எனக்கு மட்டும் தான் இசை வரும் என இளையராஜா கூறினாரா ?

பரவிய செய்தி
” இன்று இருப்பவர்கள் இசையமைப்பாளர்களே கிடையாது. எனக்கு மட்டுமே இசை வரும். இதை பெருமைக்காக சொல்லவில்லை ” – இளையராஜா.
மதிப்பீடு
சுருக்கம்
இளையராஜா பேசிய முழு வீடியோவில் இரு வாக்கியத்தை எடுத்து ஒன்றாக செய்தி வெளியிட்டதால் தவறான அர்த்தம் வெளியாகி இருக்கிறது.
விளக்கம்
இசையமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட இளையராஜா அவர்களின் முன்னிலையில் மாணவிகள் பாடல்கள் பாடியுள்ளனர்.
பின், மாணவிகள் மத்தியில் இசைத்துக் கொண்டே பாடல்கள் பாடியும் பேசி வந்தார் இளையராஜா. தன் முதல் படமான அன்னக்கிளிக்கு பாடல்கள் இசைத்த அனுபவம் குறித்தும் பகிர்ந்து கொண்டார். மேலும், கிழக்கே போகும் ரயில் படத்தில் இருந்து ” மாஞ்சோலைக் கிளிதானோ ” பாடலை பாடினார். அதைப் பற்றி பேசும் போது,
” எந்த பாடல்களும் படத்தின் சூழலை அளிக்காது. ஆனால், என் பாடல்கள் படத்தின் சூழலை தரும். அது எனக்கு மட்டுமே வரும். வேற யாருக்கும் வராது. வேறு யாருடைய இசையிலாவது இதுபோன்ற பாடல் வந்துள்ளதா” என்றேக் கூறினார்.
என்னைப் பொறுத்தவரையில் மெட்டை சிதைக்காத பாடல் வரிகள் இயற்றுவதில் உலக அளவில் முதல் இடத்தில் இருப்பது கவியரசு கண்ணதாசன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
” இப்பொழுது எல்லாம் மியூசிக் கம்போசர்களே இல்லை என்பதை நியாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஏன் என்றால் வரும் போது சிடி உடன் வருகிறார்கள். அங்கும் இங்கும் பாடல்களை எடுத்து இயக்குனருக்கு போட்டுக் காண்பித்து இது மாதிரி இருக்கலாமா என கேட்டு விட்டு இறுதியில் அதையே கொடுத்து விடுகிறார்கள். முன்பு எல்லாம் நாங்கள் இயக்குனருக்கு முன்பாக இசையமைக்க வேண்டும் ” என கூறியுள்ளார்.
இதையே அவர் கூறியவை. ஆனால், வெவ்வேறு இடங்களில் கூறியதை ஒன்றாக இணைத்து செய்தி வெளியிட்டு உள்ளனர். படத்தின் சூழலுக்கு ஏற்ற பாடல்கள் மற்றும் இன்றைய இசை இயக்குனர்கள் சுயமாக இசையமைப்பதில்லை எனக் குற்றம்சாற்றியுள்ளார் இளையராஜா.