ஹைதராபாத் நிஜாம் 5,000 கிலோ தங்கத்தை இந்தியாவிற்கு தானமாக அளித்தாரா ?

பரவிய செய்தி

அம்பானி, அதானிகளை விட பணக்காரர்..! ஹைதராபாத் நிஜாம், உஸ்மான் அலிகான் !! இந்தியாவுக்காக 5000 கிலோ தங்கம் தானமாக தந்தவர் !

 

மதிப்பீடு

விளக்கம்

1965-ம் ஆண்டு அன்றைய ஹைதராபாத் நிஜாம் மீர் உஸ்மான் அலிகான் அவர்கள் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு 5,000 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கியதாக கடந்த சில ஆண்டுகளாக ஹைதராபாத் நிஜாம் வரலாற்றை நினைவில் கொள்ள வேண்டும் என இத்தகவல் சமூக வலைதளங்களில் பதிவுகளாக, வீடியோக்களாக பகிரப்பட்டு வருகின்றன.

Facebook archive link 

ஹைதராபாத் நிஜாம் இந்தியாவிற்கு 5,000 கிலோ தங்கத்தை தானமாக அளித்தாரா என்பது குறித்து பரவும் பதிவை பகிர்ந்து, இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

” 1965-ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போருக்கு பிந்தைய பொருளாதாரத்தை சீராக வைக்க நிதி திரட்டுவதற்காக பிரதமர் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஹைதராபாத் விஜயத்தின் போது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கு நிஜாம் மீர் உஸ்மான் அலி கான் 5,000 கிலோ தங்கத்தை தானமாக வழங்கினார். மேலும், தங்கத்தை அளித்த பிறகு அதற்காக எடுத்துச் செல்லப்பட்ட பெட்டிகளை திருப்பி தருமாறு நிஜாம் கேட்டுக் கொண்டதகாவும் ” 2014-ம் ஆண்டு deccan chronicle பத்திரிகை நிஜாம் குறித்து வெளியிட்ட கட்டுரையில் இடம்பெற்று உள்ளது.

ஹைதராபாத் நிஜாம் மீர் உஸ்மான் அலிகான் இந்திய அரசாங்கத்திற்கு 5,000 கிலோ தங்கம் தானமாக அளித்ததாகக் கூறப்படும் தகவல் பல ஆண்டுகளாக கேள்விக்குட்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதற்கான ஆதாரத்தை பெற வேண்டி பல முறை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தொடர் கேள்விகள் எழுப்பப்பட்டு உள்ளது.

2018-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி ” The truth about the Nizam and his gold ” எனும் தலைப்பில் வெளியான தி ஹிந்துவின் கட்டுரையில், நிரூபர்களின் தகவல் அறியும் கேள்விக்கு ” அத்தகைய நன்கொடை பற்றிய எந்தவொரு தகவலும் இல்லை ” என தேசிய பாதுகாப்பு நிதியம் செயல்படும் பிரதமர் அலுவலகம் பதில் அளித்து உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மாறாக, ” 1965-ம் ஆண்டு அக்டோபரில் பொருளாதார நெருக்கடியைக் கட்டுப்படுத்தும் சூழலில் நிஜாம் தேசிய பாதுகாப்பு தங்கத் திட்டத்தில் 4.26 லட்சம் கிராம்(425 கிலோ) தங்கத்தை 6.5% வட்டியுடன் முதலீடு செய்ததாக ” 1965-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி ஹைதராபாத் பகுதியில் இருந்து வெளியான செய்தியை தி ஹிந்து  குறிப்பிட்டு உள்ளது.

1965-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேடி தி ஹிந்து செய்தியின்படி, ” ஹைதராபாத்தின் முன்னாள் ஆட்சியாளர் இந்தியாவின் பிரதமரை வரவேற்க வந்த போது பிரதமர் திரு.லால் பகதூர் சாஸ்திரி மற்றும் ஹைதராபாத் நிஜாம் ஆகிய இருவரும் விமான நிலையத்தில் சில வார்த்தைகளை பகிர்ந்து கொண்டனர்.

மாலை நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய திரு.சாஸ்திரி, நிஜாம் சுமார் 50 லட்சம் மதிப்புள்ள 4.5 லட்சம் கிராம் தங்கத்தை தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்ததற்காக வாழ்த்தினார். முதலீட்டில் பழைய தங்க மொஹர்கள்(நாணயங்கள்) இருந்தன. அவற்றின் மதிப்பு ஆனது பழமையைப் பொறுத்து அதிகமாக இருந்தது. நாங்கள் இந்த தங்க மொஹர்களை உருக்க விரும்பவில்லை, ஆனால் அதிக மதிப்பைப் பெற வெளிநாடுகளுக்கு அனுப்புகிறோம். எங்களுக்கு ஒரு கோடி ரூபாய் கிடைக்கக்கூடும் ” என்றார்.

மேலும், திருப்பதி தேவஸ்தானத்திடம் இருந்து 1.25 லட்சம் கிராம் தங்கம் நன்கொடை அளிக்கப்பட்டதாகவும், தெலுங்கு திரைப்பட நட்சத்திரங்களிடம் இருந்து அரசாங்கத்திற்கு 8 லட்சம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டதாகவும் அந்த செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என தி ஹிந்து செய்திக் குறிப்பிட்டு உள்ளது.

நிஜாமின் தங்க முதலீடு ஒரு சிறந்த நடவடிக்கையாக இருந்தாலும், முதலீட்டில் இருந்து பயனைப் பெறும் பயனாளி யார் என்கிற விவரமும் மறைந்துள்ளது. நிஜாமின் முதலீடு மற்றும் இறுதி பயனாளி குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கான மனுவை ரிசர்வ் வங்கி நிராகரித்து உள்ளது.

இதுகுறித்து, நிஜாம் உஸ்மான் அலிகானின் பேரன்களில் ஒருவரான நஜாப் அலிகான், ” இது எனக்கு ஒரு செய்தி மட்டுமே. யார் இதைப் பெறுவார்கள் என்பது எனக்குத் தெரியாது. நிஜாம் 52 அறக்கட்டளையை உருவாக்கினார், ஆனால் இந்த பணத்தை பெறும் அறக்கட்டளை குறித்து எனக்குத் தெரியாது ” எனக் கூறியுள்ளார்.

நிஜாம் ஹைதராபாத்தை ஒரு சுதந்திர நாடாக தக்க வைத்துக் கொள்ள முயன்றதும், இந்த விசயத்தை பாகிஸ்தானின் ஆதரவோடு ஐ.நா பாதுகாப்புக் குழுவிடம் எடுத்துச் சென்றதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பின்னர் 1948-ல் சர்தார் வல்லபாய் படேல் உத்தரவின் பேரில் ஆப்ரேஷன் போலோ எனும் ராணுவ நடவடிக்கையின் மூலம் நிஜாம் தோல்வியை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவு : 

நம் தேடலில், ஹைதராபாத் நிஜாம் மீர் உஸ்மான் அலிகான் 1965-ல் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு 5,000 கிலோ தங்கத்தை நன்கொடை பெற்றதாக எந்தவொரு தகவலும் இல்லை என இந்தியா அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மாறாக, 1965-ல் ஹைதராபாத் நிஜாம் தேசிய பாதுகாப்பு தங்கத் திட்டத்தில் 425 கிலோ தங்கத்தை 6.5 வட்டியுடன் முதலீடு செய்ததை அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பொது கூட்டத்தில் பேசியதை செய்தியின் மூலம் அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button