62 ஆண்டுகள் காது கேளாதவராக நடித்த கணவனின் கதை | உண்மை என்ன ?

பரவிய செய்தி
மனைவியின் டார்ச்சரில் இருந்து தப்பிக்க 62 ஆண்டுகளாக காது கேளாதவர் போல் நடித்த கணவர் மீது மனைவி விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார்.
மதிப்பீடு
விளக்கம்
பெரும்பாலான வீடுகளில் மனைவியின் பேச்சை தவிர்க்கும் பொருட்டு கணவன்மார்கள் காதில் வாங்காதது போல் நடிப்பது வழக்கம். அதுபோன்ற காட்சிகள் திரைப்படங்களிலும் கூட இடம்பெறுவதை கண்டு இருப்போம். இவற்றிற்கு எல்லாம் மேலாக அயல்நாட்டில் கணவர் ஒருவர் தன்னுடைய மனைவியின் பேச்சில் இருந்து தப்பிக்க 62 ஆண்டுகளாக காது கேளாதவராக நடித்து வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
” அமெரிக்காவின் கனெக்டிகட் பகுதியைச் சேர்ந்த 84 வயதான பார்ரி டவ்சன் என்பவர் தன்னுடைய மனைவி டோரத்தியின் பேச்சில் இருந்து தப்பிக்க 62 ஆண்டுகளாக காது கேளாதவர் போல் நடித்து ஏமாற்றி உள்ளார். இதற்காக அவரின் மனைவி 2 ஆண்டுகள் சைகை மொழியை கற்றுள்ளாராம். இப்படி இருக்கையில், அவரின் மனைவி ஒரு நாள் யூடியூப் பார்க்கும் பொழுது, தன்னுடைய கணவர் பார் ஒன்றில் கரோக்கி பாடலை கேட்டுக் கொண்டு நடனமாடியதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த மனைவி கணவன் தன்னை ஏமாற்றியதாக விவாகரத்து வழங்க கோரி வழக்கு தொடர்ந்து உள்ளார். இவர்களுக்கு 6 குழந்தைகள், 13 பேரன், பேத்திகள் உள்ளதாக ” 2019 மார்ச் மாதம் குமுதம் உள்ளிட்ட இணையதளங்களில் கணவன்-மனைவி புகைப்படத்துடன் இச்செய்தி வெளியாகி இருக்கிறது.
யார் யாருக்கோ நோபல் பரிசு தருகிறார்கள், இவருக்கல்லவா நோபல் பரிசு தர வேண்டும் என அவரை பாராட்டி மீம்ஸ் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆவதை பார்க்கலாம். எனினும், இந்த கதையின் தொடக்கம் எங்கிருந்து வந்தது, அதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்க்க தீர்மானித்தோம்.
உண்மை என்ன ?
கடந்த ஆண்டு முதல் பரவி வரும் கணவனின் கதை குறித்து தேடிய பொழுது, பிப்ரவரி 2019-ல் முதன் முதலில் இக்கதை World News Daily Report (WNDR) எனும் இணையதளத்தில் ” Man Faked being deaf and dumb for 62 years to avoid listening to his wife ” என்ற தலைப்பில் புகைப்படத்துடன் வெளியாகி இருந்துள்ளது. இந்த கட்டுரையில், காது மற்றும் வாய் பேச இயலாதவராக நடித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
World News Daily Report இணையதளத்தின் நம்பகத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்த பொழுது, அந்த தளத்தின் இறுதியில் ” வேர்ல்ட் நியூஸ் டெய்லி தன்னுடைய கட்டுரைகளின் நையாண்டித்தன்மை மற்றும் அவற்றின் உள்ளடக்கத்தின் கற்பனையான தன்மைக்கான அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்கிறது. இந்த இணையதளத்தின் கட்டுரைகளில் தோன்றும் அனைத்து கதாப்பாத்திரங்களும் – உண்மையான நபர்களை அடிப்படையாகக் கொண்டவை கூட – முற்றிலும் கற்பனையானவை மற்றும் அவற்றிற்கும் வாழும், இறந்த அல்லது இறக்காத , எந்தவொரு நபருக்கும் இடையில் ஒற்றுமை இருந்தால் அது முற்றிலும் அதிசயம் ” எனக் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
World News Daily Report ஆனது இந்த கதையில் 2017-ல் உண்மையானவே 67 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த ஃப்ளோரிடா கணவன்-மனைவி விவாகரத்து பெறுவதாக பிற இணையதள செய்தியில் வெளியானப் புகைப்படத்தை பயன்படுத்தி உள்ளது.
நம்முடைய தேடலில் இருந்து, அமெரிக்காவில் மனைவியின் பேச்சில் இருந்து தப்பிக்க 62 ஆண்டுகளாக காது கேளாதவராக கணவன் நடித்து வந்ததாக பரவி வரும் கதை உண்மையானது அல்ல. நையாண்டி மற்றும் கற்பனையான கதைகளை வெளியிடும் World News Daily Report-ல் இக்கதையானது முதன் முதலில் வெளியாகி இருக்கிறது.
எனினும், பரவி வரும் புகைப்படமானது 67 ஆண்டுகள் வாழ்ந்த கணவன்-மனைவி விவாகரத்து மேற்கொள்வதாக வெளியான செய்தியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதுபோல், பிற மொழிகளில் வெளியாகும் நையாண்டித்தனமான கதைகள், தகவல்கள் உண்மையென தவறாக பகிரப்படும் நிகழ்வுகள் ஏராளமாக நிகழ்ந்து உள்ளது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.