ஐஐடி-யில் 2 பட்டம் பெற்ற இளைஞர் ரயில்வேயில் ட்ராக்மேன் | காரணம் என்ன ?

பரவிய செய்தி
மும்பை ஐஐடி-யில் பி-டெக், எம்-டெக் படித்த பட்டதாரி ரயில்வேயில் ட்ராக்மேன் பணியில் உள்ளார். இணையத்தில் வலம் வரும் மோசமான செய்தி. இந்தியாவை இறைவன் தான் காப்பாற்ற வேண்டும்.
மதிப்பீடு
சுருக்கம்
ஐஐடி-யில் படித்து பட்டம் பெற்ற இளைஞர் ரயில்வேயில் ட்ராக்மேன் பணியில் சேர்ந்ததற்கான காரணத்தை தெரிவித்து உள்ளார். அதனை தெரிந்து கொள்வது அவசியமாகும்.
விளக்கம்
இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனமான ஐஐடி-யில் படிப்பதை மிகப் பெரிய காரியமாக கருதுகின்றனர். அங்கு படிக்கும் மாணவர்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களில் லட்சங்களில் இருந்து ஆண்டிற்கு கோடிகள் வரையிலான ஊதியத்தில் பணிகள் கிடைத்து வருகிறது.
இந்நிலையில், மும்பை ஐஐடி-யில் படித்த இளைஞர் ஒருவர் பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி மட்டும் போதுமான ரயில்வே ட்ராக்மேன் வேலைக்கு செல்வது ஊடகங்கள் தொடங்கி சமூக வலைதளங்களிலும் செய்தியாகி இருக்கிறது.
பீகார் தலைநகரைச் சேர்ந்த ஷர்வன் குமார் மும்பையில் உள்ள ஐஐடி-யில் 2010-ம் ஆண்டு பட்டப்படிப்பை துவங்கி 2015-ல் பி-டெக், எம்-டெக் பட்டங்களை பெற்றுள்ளார். இந்நிலையில், ஷர்வன் இந்தியன் ரயில்வே துறையில் தன்பந் ரயில்வே டிவிசனில் டிராக் பராமரிப்பர் எனும் ட்ராக்மேன் பணியில் சேர்ந்துள்ளார்.
ஷர்வன் குமார் தன்பத் ரயில்வே டிவிசனில் ட்ராக்மேன் பணியில் சேர்ந்தது அங்கு பணியாற்றும் சீனியர் அதிகாரிகளை அதிர்ச்சியடைச் செய்துள்ளது. 10 வகுப்பு மட்டுமே போதுமான ” டி ” பிரிவு பணிகளுக்கு ஐஐடி-யில் எம்.டெக் படித்தவர் சேர்ந்து இருப்பது அவர்களுக்கு அதிர்ச்சியைச் அளித்து உள்ளது. அவரின் கல்வித் தகுதிக்கு உயர் பணிகளுக்கு செல்லலாம் எனக் கூறியிருந்தனர்.
இதற்கு ஷர்வன் குமார் கூறிய பதில் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. ” அரசு பணியில் தான் ஜாப் செக்யூரிட்டி இருக்கும். தனியார் வேலைகளில் அது எல்லாம் இல்லை. சிறு வயதில் இருந்தே அரசு பணியில் சேர வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது ” எனக் கூறியுள்ளார்.
ஐடி நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஷர்வன் உடன் படித்த நண்பர்கள் தங்கள் துறையில் பணியாற்ற அழைத்தும் அதனை ஏற்க மறுத்து உள்ளார். அரசு பணியில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு பணிகள் தொடர்பான தேர்வுகளை எழுதியுள்ளார். சமீபத்தில் ரயில்வேதுறையின் பணிக்கான ஆர்.ஆர்.பியில் குரூப்-டி பிரிவுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று ட்ராக்மேன் பணியில் சேர்ந்துள்ளார்.
தற்பொழுது ட்ராக்மேன் பணியில் சேர்ந்து இருந்தாலும் எதிர்காலத்தில் அதிகாரிக்கான பதவிக்கு நிச்சயம் செல்வேன் என ஷர்வன் குமார் தெரிவித்து இருக்கிறார். ஷர்வன் அரசு பணியில் வேலை உத்திரவாதம் இருப்பதன் காரணமாக ட்ராக்மேன் பணியில் சேர்ந்துள்ளார். அது அவரின் விருப்பம் சார்ந்தது. எனினும், சிலர் அதனை தவறாக புரிந்து கொண்டு மீம் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.
கூடுதல் தகவல்கள் :
பணி உத்திரவாதம் மட்டுமின்றி வேலையில் மன நிறைவின்மை காரணமாக கான்பூர் ஐஐடி-யில் படித்த மாணவர்கள் ஆண்டிற்கு 1 கோடி ரூபாய் அளிக்கக்கூடிய கார்ப்பரேட் நிறுவனத்தின் வேலையை வேண்டாம் எனக் கூறி பிற நிறுவனங்களுக்கு, உயர் கல்வி படிக்க சென்ற சம்பவங்களும் இங்கு நிகழ்ந்துள்ளன.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.