IMF தரவில் 2020 இந்திய GDP -8%க்கு பதிலாக 8% என வெளியிட்ட பாஜக !

பரவிய செய்தி
வல்லரசுகளை ஓரம் கட்டி வெற்றிக்கொடி நாட்டினார் மோடி! இரட்டை இலக்கத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி! சர்வதேச நிதியத்தின் 2021 ஆண்டுக்கான கணிப்பு!
மதிப்பீடு
விளக்கம்
பாரதிய ஜனதா கட்சியின் இந்திய அளவிலான சமூக வலைதள பக்கங்கள் மற்றும் தமிழக இளைஞர் அணி, கட்சி சார்ந்த பக்கங்கள் பலவற்றில் 2020-ம் ஆண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடு (GDP) ஜனவரி 26 அன்று சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) வெளியிடப்பட்ட ஒரு தரவை வைத்து பதிவு ஒன்றை வெளியிட்டது.
” வல்லரசுகளை ஓரம் கட்டி வெற்றிக்கொடி நாட்டினார் மோடி ! இரட்டை இலக்கத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ! சர்வதேச நிதியத்தின் 2021 ஆண்டுக்கான கணிப்பு !” என்ற தலைப்பை கொண்ட அந்த பதிவில் இந்தியாவின் GDP சதவீதம் 2020-ம் ஆண்டு 8% என பாஜக வெளியிட்டு உள்ளது.
ஆனால், சர்வதேச நாணய நிதியம் அதன் சமீபத்திய உலக பொருளாதார அவுட்லுக் 2021 நிதியாண்டில் வெளியீட்டில் இந்தியாவின் GDP சதவீதம் 2020-ம் ஆண்டு -8% என்றே வெளியிட்டு உள்ளது.
வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா முதல் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது, இது சீனாவின் 2.3% ஐ விட இந்திய வேகமாக வளர்ந்து வருகிறது என்பது போல காண்பிக்கப்பட்டு உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை உலக பொருளாதார வெளியீட்டின் படி, ஜனவரி புதுப்பிப்பில், இந்தியா நிதியாண்டில் அதன் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் -8% மாற்றத்தைக் காணும் என்று கூறியுள்ளது.
ஆயினும், சர்வதேச நாணய நிதியம், 2021 ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பீடுகளை அக்டோபர் புதுப்பிப்பில் 8.8 சதவீதத்திலிருந்து 11.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இது நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் எதிர்பார்த்ததை விட சிறந்த பொருளாதாரக் காட்சியை இந்த வெளியீடு குறிப்பிடுகிறது.
The IMF has projected growth rate of 11.5% for India in 2021, the only major economy to register a double-digit growth this year.
The projection is a testament of India’s robust economic recovery after the unprecedented slowdown the world faced last year due to COVID pandemic. pic.twitter.com/ZjwQCid1ux
— BJP (@BJP4India) January 28, 2021
ஜனவரி 28-ம் தேதி அன்று, பாஜகவின் தலைமை சமூக வலைதள பக்கங்களில் இந்த தவறை நீக்கி GDP -8% என மாற்றி வெளியிட்டு இருக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் உள்ள பாஜக சார்ந்த பக்கங்கள் இதை சரி செய்யாமல் தவறான தரவை பரப்பி வருகின்றனர்.