பெரியார் படத்திற்கு இசையமைக்க மறுத்ததாக சர்ச்சை! 2006-லேயே மறுத்த இளையராஜா !

பரவிய செய்தி
எத்தனை கோடிகள் கொடுத்தாலும் பெரியார் படத்திற்கு மட்டும் இசையமைக்க மாட்டேன் என கூறிய இசை மேதைக்கு 78 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
மதிப்பீடு
விளக்கம்
இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள் அன்று வாழ்த்து மழை பெய்து கொண்டிருக்கையில், தமிழக பாஜகவைச் சேர்ந்த காயத்திரி ரகுராம் தன் ட்விட்டர் பக்கத்தில் ” எத்தனை கோடிகள் கொடுத்தாலும் பெரியார் படத்திற்கு மட்டும் இசையமைக்க மாட்டேன் என கூறிய இசை மேதைக்கு 78 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் ” என பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
உண்மை என்ன ?
ஞான ராஜசேகரன் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் 2007-ல் வெளியாகியது ” பெரியார் ” திரைப்படம். ஞான ராஜசேகரன் அவர்களின் முந்தைய படமான பாரதி வரை இளையராஜாவே இசையமைத்து இருந்தார். ஆனால், பெரியார் படத்திற்கு இசையமைக்காதது கவனத்தை ஈர்த்தது. மேலும், இளையராஜா ஆத்திகவாதி என்பதால் பெரியார் திரைப்படத்திற்கு இசையமைக்க மறுத்து விட்டதாக 2006-ம் ஆண்டிலேயே பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அந்நிலையில், இசைஞானி இளையராஜா அவர்கள் அளித்த சிறப்பு பேட்டி ஜூனியர் விகடனில் கட்டுரையாக 2006-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி வெளியாகி இருந்தது.
அதில், ” நான் அந்த படத்துக்கு இசையமைக்காதது குறித்து ஆளாளுக்கு ஒரு காரணத்தை அவர்களாவே சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். உண்மைக் காரணம் என்ன, நடந்தது என்ன என்பதை இப்போதுதான் உங்களிடம் நான் முதன்முறையாகச் சொல்லப் போகிறேன்… (உதாரணத்தை கூறிய பிறகு) பெரியார் படத்திற்கு இசையமைக்க என்னை யாரும் முறையாக அழைக்கவும் இல்லை.. எந்த ஒப்பந்தமும் செய்யவுமில்லை..
(சுபாஷ் சந்திர போஸ் படம் பற்றி பேசிய பிறகு) அவ்வளவுதான் ! அதன் பிறகு சில வருடங்கள் கழித்து அவர் பெரியார் படம் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் அதற்கு வேறு ஒரு இசையமைப்பாளரை ஏற்பாடு செய்திருப்பதாகவும் நண்பர்கள் மூலம் அறிந்தேன். ஆனால், இப்போதோ, பெரியார் படத்துக்கு நான் இசையமைக்க மறுத்து விட்டேன் என்று வீணாக செய்தி கொடுத்து கொண்டிருக்கிறார் ” என இடம்பெற்று இருக்கிறது.
” நான் காங்கிரஸ்காரனாக இல்லாவிட்டாலும் “காமராஜ் ” படத்துக்கு இசைத் தொண்டு செய்தேன். நான் ஒரு திராவிடக் கழகத்தவன் இல்லையென்றாலும், சுயமரியாதை உள்ள தூய்மையோடு பெரியாருக்கு சேவை செய்ய தயங்கி இருக்க மாட்டேன் ” என்றும் கூறி இருக்கிறார்.
இயக்குனர் ஞான ராஜசேகரன் தான், பெரியார் படத்திற்கு இசையமைக்க மறுத்து விட்டதாக கூறி வருவதாக இளையராஜா குறிப்பிட்டு இருந்தார். இளையராஜாவின் இந்த கருத்து குறித்து இயக்குனர் ஞான ராஜசேகரன் அவர்கள், இளையராஜா கூறியதாக தெரிவித்த கருத்தே தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது.
பெரியார் கொள்கைகளை அடிப்படையாக வைத்தே திரைப்படங்களை எடுத்து வந்த இயக்குனர் வேலு பிரபாகரன் 2006 டிசம்பரில் கீற்று எனும் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், ” கடவுள் திரைப்படம் தான், 75 வருட சினிமா வரலாற்றில் கடவுள் மறுப்புக் கொள்கையை வெகு நேரம் பிரச்சாரம் செய்த ஒரே படம். அப்படிப்பட்ட படத்திற்கே இளையராஜா இசையமைத்தார். அதனால், அவர் பெரியார் படத்தில் கடவுள் மறுப்பு கொள்கை இருப்பதால் இசையமைக்க மறுத்தார் என்று சொல்வது சரியானதல்ல ” எனக் கூறியதாக இடம்பெற்று இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், எத்தனை கோடிகள் கொடுத்தாலும் பெரியார் படத்திற்கு மட்டும் இசையமைக்க மாட்டேன் என இளையராஜா கூறியதாக பரப்பப்படும் தகவல் தவறானது. அதற்கு 2006ம் ஆண்டிலேயே இளையராஜா மறுத்து விளக்கம் அளித்து இருக்கிறார் என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.