செங்கோட்டையில் சுதந்திர தின விழாவில் பாதுகாப்புப்படை வீராங்கனை எனப் பரவும் 2019ல் எடுத்த படம் !

பரவிய செய்தி
டெல்லி செங்கோட்டையில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது பாதுகாப்பு பணியில் வீரமங்கை. ஜெய் ஹிந்த்!
மதிப்பீடு
விளக்கம்
இந்திய சுதந்திர தினத்தின் 77வது ஆண்டு விழா நாடு முழுவதும் (ஆகஸ்ட்,15) கொண்டாடப்பட்டது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றிய நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர்கள், பிரபலங்கள் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.
டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது பாதுகாப்பு பணியில் வீரமங்கை.
ஜெய் ஹிந்த்!பொது விழிப்புணர்வுக்காக தகவல்: லோகாயக்தா கவுன்சில்-தமிழ்நாடு @narendramodi pic.twitter.com/EWltSSXYsL
— LOKAYUKTA COUNCIL Regd.By Govt (@LokayuktaC) August 16, 2023
இந்நிலையில், டெல்லி செங்கோட்டையில் பாதுகாப்புப் பணியிலிருந்த வீரமங்கை எனக் கூறி பாதுகாப்புப்படை வீராங்கனை ஒருவர் துப்பாக்கியுடன் நிற்கும் புகைப்படம் ஒன்றினை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
பரவக் கூடிய பாதுகாப்புப் படை பெண்ணின் புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடியதில் அது 2019ம் ஆண்டு எடுக்கப்பட்ட படம் என்பதை அறிய முடிந்தது.
அப்படத்தினை 2020ம் ஆண்டு நீரஜ் என்ற பத்திரிகையாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், டெல்லி போலீஸ் ஸ்வாட் கமாண்டோ செங்கோட்டைப் பாதுகாப்பில் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கமண்டில் ‘2019 படம், முழு சீருடை ஒத்திகை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
@DelhiPolice SWAT woman commando in security of Red Fort, dont miss the gun in her hands#IndiaIndependenceDay pic.twitter.com/JZ24YIskcr
— Neeraj Rajput (@neeraj_rajput) August 16, 2020
அதனைக் கொண்டு தேடியதில் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ தளத்தில் 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி வெளியிடப்பட்ட ஒரு செய்தியில் பரவக் கூடிய புகைப்படம் இருப்பதைக் காண முடிந்தது. ‘சுதந்திர தினம் : டெல்லி கொண்டாட்டங்களால் நிரம்பி வழிகிறது’ என்ற தலைப்பில் வெளியான அச்செய்தியில், 73வது சுதந்திர தின விழாவையொட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுள்ள நிலையில், NSG, SWAT பாதுகாப்புப் பணியில் உள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அதற்கு முன்னதாக 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி அப்புகைப்படம் ‘இந்தியா டைம்ஸ்’ தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதன் தலைப்பில் ‘செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழா முழு சீருடை அணிவகுப்பு ஒத்திகை’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றில் இருந்து பரவக் கூடிய பாதுகாப்புப் படை வீரர் சீருடையில் உள்ள பெண்ணின் புகைப்படம் 2019ம் ஆண்டு சுதந்திர தின அணிவகுப்பில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது. அதனை 2023ம் ஆண்டு சுதந்திர தின விழாவுடன் ஒப்பிட்டு தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர்.
முடிவு :
நம் தேடலில், 2023ம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பாதுகாப்பு படைப்பிரிவு பெண் எனப் பரப்பப்படும் புகைப்படம் 2019ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.