குட்டிகளுக்காக சிறுத்தையிடம் சிக்கிய மானின் கதை.!

பரவிய செய்தி
சிறந்த புகைப்படத்திற்கான விருதை பெற்ற இப்படத்தை எடுத்த புகைப்படக் கலைஞர் மன அழுத்ததிற்கு உள்ளாகியுள்ளார். தனது இரு குட்டிகளை சிறுத்தைகளிடம் இருந்து காப்பாற்ற தன்னையே பலியாக கொடுத்த தாய் மான். சிறுத்தைகள் தன்னை கொல்லும் பொழுதும் தன் குட்டிகள் தப்பித்து செல்வதை பார்க்கும் அரிய காட்சி.
மதிப்பீடு
சுருக்கம்
தன்னுடைய புகைப்படத்துடன் தவறான செய்திகளை இணைத்து சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்படுவதாக இப்புகைப்படத்தை எடுத்த Alison Buttigieg தெரிவித்துள்ளார்.
விளக்கம்
சிறுத்தைகளுக்கு நடுவே இரையாக மாட்டிக் கொண்ட மான் ஒன்றின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலம். சிறுத்தைகளுக்கு இரையாகும் நேரத்திலும் ஒரு திசையை நோக்கி பார்க்கும் மானின் செயல் புகைப்பட வரலாற்றில் அரிதான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இப்படங்களும், தாய் மற்றும் குட்டி மான்களின் கதை ஒன்றும் கூறப்படுகிறது.
சிறந்த விருதைப் பெற்றாலும் இப்படத்தை எடுத்ததற்காக புகைப்பட கலைஞர் மிகுந்த மன அழுத்ததிற்கு உள்ளாகியுள்ளார் என்றும் ஒரு செய்தி கூறப்படுகிறது. ஆனால், சிறுத்தை மற்றும் மான் படத்துடன் பரவும் கதையானது முற்றிலும் தவறானது என்று தெரிய வந்துள்ளது. அதை, அப்படத்தை எடுத்த Alison Buttigieg தெளிவுபடுத்தியுள்ளார்.
புகைப்பட கலைஞரான Alison Buttigieg தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “ என் வலிமையான புகைப்படம் பொருத்தமற்ற கதைகளுடன் வைரலாகி வருகிறது. மேலும், இப்படத்தை எடுத்த பிறகு மன அழுத்ததிற்கு உள்ளானதாக கூறுகின்றனர். இந்த புகைப்படம் தவறான கதையுடன் பல ஆயிரம் ஷேர் மற்றும் லைக்குகளை பெற்று பரவி வருகிறது. உண்மையான செய்தியை தெரிந்து கொள்ள இந்த தளத்தில் சென்று பார்க்கவும்” என்று அவரின் இணையப்பக்கத்தின் லிங்கை கொடுத்துள்ளார்.
2013-ம் ஆண்டு செப்டம்பர் கென்யாவின் மாசாய் மரா என்ற பகுதியில் நரஷா என்ற தாய் சிறுத்தை தன் குட்டிகளுக்கு இரையை எவ்வாறு கொல்ல வேண்டும் என்று கற்றுக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது. அந்நேரத்தில் குட்டிகள் மெதுவாகவும், இரையான மானை கொல்வதற்கு பதிலாக விளையாடிக் கொண்டு இருந்துள்ளது. அனைத்து படத்திலும் தாய் சிறுத்தை மானின் கழுத்தை பிடித்து கொள்வதை பார்க்கலாம். இளம் குட்டிகள் இரையின் மீது பாய்வது, குதிப்பது போன்ற திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். ஆனால், குட்டிகளுக்கு மானை எவ்வாறு திறம்பட கையாள்வது என தெரியவில்லை.
சிறுத்தைகள் இரையை சுற்றி சுற்றி வரும் தருணத்தில் புகைப்படங்கள் எடுக்க முடியாமல் போனாலும், அந்நேரத்தில் எடுத்த 6-வது பாடமானது மிக அழகாவும், அரிதாகவும் இருந்துள்ளது. கடைசி நேரத்திலும் சுய பாதுக்காப்பில் இருக்கும் ஆர்வம் மானின் கண்ணில் அப்பட்டமாக இருப்பதை வெளிபடுத்துகிறது. பார்ப்பவர்களுக்கு மான் மீது கருணை இருக்க வேண்டும் என நினைத்தேன். இறுதியாக, தாய் சிறுத்தை மானுக்கு வேதனையில் இருந்து விடுதலை அளித்தது. அதன்பின் குட்டிகள் இரையை மகிழ்ச்சியுடன் உண்டனர்.
சிறுத்தைகளுக்கு நடுவே சிக்கிக் கொண்ட மானிடம் இருந்து வெளிப்பட்ட சுய முயற்சியை பார்த்து வியந்து எடுத்த புகைப்படத்துடன் தவறான கதைகள் சேர்க்கப்பட்டுள்ளன என்பது தெளிவாகி உள்ளது.