This article is from Jun 30, 2018

உலகில் அதிகம் மாசடைந்த 20 நகரங்களில் 14 இந்தியாவை சேர்ந்தவை.

பரவிய செய்தி

உலகின் காற்று மாசுபாடு அதிகம் நிறைந்த 20 நகரங்களின் பட்டியலில் 14 நகரங்கள் இந்தியாவை சேர்ந்தவை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

2016-ம் ஆண்டில் பி.எம்2.5 அளவீட்டின்படி உலக சுகாதார மையம் வெளியிட்ட அறிக்கையில் 14  இந்திய நகரங்கள் காற்று மாசுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விளக்கம்

இந்தியாவில் பெருகி வரும் மக்கள் தொகை, தொழில்மயமாதல், நகரமயமாதல், வாகன பயன்பாடு போன்ற பல காரணிகளால் காற்று மாசுபாடு முன்பில்லாத அளவிற்கு பன்மடங்கு அதிகரித்து வருகிறது. அதிலும், மெட்ரோ நகரங்களின் நிலை மிக மோசமாக மாறிவிட்டது. குறிப்பாக, கடந்த ஆண்டில் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்ததின் விளைவால் குழந்தைகள் கூட பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உருவாகியது.

டெல்லி மட்டுமின்றி இந்திய முக்கிய நகரங்களில் நிலவி வரும் காற்று மாசு வேதனை அளித்து வந்த நிலையில் உலக சுகாதார மையம்( WHO ) வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சியை அளித்துள்ளது. உலக சுகாதார மையம் வெளியிட்ட உலகின் காற்று மாசுபாடு அதிகம் நிறைந்த 20 நகரங்களின் பட்டியலில் 14 நகரங்கள் இந்தியாவை சேர்ந்தவை. 100 நாடுகளின் 4,000-க்கும் மேற்பட்ட நகரங்களை மையமாகக் கொண்டு இந்த அறிக்கை உருவாகியுள்ளது. இந்த ஆண்டு WHO-ன் தரவு தளத்தில் 1000 நகரங்கள் புதிதாக இணைந்துள்ளன.

இந்தியாவில் டெல்லி, வாரணாசி, ஃபரிதாபாத், கயா, பாட்னா, லக்னோ, ஆக்ரா, ஸ்ரீநகர், முசாஃபர்பூர், ஜெய்ப்பூர், பட்டியாலா, கான்பூர், ஜோத்பூர், குர்கோவன் ஆகிய 14 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. சீனா மற்றும் மகோலியா நாட்டைச் சேர்ந்த சில நகரங்களும் இதில் உள்ளன. இவை 2016-ம் ஆண்டில் பி.எம்2.5 அளவீட்டின்படி உலக சுகாதார மையம் வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்றவை. 2016-ம் ஆண்டில் பி.எம்10 அளவீட்டின்படி எடுக்கப்பட்ட முதல் 20  நகரங்களின் பட்டியலிலும் இந்தியாவை சேர்ந்த 13 நகரங்கள் இடம் பிடித்துள்ளன.

உலக சுகாதார மையத்தின் புதிய தரவுகளின் படி டெல்லி நகர் கடந்த 6 ஆண்டுகளில் காற்று மாசுபாட்டில் உச்சத்தை எட்டியுள்ளது என்று தெரிவித்துள்ளது. டெல்லியில் ஆண்டிற்கு பி.எம் 2.5 அளவீட்டின்படி காற்றில் உள்ள மாசு துகள்கள்143 (micro grams/ cubic metre ). இந்த அளவு இயற்கை பாதுகாப்பு அளவினைவிட மூன்று மடங்கு அதிகமாகும்.

உலகில் 10-ல் 9 பேர் சுகாதாரமற்ற மாசடைந்த காற்றை சுவாசித்து வருகின்றனர் என்று அதிர்ச்சி தகவலையும் இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கின்றன.

WHO அறிக்கையில், ” உலகளவில் காற்று மாசுபாட்டால் ஆண்டிற்கு 7 மில்லியன் மக்கள் இதய நோய்கள், நுரையீரல் புற்றுநோய், மூச்சுத் திணறல் சம்பந்தப்பட்ட நோய்கள், நிமோனியா உள்ளிட்ட நோய் பாதிப்பால் இறந்துள்ளனர் “. மேலும், காற்று மாசுபாட்டால் ஏற்படக் கூடிய 90 சதவீத மரணங்கள் வளரும் மற்றும் வளர்ச்சி குன்றிய நாடுகளில் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிலேயே உயிரிழப்புகள் அதிகம் நிகழ்கின்றன.

வீடுகள், தொழிற்சாலைகள், விவசாய நிலங்களில் பயிர்கள் எரிப்பது, அனல் மின்நிலையங்கள், வாகன போக்குவரத்து போன்றவற்றில் இருந்து வெளியாகும் புகையால் காற்றில் சல்பர், நைட்ரேட், கார்பன் உள்ளிட்ட நச்சுகள் அதிகரித்து காற்றை மாசுபடுத்துகின்றன. பி.எம்2.5 அளவீடு என்பது காற்றில் கலந்துள்ள சல்பர், நைட்ரேட், கார்பன் போன்றவற்றை குறிக்கிறது. இவை உடலுக்கு பாதிப்புகளை உண்டாக்குகின்றன.

உலகில் மொத்த மக்கள் தொகையில் 30% அல்லது 3 பில்லியன் மக்களின் வீடுகளில் ஒழுங்கான எரிபொருள் பயன்பாடு மற்றும் தொழில்நுட்பம் இல்லை என்று கூறியுள்ளனர்.

டெல்லி மட்டும் இந்தியாவின் மாசடைந்த நகரமாக சித்தரித்து வந்த வேளையில், உலக சுகாதார மையத்தின் பட்டியலில் 14 இந்திய நகரங்கள் இடம்பெற்றது காற்று மாசுபாட்டில் இந்தியர்களின் அலட்சியத்தை எடுத்துரைக்கிறது. காற்று மாசுபாட்டிற்கு அரசாங்கமோ, தனியார் நிறுவனங்களோ மட்டும் காரணமில்லை தனி மனிதனின் செயல்பாடுகளும் காரணமே. வேகமாக நகரமயமாக்கல் பூமியில் மனிதன் வாழும் ஆயுட்காலத்தை வெகுவாக குறைத்துக் கொண்டே வருகிறது.

உலக சுகாதார மையத்தின் அறிக்கை, எதிர்காலத்தில் இந்தியாவின் அனைத்து நகரங்களும் மனிதர்கள் சுவாசிக்க தகுதியற்ற நகரங்களாக மாறப் போகிறது என்பதற்கான எச்சரிக்கை மணியாகும். இதன் பிறகாவது அரசும், மக்களும் காற்று மாசுபாட்டை கருத்தில் கொண்டு காற்று மாசு ஏற்படாதவாறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader