இந்தியா, பாக் ராணுவத்தினர் தீபாவளி இனிப்பை பகிரும் வீடியோவா?| உண்மை என்ன?

பரவிய செய்தி
பாகிஸ்தான் துருப்புக்கள் தீபாவளி பரிசுகளை இந்திய ராணுவத்துடன் பரிமாறிக்கொள்கின்றன. 90% ஊடகங்கள் இதைக் காட்டவில்லை, ஊடகங்கள் வெறுக்கத்தக்க செய்திகளை மட்டுமே இதயத்தில் பரப்புகின்றன.
மதிப்பீடு
விளக்கம்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே மோதல் நிலை இருந்தாலும் சிறப்பு பண்டிகைகளின் போது பரிசுகள், வாழ்த்துக்களை பறிக்கொள்வது வழக்கம். ஆனால், இவ்வருடத்தில்(2019) இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழ்நிலை மேலோங்கியதாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில், 2019 தீபாவளி பண்டிகை நாளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டின் ராணுவ அதிகாரிகள் தீபாவளி பரிசுகளை பறிமாறிக் கொள்வதாகவும், 90 சதவீத ஊடகங்கள் இதனை வெளியிடவில்லை என இரு நாட்டு ராணுவ வீரர்களும் பரிசுகளை பரிமாறிக் கொள்ளும் வீடியோ முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்திய அளவில் வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டின் ராணுவத்தினர் தீபாவளி இனிப்புகளை பகிர்ந்து கொண்ட நிகழ்வை ஊடகங்கள் வெளியிடவில்லை எனக் கூறும் பதிவுகளின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்க்க தீர்மானித்தோம் .
உண்மை என்ன ?
2019-ல் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே தீபாவளி இனிப்புகள் , பரிசுகள் பகிர்ந்து கொண்டதாக எந்தவொரு செய்திகளும் வெளியாகவில்லை. மாறாக, 2019 ஆகஸ்ட் மாதம் ஈகைப் பெருநாளின் போதும் கூட இரு நாடுகளின் ராணுவத்திற்கு இடையே எல்லையில் இனிப்புகள் பகிர்ந்து கொள்ளப்படவில்லை என்ற செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இதையடுத்து, வைரலாகும் வீடியோ குறித்து ஆராய்ந்து பார்த்தோம். அதில், 2015-ம் ஆண்டில் ஜனவரி 26-ம் தேதி இந்திய குடியரசுத் தினத்தன்று ஸ்ரீநகர்-முசாபராபாத் சாலையில் உள்ள உரி(uri) செக்டரில் உள்ள கமன் போஸ்டில் ராணுவத்தின் 12-வது காலாட்படை படையணியின் ஒரு பிரிவு பாகிஸ்தான் நாட்டின் ராணுவத்துடன் இனிப்புகளை பரிமாறிக் கொண்டதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
Kaman Setu, Uri: Sweets exchange ceremony between Indian & Pak Army on R Day https://t.co/COZ8FpjGfm
— ANI (@ANI) January 26, 2015
ANI Twitter post | archived link
சமீபத்தில் வைரலாகும் வீடியோவை நியூஸ் எஜென்ஜி ANI தனது ட்விட்டர் பக்கத்தில் 2015-ம் ஆண்டில் பதிவிட்டு இருக்கிறது. மேலும், PTI வெளியிட்ட அறிக்கையின் படி, இந்த தீபாவளியின் போது ஜம்மு காஷ்மீர் சர்வதேச எல்லையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டின் ராணுவத்திற்கு இடையே இனிப்புகள் பரிமாறிக் கொள்ளவில்லை என அக்டோபர் 27-ம் தேதி வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம்முடைய தேடலில் இருந்து , 2019 தீபாவளி பண்டிகையின் போது இந்தியா, பாகிஸ்தான் இடையே இனிப்புகள், பரிசுகள் பகிர்ந்து கொண்டதாகவும், ஊடகங்கள் அதை வெளியிடவில்லை என பரவி வரும் வீடியோ 4 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான வீடியோ.
2015-ல் இந்திய குடியரசுத் தினத்திற்கு இனிப்புகள் பகிர்ந்து கொண்டதை 2019 தீபாவளிக்கு இனிப்புகளை பகிர்ந்து கொண்டதாக தவறான செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர் என்பதை அறிந்து கொண்டு இருப்பீர்கள். தவறான செய்திகளை பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.