இம்ரான் கானின் சர்ச்சை பேச்சு என வெளியிட்ட தவறான செய்தி.

பரவிய செய்தி
இந்தியா ஒரு அடி வைத்தால், பாகிஸ்தான் இரண்டு அடி முன் வைக்கும். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சர்ச்சை கருத்து.
மதிப்பீடு
சுருக்கம்
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், “ நட்புறவை நோக்கி இந்தியா ஒரு அடி முன் வைத்தால், பாகிஸ்தான் இரண்டு அடி முன் வைக்கும் ” என தன் உரையில் கூறியிருந்தார்.
விளக்கம்
பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் பதவி வகிக்கிறார். இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே வலுவான நட்புறவை அமைக்க முடியாத நிலையே தொடர்கிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் சர்ச்சையானக் கருத்தை வெளியிட்டதாக பிரபலத் தமிழ் ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் நிகழ்ச்சி :
நவம்பர் 28-ம் தேதி பஞ்சாப் மாகாணத்தில் கர்டர்பூர் எல்லைப் பகுதியில் அமைய உள்ள நடைபாதையின் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் குரு நானக் கோயிலுக்கு இந்தியாவில் இருந்து வருகைத் தரும் ஆயிரக்கணக்கான சீக்கியர்களின் பயணத்தை எளிதாக்குவதும், விரைவாக்குவதே கர்டர்பூர் எல்லையில் நடைபாதை அமைக்கும் பணியின் நோக்கம்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் இம்ரான்கான், “ நான் ஒரு பிரதமர், எனது கட்சி, பிற அனைத்து கட்சிகளும், ராணுவம் மற்றும் பாகிஸ்தான் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் ஒரே பக்கமாக இருக்கிறோம். நாங்கள் முன்னோக்கி வர நினைக்கிறோம் “ என கூறினார்.
“ நட்புறவை நோக்கி இந்தியா ஒரு அடி முன் வைத்தால், பாகிஸ்தான் இரண்டு அடி முன் வைக்கும் “ என்றும் இம்ரான்கான் தெரிவித்து இருந்தார்.
பாகிஸ்தான் பிரதமர் அனைத்து கட்சிகள், ராணுவம் ஒரே பக்கமாக இருந்து இந்தியாவுடனான உறவுவை சீர்படுத்த விரும்புவதாக கூறியுள்ளார். மேலும், இந்தியா-பாகிஸ்தான் இடையே இருக்கும் ஒரே பிரச்சனை காஷ்மீர் மட்டுமே. எல்லைப் பிரச்சனைக்கான தீர்வை இரு நாட்டுத் தலைவர்களும் சேர்ந்தே எடுக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதியை நிறுவி நட்புறவை கொண்டு வர வேண்டும் என்பதற்காக இந்தியா ஒரு அடி முன் வைத்தால் பாகிஸ்தான் இரண்டு அடி முன் வைக்கும் என்றுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்.
அதனைத் தவறாகப் புரிந்துக் கொண்டு பாகிஸ்தான் பிரதமரின் சர்ச்சைப் பேச்சு என செய்தி வெளியிட்டு உள்ளது பிரபல தமிழ் ஊடகம்.