28,450 ஆண்டுகள் பழமையான சிவனின் கல்ப விக்ரஹா சிலை கிடைத்ததாக அர்ஜுன் சம்பத் பரப்பும் வதந்தி !

பரவிய செய்தி
உங்களுக்கு தெரியுமா? வலது பக்கம் காட்டப்பட்டுள்ள சிலை ஆசியாவின் பழமையான சிலை மட்டுமல்ல, இன்று வரை உலகிலேயே மிகவும் பழமையான சிலை!! இந்த சிலை பகவான் விஷ்ணுவிற்கு சுதர்சன சக்ரத்தை கொடுக்கும் சிவனின் சிலை!! இந்த சிலை எவ்வளவு பழையது என்று உங்களால் யூகிக்க முடிகிறதா!!!?
இந்த சிலை 9 அங்குல தடிமனான பெட்டியில் கண்டுபிடிக்கப்பட்டது, அதில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட “கல்ப மஹா-ஆயுஷம் ரசாயன விக்ரஹா”.. இதனால் இந்த சிலை கல்ப விக்ரஹா என்று பெயரிடப்பட்டது! கலிபோர்னியா பல்கலைக்கழக கதிர்வீச்சு ஆய்வகம் பெட்டி மற்றும் சிலையின் ரேடியோகார்பன் டேட்டிங் கண்டுபிடிக்க முயன்றபோது, இந்த சிலை மற்றும் பெட்டி 28,450 ஆண்டுகள் பழமையானது என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்!! இதனால் பூமியில் காணப்படும் பழமையான சிலை இது! அதாவது இந்த சிலை கலியுகத்தில் இருந்து வந்தது இல்லை, துவாபரயுகத்தில் இருந்து வந்தது!
மதிப்பீடு
விளக்கம்
28,450 ஆண்டுகள் பழமையான கல்ப விக்ரஹா எனும் சிவனின் சிலை கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும், உலகின் மிகவும் பழமையான சிலை இதுவே எனக் கூறி ஃபார்வர்டு தகவல் உடன் சிலை ஒன்றின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கடந்த சில ஆண்டுகளாகவே சுற்றி வருகிறது.
இதற்கு ஆதாரமாக கே.கே.முஹம்மது எனும் அகழ்வாராய்ச்சியாளரின் ட்விட்டர் பதிவின் ஸ்க்ரீன்சார்ட்டை குறிப்பிட்டு வருகின்றனர். அந்த ட்விட்டர் பதிவில், ” கல்ப விக்ரஹா (சிவன் சிலை) பூமியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பழமையான சிலையாகும். கலிபோர்னியா பல்கலைக்கழக கதிரியக்க ஆய்வகத்தில், சிலை மற்றும் கரிமப் படிவுகளைக் கொண்ட மரப்பெட்டியை கார்பன் டேட்டிங் நடத்தப்பட்டது. அதில், அது குறைந்தது 28,450 ஆண்டுகள் பழமையானது என தெரிவிக்கப்பட்டது. இதற்கு அர்த்தம் இந்த சிலை கலியுகத்தைச் சேர்ந்தது அல்ல, துவாபர யுகம் எனப்படும் முந்தைய யுகத்தில் இருந்து வந்தது. எகிப்து, கிரீஸ், மெசபடோமியா அல்லது மொஹெஞ்சோ தாரோ-ஹரப்பாவின் பண்டைய நாகரிகங்கள் எதுவும் அந்த நேரத்தில் தொடங்கவில்லை ” என இடம்பெற்று இருக்கிறது.
உண்மை என்ன ?
கேரளாவைச் சேர்ந்த முஹம்மது கே கே கரின்கமன்னு இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்தின் பிராந்திய (வடக்கு) பகுதியின் இயக்குநராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். அவருடைய ஆராய்ச்சிக் குறித்த பேட்டிகள் செய்திகளிலும் வெளியாகி இருக்கிறது.
ஆனால், 28,450 ஆண்டுகள் பழமையான கல்ப விக்ரஹா சிலை எனப் பரப்பப்படும் தகவல் குறித்து கே கே முஹம்மது பேசியதாக எந்த செய்திகளும் வெளியாகவில்லை. அதுமட்டுமின்றி, கல்ப விக்ரஹா என்ற சிலை குறித்து இந்திய அரசு தரப்பிலோ அல்லது ஊடகங்கள் தரப்பிலோ எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. மேலும், அவரின் பெயரில் பரவும் ட்விட்டர் பக்கத்தின் பதிவும் கிடைக்கவில்லை.
ஆகையால், முஹம்மது கே கே கரின்கமன்னு அவர்களின் சமூக வலைதள பக்கங்களை தேடிய போது, 2020 ஜூலை 11ம் தேதி அவருடைய அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், தன்னுடைய பெயரில் பரவும் ட்விட்டர் பதிவிற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.
அவரின் பதிவில், ” @K_K_Muhammed என்ற ட்விட்டர் பகடி கணக்கானது பொய்யான, அறிவியலுக்குப் புறம்பான மற்றும் தவறான கருத்துகளை எழுதி வருகிறது. எனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள நான் ட்விட்டரைப் பயன்படுத்துவதில்லை. இது போன்ற நம்பகத்தன்மையற்ற தகவல்கள் மற்றும் இணையத்தில் வெளியாகும் போலிச் செய்திகள் குறித்து கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது – முஹம்மத் கே.கே. ” என இடம்பெற்று இருக்கிறது.
மேலும் படிக்க : 5,500 வருட பழமையான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதா ?
மேலும் படிக்க : சென்னை அருகே அகழாய்வில் 12,000 ஆண்டுகள் பழமையான விஷ்ணு சிலை கிடைத்ததாகப் பரப்பப்படும் வதந்தி
இதற்கு முன்பாக, 5,500 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், சென்னை அருகே 12,000 ஆண்டுகள் பழமையான விஷ்ணு சிலை கிடைத்ததாகவும் வதந்திகள் பரப்பப்பட்டது.
முடிவு :
நம் தேடலில், 28,450 ஆண்டுகள் பழமையான கல்ப விக்ரஹா சிலை கிடைத்ததாக பரப்பப்படும் தகவல் பொய்யானது. இத்தகவல் உடன் தொல்பொருள் ஆய்வாளர் கே.கே.முஹம்மது பெயரில் பரவும் ட்விட்டர் பதிவும் போலியானது என அறிய முடிகிறது.