தெலங்கானாவில் நடந்த இந்து ஆணவக் கொலையை முஸ்லீம் மதத்துடன் தொடர்புபடுத்தி பரப்பப்படும் வதந்தி !

பரவிய செய்தி
தெலுங்கானா துலபள்ளியில் ஹரீஸ் என்ற இளைஞர் இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்து விட்டு மதம் மாற மறுத்ததால் பெண் வீட்டாரால் கொல்லப்பட்டார்.
மதிப்பீடு
விளக்கம்
தெலங்கானா மாநிலம் துலபள்ளி பகுதியில் தேவரகொண்டா ஹரிஷ் என்ற இளைஞர் இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்து மதம் மாற மறுத்ததால் திருமணம் முடிந்த 10 நாட்களுக்கு பிறகு அனுமன் கோவில் முன்பாக பெண் வீட்டாரால் கொலை செய்யப்பட்டதாக புகைப்படத்துடன் கூடிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பத்திரிக்கையாளர் எனக் கூறிக் கொள்ளும் வலதுசாரி ஆதரவாளர் அஷ்வினி ஸ்ரீவஸ்தாவா என்பவர் ட்விட்டர் பக்கத்தில் இப்பதிவை வெளியிட்டார். இந்த ட்வீட் பதிவின் அடிப்படையில் வலதுசாரி ஆதரவு இணையதளமான Opindia செய்தியாக வெளியிட்டு இருக்கிறது.
உண்மை என்ன ?
ஹரிஷ் கொலை சம்பவம் குறித்து தி ஜெய்பூர் டயலாக்ஸ் எனும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்ட பதிவின் கமெண்டில், ” இரு தரப்பினரும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள், முஸ்லீம் அல்ல. வதந்தியைப் பரப்பாதீர்கள் ” என மார்ச் 6ம் தேதி பெட் பஷீர்பாத் காவல் நிலையம் ட்விட்டர் பக்கத்தில் இருந்து பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது.
மேற்கொண்டு தேடுகையில் மார்ச் 5ம் தேதி வெளியான தி ஹிந்து ஆங்கில செய்திக் கட்டுரையில், ” டிஜே சவுண்ட் சிஸ்டம் ஆபரேட்டராக பணியாற்றி வந்த 28 வயதான ஹரிஷ் என்பவரின் மனைவி மனிஷாவின் சகோதரன் தீன் தயாள் என்பவரால் கொல்லப்பட்டுள்ளார்.
ஹரிஷ் மற்றும் மனிஷா காதல் விவகாரம் தெரிந்து தீன் தயாள் எச்சரித்து இருக்கிறார். இருப்பினும், குடும்பத்தினர் விருப்பத்திற்கு மாறாக இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தீன் தயாள் தனது நண்பர்கள் உடன் இணைத்து ஹரிஷை கொலை செய்து உள்ளார்.
இந்த கொலை வழக்கில் உதவியாக இருந்த நரேஷ், வெங்கடேஷ், அக்சய் குமார்,மனிஷ், சாய்நாத், ராஜேந்திர குமார், நவநீதா உள்பட 9 பேரை போலீசார் கைது உள்ளனர் ” எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
கொலை சம்பவத்தின் பின்னணி குறித்து மார்ச் 5ம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட கட்டுரையில், கொலை செய்யப்பட்ட ஹரிஷ் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்றும், மனிஷா பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.
மேலும் படிக்க : திருமணம் செய்யுமாறு கூறிய பெண்ணை கொடூரமாக தாக்கிய ‘இந்து இளைஞரை’ முஸ்லீம் என வதந்தி பரப்பும் வலதுசாரிகள்
மேலும் படிக்க : டெல்லியில் பெண்ணை கொடூரமாக கொலை செய்யும் வீடியோ.. லவ் ஜிகாத் என வதந்தி !
முடிவு :
நம் தேடலில், தெலுங்கானாவில் ஹரிஸ் என்ற இளைஞர் இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்ததால் பெண் வீட்டாரால் கொலை செய்யப்பட்டார் எனப் பரப்பப்படும் தகவல் தவறானது. ஹரிஷ் மற்றும் மனிஷா இருவருமே இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். ஹரிஷ் ஆணவக் கொலையை முஸ்லீம் மதத்துடன் தொடர்புபடுத்தி வதந்தி பரப்பி வருகிறார்கள் என்பதை அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.