Fact Check

இன்கம்மிங் அழைப்பில் ஸ்மார்ட்போன் கதிர்வீச்சால் ஸ்டீல் வூல் எரிகிறதா ?

பரவிய செய்தி

ஒவ்வொரு ஸ்மார்ட் போனும் கனமான கதிர்வீச்சை உருவாக்கும். எனவே படுக்கை விரிப்பவில் உங்களின் தலைக்கு அருகே, சட்ட பையில் வைக்க வேண்டாம். இது அனைவருக்கும் நல்ல விழிப்புணர்வு. Every Smart phone has to produce heavy radiation. Don’t keep it near head on our Bed Shirt pocket. This is good Awareness to everyone.

Facebook link | archived link 

மதிப்பீடு

விளக்கம்

Mksubhramanian Mksubhramanian என்ற முகநூல் பக்கத்தில் ஸ்மார்ட் போன்கள் கனமான கதிர்வீச்சை வெளிப்படுத்துவதால் அவற்றை உங்களின் படுக்கையில் தலைக்கு அருகே மற்றும் சட்டை பாக்கெட்களில் வைக்க வேண்டாம் என எச்சரிக்கை செய்து வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று வைரலாகி வருகிறது.

Advertisement

இந்த வீடியோவில், ஸ்டீல் வூல் (Steel wool) என அழைக்கப்படும் பொருளை வட்ட வடிவாக சுருட்டி வைத்து அதன் நடுவே செல்போன் வைக்கப்படுகிறது. பின்னர் அந்த செல்போன் எண்ணிற்கு அழைக்கும் பொழுது, அதைச் சுற்றியுள்ள ஸ்டீல் வூல்-லில் நெருப்பு பொறி எரிவதை காண முடிகிறது.

இந்த வீடியோ மக்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு சமூக வலைதளங்களில் வைரலாகியும் வருகிறது. ஆகையால், இதன் உண்மைத்தன்மை குறித்து ஃபாலோயர்கள் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

செல்போனில் இருந்து கதிர்வீச்சு வெளியிடப்படுகிறது என்பதை பலரும் அறிந்து இருப்போம். எனினும், அதன் அளவு வரையறுக்கப்பட்ட பாதுகாப்பான அளவிற்குள் இருக்கிறதா என சந்தேகம் இருந்தாலும், ஒரு இன்கம்மிங் அழைப்பிற்கு ஸ்டீல் வூல் எரியும் அளவிற்கு கதிர்வீச்சு இருக்குமா என்பதை யோசிக்க வேண்டும்.

Youtube link | archived link 

செல்போன் அழைப்பால் ஸ்டீல் வூல் எரியும் வீடியோ பதிவு ஆனது ஆங்கிலத்தில் வெளியாகி பிறகு தமிழில் பதிவிட்டு இருக்கிறார்கள். 2019 டிசம்பர் மாதம் Viralvideolab சேனலில் ” Mobile Phone vs Steel Wool I How Your iPhone Will Damage Your Brain ” என்ற தலைப்பில் செல்போன் வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில், இந்த வீடியோவை நீக்குவதற்கு முன்பாக பகிரவும். இன்கம்மிங் அழைப்பால் ஸ்டீல் வூல் எரிவதற்கு பின்னால் இருக்கும் காரணம் தெரியவில்லை. நீங்கள் இயற்பியல் அறிவில் சிறந்தவராக இருந்தால், கமெண்ட்டில் விளக்கத்தை பதிவிடவும் எனக் குறிப்பிட்டு உள்ளார்.

அந்த வீடியோவில், அவர்கள் பயன்படுத்தி இருப்பது ஐபோன். செல்போனை பவர் சேவ் முறையில் வைத்து, கிரேட் 12 ஸ்டீல் வூல் பொருளை பயன்படுத்தி உள்ளதாக வீடியோ குறிப்பில் இடம்பெற்றுள்ளது.

இருப்பினும், வீடியோவில் செல்போன் அழைப்பால் ஸ்டீல் வூல் எரியவில்லை என்பதே உண்மை. இந்த வீடியோவை டிஜிட்டல் எஃபெக்ட் மூலம் உருவாக்கி உள்ளார்கள்.  வீடியோ எடிட்டிங் தொழில்நுட்ப முறையின் மூலம் உருவாக்கப்பட்ட இந்த வீடியோவில் செல்போன் ஒலிக்க ஆரம்பித்த உடனேயே ஸ்டீல் வூல் எரியத் துவங்கி விடுகிறது.

Youtube link | archived link

வைரல் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பதற்கு மற்றொரு காரணம், செல்போனை சுற்றியுள்ள ஸ்டீல் வூல் முழுவதும் ஒரே நேரத்தில் நெருப்பு பிடித்து உள்ளது. ஏனெனில், மேற்காணும் வீடியோவில் ஸ்டீல் வூல்-க்கு நெருப்பை வைக்கும் பொழுது ஒரு பகுதியில் இருந்து மற்ற பகுதிகளுக்கு பரவுகிறது. இதற்கு நேர்மாறாக வைரல் வீடியோ இருக்கிறது.

Youtube link | archived link 

இவற்றிற்கெல்லாம் மேலாக, Snopes இணையதளம் இந்த சோதனையை முயற்சித்து உள்ளது. வைரல் வீடியோவில் காண்பிக்கப்பட்டு போன்றே ஸ்டீல் வூல் பொருளை சுருட்டி வைத்து அதன் நடுவே செல்போனை வைத்துள்ளனர். இறுதியாக, அந்த செல்போன் எண்ணிற்கு அழைத்தால் ஸ்டீல் வூல் எரியாமல் இருப்பதை பார்க்க முடிகிறது.

முடிவு :

நமக்கு கிடைத்த ஆதாரங்களில் இருந்து, இன்கம்மிங் அழைப்பின் பொழுது செல்போன் கதிர்வீச்சால் ஸ்டீல் வூல் எரிவதாக வைரல் செய்யப்படும் வீடியோ டிஜிட்டல் எஃபெக்ட் செய்த வீடியோ என அறிந்து கொள்ள முடிகிறது.

தவறான வீடியோக்களை பகிர்வதால் மக்கள் மத்தியில் அச்சம் உண்டாக்கக்கூடும் என்பதை அறிந்தும், பொறுப்புணர்ந்து தவறான தகவலை பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம். மாறாக, உண்மையான தகவலை பகிரவும்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button