‘இடஒதுக்கீட்டில் நான் வரவில்லை’ என இளையராஜா கூறியதாக பொய் செய்தி வெளியிட்ட குமுதம் !

பரவிய செய்தி
இடஒதுக்கிடுல நான் வரலை. என்னோட திறமையில் நம்பிக்கை வச்சி தான் வந்தேன் – இளையராஜா !
மதிப்பீடு
விளக்கம்
இளையராஜா அவர்கள் சட்டமேதை அம்பேத்கர் மற்றும் பிரதமர் மோடியை ஒப்பிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பல்வேறு எதிர்ப்பையும், கண்டனத்தையும் பெற்றது. அதேநேரத்தில், பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தரப்பில் அவருக்கு ஆதரவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இடஒதுக்கீட்டில் நான் வரவில்லை, திறமையில் நம்பிக்கை வைத்ததால் தான் வந்தேன் என இளையராஜா கூறியதாக குமுதம் முகநூல் பக்கத்தில் வெளியான நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இப்படி சொன்னா எரியத்தானே செய்யும் த்ராவிட சாக்கடைகளுக்கு…
இட ஒதுக்கீட்டில் வாழ்வது பிச்சை எடுத்து வாழ்வதை விட கீழானது னு ஒரே அடில அடிச்சுட்டார் ராஜா …
அன்றும் இன்றும் என்றும் ராஜாதி ராஜன் இந்த இளையராஜா… pic.twitter.com/RFHQ7SErHx— Namo Balu (@NamoBalu4) April 24, 2022
இடஒதுக்கீடு பற்றி தெரியாமலும், இசையில் எதற்கு இடஒதுக்கீடு என இளையராஜாவிற்கு எதிராக கண்டனங்கள் உடன் குமுதம் வெளியிட்ட இந்த நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
இளையராஜா பற்றிய பரபரப்பு ஓய்வதற்குள் அவரது பழைய வீடியோக்கள் பலவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அவற்றில் , ” நான் 1968-ல் சென்னைக்கு வந்தேன். இந்த ஹார்மோனியம் பெட்டியை மட்டும் நம்பி, ஏவிஎம் ஸ்டுடியோவை நம்பல, ரஜினிகாந்தை நம்பல, கமலஹாசனை நம்பல, யாரையும் நம்பல.. எல்லாரும் என்கிட்ட வந்தாங்க ” எனப் பேசிய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. இதில், அவர் இடஒதுக்கீடு பற்றி குறிப்பிடவில்லை.
இந்த வீடியோ கடந்த 2018-ல் எம்ஜிஆர் பெண்கள் கல்லூரியில் அவருடைய 75-வது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசியது.
சமீபத்தில் இளையராஜா இடஒதுக்கீட்டால் நான் வரவில்லை என்றோ, இடஒதுக்கீடு பற்றி பேசியதாக எந்த செய்தியும் வெளியாகவில்லை. இந்த செய்தியை வெளியிட்ட குமுதம், தங்கள் சமூக வலைதள பக்கங்களில் இருந்து அந்த செய்தியை நீக்கி இருக்கிறது.
மேலும் படிக்க : தலித் மக்களுக்கான சலுகை குறித்து இளையராஜா விமர்சித்ததாகப் பரவும் வதந்தி !
இதற்கு முன்பாக, இளையராஜா தலித் மக்களுக்கான இடஒதுக்கீடு குறித்து விமர்சித்து இருந்தததாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.
முடிவு :
நம் தேடலில், இடஒதுக்கிடுல நான் வரலை. என்னோட திறமையில் நம்பிக்கை வச்சி தான் வந்தேன் என இளையராஜா கூறியதாக குமுதம் பொய் செய்தி வெளியிட்டு நீக்கி இருக்கிறது என அறிய முடிகிறது.