந்தியை எதிர்க்கமாட்டார்கள் என எச்.ராஜா கூறியதாக வதந்தி !

பரவிய செய்தி
ஒழுக்கமான தாய் தந்தையர்க்கு பிறந்த ஹிந்துக்கள் யாரும் ஹிந்தியை எதிர்க்கமாட்டார்கள் – எச்.ராஜா
மதிப்பீடு
விளக்கம்
ஒருபுறம் இந்தி மொழி திணிக்கப்படுவதாகக் கூறி அதற்கு எதிராக தமிழகத்தில் குரல்கள் எழுகையில், மறுபுறம் இந்தி மொழி தேவை என மத்தியில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களும், அதன் ஆதரவாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவ்விரு தரப்பினரின் விவாதமே சமூக வலைதளங்களில் முதன்மையாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில், ஒழுக்கமான தாய் தந்தையர்க்கு பிறந்த இந்துக்கள் யாரும் இந்தியை எதிர்க்கமாட்டார்கள் என பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி எச்.ராஜா அவர்களை கடுமையாக விமர்சித்தும் மீம்ஸ்கள் வலம் வருகிறது.
உண்மை என்ன ?
எச்.ராஜா அவர்கள் சர்ச்சைக்குரிய பேச்சுக்களுக்கு பெயர் பெற்றவர் என்பதை அனைவரும் நன்கு அறிந்ததே. இப்படியொரு சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்து இருந்தால் நிச்சயம் கண்டனங்கள் குவிந்து இருக்கும். ஊடகங்களில் விவாதங்கள் கூட பெரிதாய் நிகழ்ந்து இருக்கும். ஆனால், சமீபத்தில் எச்.ராஜா இந்துக்கள் குறித்து இப்படியொரு கருத்தை தெரிவித்ததாக எந்தவொரு செய்தியிலும் வெளியாகவில்லை. எச்.ராஜா அவர்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களிலும் எந்த பதிவும் இடம்பெறவில்லை.
வைரலாகும் தகவல் ஒரேதேசம் எனும் முகநூல் பக்கத்தின் நியூஸ் கார்டில் இருந்தே துவங்கி இருக்கிறது. அந்த முகநூல் பக்கத்தை ஆராய்கையில், அந்த பக்கம் பாஜக ஆதரவும் பக்கம் என்பதை அறிய முடிந்தது. பாஜகவிற்கு ஆதரவாக இருக்கும் முகநூல் பக்கம் எச்.ராஜாவிற்கு எதிராக கண்டனத்தை உண்டாகும் பதிவை வெளியிட வாய்ப்பில்லை. மேலும், அப்பக்கத்தில் எச்.ராஜா கூறியதாக வைரலாகும் நியூஸ் கார்டு இடம்பெறவும் இல்லை.
ஒருவேளை வெளியிட்ட பதிவை நீக்கி இருக்கலாம் எனத் தோன்றியது. அந்த முகநூல் பக்கத்தில் வைரலாகும் நியூஸ் கார்டு உடன் ஒத்த மற்றொரு நியூஸ் கார்டை ஒப்பிட்டு பார்க்கையில் வைரலாவது எடிட் செய்யப்பட்ட ஒன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது. ஏனெனில், வைரல் நியூஸ் கார்டின் எழுத்து வடிவம் வேறாகவும், வாட்டர் மார்க் இல்லாமலும் உள்ளது.
இயக்குனர் கரு.பழனியப்பன் தன் ட்விட்டர் பக்கத்தில் எச்.ராஜா கூறியதாக பரவும் நியூஸ் கார்டை பகிர்ந்து கண்டனம் தெரிவித்து இருந்தார். எனினும், தற்போது அந்த ட்வீட் பதிவை நீக்கி இருக்கிறார்.
மேலும் படிக்க : இந்தி தெரியாதவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என பாஜக இளைஞரணி தலைவர் கூறியதாக வதந்தி !
இதேபோல், தமிழக பாஜகவின் இளைஞரணி தலைவர் ” இந்தி தெரியாதவர்கள் பாகிஸ்தானுக்கு போய் விடுங்கள் ” எனக் கூறியதாக ஃபோட்டோஷாப் நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.
முடிவு :
நம் தேடலில், ஒழுக்கமான தாய் தந்தையர்க்கு பிறந்த இந்துக்கள் யாரும் இந்தியை எதிர்க்கமாட்டார்கள் என எச்.ராஜா கூறியதாக தவறான செய்தி சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது என அறிய முடிகிறது.