இந்தியாவுடனான தோல்வியால் பாகிஸ்தான் ரசிகர் டிவியை உடைப்பதாகப் பரவும் மெக்சிகோவின் பழைய வீடியோ !

பரவிய செய்தி
எதிர்பார்த்தது போலவே பாகிஸ்தானில் டிவி உடைக்கும் விழா தொடங்கியுள்ளது…
மதிப்பீடு
விளக்கம்
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023க்கான போட்டிகள் பத்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 14ம் தேதி) இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போட்டியில் இந்தியா மிகச் சிறப்பாக விளையாடி 30.3 ஓவரில் 192 ரன்கள் அடித்து (இலக்கு 191) வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் ஒருவர் தனது தொலைக்காட்சியை உடைத்ததாக வீடியோ ஒன்றினை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
As expected, The TV breaking ceremony has started in Pakistan 😂 #INDvsPAKpic.twitter.com/a9bnGRgxRf
— R A T N I S H (@LoyalSachinFan) October 14, 2023
Tv sales going to increase in Pakistan
pic.twitter.com/YngnduChzD— Iswarya Mohan (@IswaryaMohan7) October 14, 2023
உண்மை என்ன ?
பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் தொலைக்காட்சியை உடைத்ததாகப் பரவும் வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு தேடியதில், அது 2022 டிசம்பர் மாதம் மெக்சிகோவில் நடந்தது என்பதை அறிய முடிந்தது.
இந்த வீடியோவில் உள்ள படங்களைப் பதிவிட்டு ‘Daily Mail’ என்னும் தளத்தில் 2022, டிசம்பர் 1ம் தேதி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், மெக்ஸிகோ உலகக் கோப்பை போட்டியிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து மெக்சிகன் ரசிகர் ஒருவர் தனது தொலைக்காட்சியைக் கத்தியால் குத்தி உடைத்தார் என்றுள்ளது. மெக்சிகோ மற்றும் சவூதி அரேபியா அணிகளுக்கு இடையேயான போட்டியில் மெக்சிகோ வெற்றி பெற்றாலும் கோல் வித்தியாசத்தில் தொடரிலிருந்து வெளியேறியது.
இதே வீடியோவினை ‘ஹிந்துஸ்தான் மிரர்’ என்னும் யூடியூப் பக்கத்தில் 2022, டிசம்பர் 2ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அதிலும் ‘மெக்சிகோ ரசிகர் கத்தியால் தொலைக்காட்சியை உடைத்தார்’ என்றுதான் உள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 1978ம் ஆண்டுக்குப் பிறகு குரூப் ஸ்டேஜில் மெக்சிகோ வெளியேறியது இதுவே முதல் முறை. இதனை ஏற்க முடியாமல் மெக்சிகன் ரசிகர் ஒருவர் தனது தொலைக்காட்சியை உடைத்துள்ளார் என்று வீடியோ காட்சிகள் உடன் ‘The Sun’ இணையதளத்தில் வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த வீடியோவினை தற்போது இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியுடன் தொடர்புப்படுத்தி தவறாகப் பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க : இந்தியாவின் வெற்றியை இஸ்ரேலில் வாழும் நமது சகோதரர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என முகமது சிராஜ் கூறியதாகப் பரவும் போலி ட்வீட் !
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து பல்வேறு போலி செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அவை பற்றிய உண்மைகளை யூடர்னில் கட்டுரையாக வெளியிட்டுள்ளோம்.
மேலும் படிக்க : லுலு மாலில் இந்தியக் கொடியைவிடப் பாகிஸ்தான் கொடி பெரியதாகவும் உயரமாகவும் வைக்கப்பட்டதாகப் பரவும் வதந்தி !
முடிவு :
நம் தேடலில், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்ததை ஏற்க முடியாத பாகிஸ்தானைச் சேர்ந்த ரசிகர் தனது தொலைக்காட்சியை உடைத்ததாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. அது 2022ம் ஆண்டு கால்பந்தாட்ட உலகக்கோப்பை போட்டியிலிருந்து மெக்சிகோ வெளியேறியபோது அந்நாட்டு ரசிகர் செய்த செயல் என்பதை அறிய முடிகிறது.