ஹெச்.ராஜா பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக எடிட் வீடியோவை பகிர்ந்த டி.ஆர்.பி.ராஜா !

பரவிய செய்தி

நாம் அனைவரும் இந்துக்கள் இந்து ராஜ்ஜியம் அமைப்போம் என்று கூவும் பிஜெபியின் உண்மை முகம்.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா நியூஸ் 18 தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போதும், ” மக்களுக்கு இளைய சமூதாயத்துக்கு புரியனும். பள்ளனும், பறையனும் கோவிலுக்குள் போகக் கூடாது, சேர்ந்து நுழையக் கூடாது. அப்படி நுழைந்தால் சூத்திரன் பாப்பான் அளவுக்கு உயர மாட்டான். பள்ளன், பறையன் அளவிற்கு தாழ்ந்து போவான் ” எனப் பேசியதாக 12 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதை மன்னார்குடி எம்எல்ஏவும், திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளருமான டி.ஆர்.பி ராஜா ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார்.

Facebook link 

ஹெச்.ராஜா பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக இவ்வீடியோ கடந்த 2020ம் ஆண்டில் இருந்தே சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 2020-ல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஐடி விங் முகநூல் பக்கத்திலும் ஹெச்.ராஜாவிற்கு கண்டனங்களுடன் இவ்வீடியோ பகிரப்பட்டு இருக்கிறது.

உண்மை என்ன ? 

ஹெச்.ராஜா பேசிய வீடியோ குறித்து தேடுகையில், 2020ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி ” 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகத்திற்கு வளர்ச்சியா? வீழ்ச்சியா? ” எனும் தலைப்பில் நியூஸ் 18 சேனல் நடத்திய மக்கள் சபா எனும் நிகழ்ச்சியில் ஹெச்.ராஜா கலந்து கொண்டு பேசி இருக்கிறார்.

மேற்காணும் வீடியோவில் ஹெச்.ராஜா 41 மற்றும் 1:02:54 மணி நேரத்தில் என இருமுறை பேசி இருக்கிறார். 1:02:54 மணி நேரத்தில் பேசும் போது, ” நான் திராவிடம் என்கிற இடம் இருக்கு என்று ஒத்துக் கொண்டும் கூட அதை விமர்சித்தார்கள் என்றால் அவர்கள் உண்மையை ஏற்பதாக இல்லை எனப் புரிகிறது. இந்த ஆணவக் கொலையைப் பற்றி உண்மையை சொன்னால் கோபப்படக்கூடாது. திராவிட இயக்கங்கள் சீண்டி சீண்டித்தான் ஆணவக் கொலையே வருகிறது. காரணம், அதன் அடிப்படை சித்தாந்தம் பட்டியல் சமூதாய மக்களுக்கு விரோதமானது.

மதுரையிலே மீனாட்சி அம்மன் கோவிலில் பட்டியல் சமூதாய மக்களை கூட்டிக்கொண்டு வைத்தியநாத ஐயர் உள்ளே போகும்போது உடனிருந்தவர் பெரியவர் முத்துராமலிங்கத் தேவர். ஆனால், அதை எதிர்த்தவர் ஈ.வெ.ரா அவர்கள். அவர் சொன்ன வார்த்தை, அந்த வார்த்தையில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் அதை சொல்வற்கு காரணம், உண்மை தமிழக மக்களுக்கும், இளைய சமூதாயத்துக்கு புரியனும். பள்ளனும், பறையனும் கோவிலுக்குள் போகக் கூடாது, சேர்ந்து நுழையக் கூடாது. அப்படி நுழைந்தால் சூத்திரன் பாப்பான் அளவுக்கு உயர மாட்டான். பள்ளன், பறையன் அளவிற்கு தாழ்ந்து போவான் என்று ஈ.வெ.ரா பேசி, இவர்கள் தலித்  சமூதாய மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு.. ” எனப் பேசிக் கொண்டிருக்கும் போதே கீழே இருப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்து சலசலப்பு எழுந்த காட்சிகள் பதிவாகி இருக்கின்றன.

பட்டியலின மக்கள் கோவிலுக்குள் செல்வதை பற்றி பெரியார் சொன்னதாக ஹெச்.ராஜா பேசிய வீடியோவில் முன் பகுதி மற்றும் பெரியார் பெயரைக் கூறும் பின் பகுதி நீக்கப்பட்டு தவறாகப் பரப்பப்பட்டு வருகிறது.

முடிவு : 

நம் தேடலில், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுகவினர் பரப்பும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader