மனுதர்ம வாசகப் புகைப்படம் மெட்ராஸ் ஐஐடி-யில் எடுக்கப்பட்டதா?| உண்மை என்ன ?

பரவிய செய்தி
IIT சென்னை கேன்டீனில் இருக்கும் மனுதர்ம வாசகம். அறிவாளிகளை உருவாக்க நம் வரிப்பணத்தில் அரசு உருவாக்கிய நிறுவனத்தை இந்த பார்ப்பனிய கூட்டம் எப்படி ஆக்கி வச்சிருக்கானுங்க என்று பாருங்கள்.
மதிப்பீடு
விளக்கம்
சென்னை ஐஐடி-யில் மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு பிறகு ஐஐடி-யில் சாதிய, மத ஒடுக்குமுறை, இடஓதுக்கீடு விதிமீறல், கேண்டீனில் அசைம் மற்றும் சைவம் சாப்பிடுபவர்களுக்கு தனித்தனியே கை கழுவும் இடம் இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுந்தன.
IIT சென்னை கேன்டீனில் இருக்கும் மனுதர்ம வாசகம்.. அறிவாளிகளை உருவாக்க நம் வரிப்பணத்தில் அரசு உருவாக்கிய நிறுவனத்தை இந்த பார்ப்பனிய கூட்டம் எப்படி ஆக்கி வச்சிருக்கானுங்க என்று பாருங்கள்.. pic.twitter.com/gURYYk05tS
— anbeSelva (@anbeSelva) November 19, 2019
அதனுடன், சென்னை ஐஐடி-யில் உள்ள கேண்டீனில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் ” நூறு வருஷ காலம் வருஷந்தோறும் அசுவமேத யாகம் செய்த பயனும் , மாமிச போஜனம் செய்யாத பயனும் சமம் – மனு தர்ம சாஸ்திரம் ” என இடம்பெற்று இருப்பதாக ஒருவர் கையை காண்பிக்கும் புகைப்படம் ட்விட்டர், முகநூல் உள்ளிட்டவையில் அதிகம் வைரலாகியது.
சென்னையில் உள்ள ஐஐடி-யில் மனு தர்ம சாஸ்திரத்தின் வாசகங்கள் உண்மையில் இருக்கிறதா என மேற்காணும் புகைப்படங்களை அனுப்பி, அதன் உண்மைத்தன்மையை கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் அதிகம் கேட்கப்பட்டு வந்தது. இது குறித்து நாமும் விசாரித்தும், ஆராய்ந்தும் வந்தோம்.
உண்மை என்ன ?
இந்நிலையில், ஐஐடிவளாகத்தில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படத்தில் இருப்பவரே தன்னுடைய முகநூலில் அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார். Frederick Engels ST தன்னுடைய முகநூல் பக்கத்தில்,
” சமீபத்தில் , மனு தர்ம வாசகத்தை சுட்டிக்காட்டி ஒரு புகைப்படம் பரவலாக பரப்பப்படுகிறது . முதலில் இப்புகைப்படம் கோயம்புத்தூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் எடுக்கப்பட்டவை என்பது குறித்து தெளிவுப்படுத்த விரும்புகிறேன். திருமணத்தில் எடுக்கப்பட்ட படங்களை எனது நண்பர்கள் பதிவேற்றி உள்ளனர். எனவே, இந்த குறிப்பிட்ட புகைப்படம் ஐஐடி-எம் வளாகத்தில் எடுக்கப்படவில்லை. என்னிடம் கூட கேட்காமல் ஐஐடி-எம் வளாகத்தில் எடுக்கப்பட்டது என்று அன்புடன் ஆர்.எஸ்.எஸ் முடிவுக்கு வந்தது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை ” என நீண்ட விளக்க பதிவை அளித்து இருக்கிறார்.
சர்ச்சையையும், கண்டனத்தையும் பெற்று வந்த மனு தர்ம சாஸ்திர வாசகம் ஐஐடி உள்ள வளாகத்தில் எடுக்கப்படவில்லை என்பதை இதிலிருந்து தெளிவுப்படுத்த முடிகிறது. கோயம்புத்தூரில் எடுக்கப்பட்ட புகைப்படம் , சென்னை ஐஐடி வளாகம் என தவறாக பரவி இருக்கிறது.
இனி, இப்புகைப்படங்களை பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம். மேலும், யாரேனும் தவறாக புரிந்து பகிர்ந்து இருந்தால் அவர்களுக்கு விளக்கிக் கூறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.