இம்ரான்கானின் கட் செய்த வீடியோவை நம்பி செய்தி வெளியிட்ட தினமலர் !

பரவிய செய்தி

73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியா வலிமையான நாடாக உள்ளது – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

Facebook link | Archive link | Web archive link 

மதிப்பீடு

விளக்கம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டின் 73-வது சுதந்திர தின நிகழ்ச்சியின் போது, இந்தியா பிரதமர் மோடியின் ஆட்சியில் கடந்த 73 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு மிகுந்த வலிமை மிக்க நாடாக மாறியுள்ளதாக இணையத்தில் வைரலாகும் வீடியோவை குறிப்பிட்டு தினமலர் ஜனவரி 11-ம் தேதி வெளியிட்டு இருந்தது. இதே செய்தியை வின்டிவி, குமுதம் உள்ளிட்ட செய்தி தளத்திலும் வெளியாகி இருக்கிறது.

Advertisement

அதில், ” இந்தியா பிரதமர் மோடியின் ஆட்சியில் 73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வலிமை மிகுந்த நாடாக மாறி உள்ளது. இதனால் பாகிஸ்தான் ராணுவம் அதற்கு இணையாக வலிமையைக் கூட்ட வேண்டிய அவசியம் உள்ளது. பாகிஸ்தான் பிரதமரின் இந்த உரையாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது ” எனக் குறிப்பிட்டு உள்ளனர்.

தினமலரின் செய்தியின் அடிப்படையில் பாஜக கட்சியினரும், அக்கட்சியின் ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் இம்ரான்கான் பேச்சு குறித்து பதிவிட்டு வருகின்றனர். மேலும், சிலர் இம்ரான் கான் பேசும் வீடியோ காட்சியையும் பகிர்ந்து வருகின்றனர். இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.

Facebook link | Archive link 

உண்மை என்ன ? 

Advertisement

வைரலாகும் இம்ரான் கானின் 19 நொடிகள் கொண்ட வீடியோவில் 92 நியூஸ் எனும் லோகோ இருப்பதை காண முடிந்தது. அதை வைத்து அந்த சேனல் குறித்து தேடுகையில், 2020 டிசம்பர் 26-ம் தேதி ” 92 News HDஉடைய  யூடியூப் சேனலில் ” I Will Not Let Opposition Target our Army | PM Imran Khan Aggressive Speech Today ” எனும் தலைப்பில் வெளியான 32 நிமிட முழு வீடியோவும் கிடைத்தது.

Youtube video | Archive link 

வீடியோவில் 5.55வது நிமிடத்தில் இம்ரான் கான், ” பாகிஸ்தான் ராணுவத்திற்கு ஒரு வலுவான ராணுவம் தேவைப்படுகிறது. ஏன் என்றால், நம்முடைய அண்டை நாடு.. 73 ஆண்டுகளில் இன்று இருப்பது போல் ஒரு அரசாங்கம் இல்லை.. சர்வாதிகாரி, இனவெறி, முஸ்லீம் எதிர்ப்பு, இஸ்லாமிய எதிர்ப்பு, பாகிஸ்தான் எதிர்ப்பு அரசாங்கம். இதுபோன்ற அரசாங்கம் ஒருபோதும் உருவாக்கப்படவில்லை.. அவர்கள் காஷ்மீரிகளுக்கு என்ன செய்கிறார்கள் என்பதை பாருங்கள் ” எனப் பேசி இருக்கிறார்.

மேலும், டிசம்பர் 26-ம் தேதி வெளியான Dawn செய்தியில், ” பாகிஸ்தான் பிரதமர் நாட்டின் சக்வாலில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் இந்திய அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி குறித்து கடுமையாக விமர்சித்து உரையாற்றியதாக மேற்காணும் வீடியோவில் பேசியதைக் குறிப்பிட்டு உள்ளனர்.

மேலும் படிக்க : பாலக்கோட் தாக்குதலில் 300 பேர் பலி என பாகிஸ்தான் தூதர் ஒப்புக் கொண்டதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

இம்ரான் கான் இந்திய அரசாங்கம் குறித்து பேசிய முழு கருத்தையும் பதிவிடாமல், பாகிஸ்தானிற்கு வலிமையான ராணுவம் தேவை மற்றும் 73 ஆண்டுகளில் இல்லாத அரசாங்கம் இன்று இந்தியாவில் அமைந்து உள்ளதாக பேசிய காட்சியை மட்டும் கட் செய்து பரப்பி வருகிறார்கள். ஆனால், அதற்கு பிறகு தற்போதைய இந்திய அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தே இருக்கிறார்.
முடிவு : 
நம் தேடலில், 73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியா வலிமையான நாடாக உள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியதாக வெளியாகும் செய்தியும், பரப்பப்படும் வீடியோவும் தவறானது என்றும், இம்ரான் கான் பேச்சில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் கட் செய்து வைரலாக்கி இருக்கிறார்கள் என்றும் அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button