அபிநந்தன் மனைவி பேசுவதாகப் பரவும் வீடியோ ?

பரவிய செய்தி
பாகிஸ்தான் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் அவர்களுடைய மனைவி பேசும் வீடியோ.
மதிப்பீடு
விளக்கம்
ஃபேஸ்புக்கில் அபிநந்தன் மனைவி என டைப் செய்தால் இவர் பேசும் வீடியோ தான் முதலில் வருகிறது. அந்த அளவிற்கு இந்தியாவில் வைரலாகி வருகிறது. Youtube-கூட இவ்வாறாகக் கூறி வீடியோவை பலரும் வெளியிட்டு உள்ளனர்.
ஆனால், வீடியோவில் பேசுபவர் விங் கமாண்டர் அபிநந்தன் அவர்களின் மனைவி அல்ல. வீடியோவில் பேசத் தொடங்கும் பொழுதே ” நான் ஒரு ராணுவ வீரரின் மனைவி ” எனக் கூறியிருப்பார்.
மேலும், தொடர்ந்து பேசும் பொழுது ” அபிநந்தன் குடும்பத்தில் நடந்து கொண்டிருக்கும் வேதனையை கற்பனை செய்து பாருங்கள் ” என ஒரு மூன்றாம் தரப்பு நபர் போன்றே கூறி இருப்பார்.
இதையெல்லாம், தவிர்த்து விங் கமாண்டர் அபிநந்தன் கைது செய்யப்பட்ட நேரத்தில் அவரின் குடும்பத்தை பற்றிய தகவல்களை மீடியாவில் வெளியிட்டு இருந்தனர். அதில், அவரின் மனைவியின் புகைப்படமும் இடம்பெற்று இருந்தது. செய்தி சேனல் ஒன்றில் இதே வீடியோ பதிவிட்டு, ராணுவ வீரர் மனையின் பேச்சு என வெளியிடப்பட்டுள்ளது.
ஆகையால், வைரல் ஆகும் வீடியோவில் இருப்பவர் அபிநந்தன் மனைவி அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
வீடியோவில் பேசிய ராணுவ வீரரின் மனைவி , ” எனது சக இந்தியர்களுக்கு, குறிப்பாக அரசியல் தலைவர்கள் எங்கள் வீரர்களின் தியாகத்தை அரசியலாக்க வேண்டாம் ” என இந்திய அரசியல் களம் குறித்து விமர்சித்து இருப்பார்.