இளையராஜாவுடன் சுந்தர் பிச்சை இருப்பதாக பரப்பப்படும் தவறான புகைப்படம் !

பரவிய செய்தி
சுந்தர் பிச்சை Vs இளையராஜா. சிகரம் தொட்ட இரு துருவங்கள். எவ்வளவு உயரம் சிறகை விரித்து பறந்தாலும், அவர்களின் எளிமைதான் அவர்களின் பலம்.
மதிப்பீடு
விளக்கம்
கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) உள்ள சுந்தர் பிச்சை, இசைஞானி இளையராஜாவுடன் எளிமையாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டார் எனப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
சுந்தர் பிச்சை Vs இளையராஜா.
சிகரம் தொட்ட இரு துருவங்கள். எவ்வளவு உயரம் சிறகை விரித்து பறந்தாலும், அவர்களின் எளிமைதான் அவர்களின் பலம்….. 🙏🙏🙏🙏 pic.twitter.com/giOhqQRZOU— 🚩 Ram Thevar 🚩 ( ராம் தேவர் ) (@RamThevar9) November 25, 2022
அப்பதிவுகளில் சிகரம் தொட்ட இரு துருவங்கள். எவ்வளவு உயரம் சிறகை விரித்துப் பறந்தாலும், அவர்களின் எளிமைதான் அவர்களுக்கு பலம் எனக் குறிப்பிட்டு பாஜக கட்சியினை சேர்ந்த பலர் பதிவிட்டு வருகின்றனர்.
அதேபோல, இளையராஜா அருகில் கீழே அமர்ந்து இருப்பவர் கூகுள் நிறுவனத் தலைவர் சுந்தர் பிச்சை. அவர் ஒரு பிராமணர். இன்றைய பிராமணர்கள் இப்படிதான் எளிமையாக உள்ளனர். ஆனால், திராவிட கழகங்கள் பிராமண துவேச பிரச்சாரங்கள் இனி மக்களிடம் எடுபடாது என பாஜகவைச் சேர்ந்த சேதுராமன் என்பவர் பதிவிட்டுள்ளார்.
உண்மை என்ன ?
தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) 2015ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். அவர் தமிழர் என்றும், இந்தியர் என்றும் பலரும் பெருமை கொள்வதுண்டு. இசைஞானி இளையராஜா இசையில் மாஸ்ட்ரோவாக திகழ்பவர்.
இந்நிலையில், இளையராஜா மற்றும் சுந்தர் பிச்சை இருவரும் எடுத்துக் கொண்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று பரப்பப்படும் வருகிறது. அப்புகைப்படம் குறித்து இணையத்தில் தேடினோம்.
அப்புகைப்படம் 2017, ஜூன் 2ம் தேதி இளையராஜாவின் பிறந்தநாள் நிகழ்வின்போது எடுக்கப்பட்டுள்ளது. சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற அவ்விழாவில், ரசிகர்கள் இளையராஜாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
அந்நிகழ்வின் ஒரு பகுதியினை “Fans Meet and Greet Maestro Ilayaraja on his Birthday” என்ற தலைப்பில் ‘nba 24 x 7’ என்ற youtube பக்கம் பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில் இளையராஜாவிற்குப் பின்னால் உள்ள திரையை, சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படத்தின் பின்னால் உள்ள திரையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இரண்டும் ஒரே நிகழ்வு என்பதை அறிய முடிகிறது.
மேலும், சுந்தர் பிச்சை, இளையராஜா இருவரும் முக்கிய நபர்கள். அவர்கள் சந்தித்திருந்தால் செய்தியாகவோ, புகைப்படமாகவோ வெளி வந்திருக்கும். எனவே, அவர்கள் சந்தித்தார்களா என இணையத்தில் தேடினோம். அப்படி எந்தவொரு செய்தியோ, புகைப்படமோ கிடைக்கவில்லை.
முடிவு :
நம் தேடலில், இளையராஜாவும் சுந்தர் பிச்சையும் எடுத்துக் கொண்ட புகைப்படம் என சமூக வலைத்தளத்தில் பரவும் புகைப்படத்தில் இருப்பது சுந்தர் பிச்சை கிடையாது என்பதை அறிய முடிகிறது.