இந்தியாவின் வெற்றியை இஸ்ரேலில் வாழும் நமது சகோதரர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என முகமது சிராஜ் கூறியதாகப் பரவும் போலி ட்வீட் !

பரவிய செய்தி
அல்ஹம்துலில்லாஹ் ! இது இஸ்ரேலில் உள்ள நமது சகோதர சகோதரிகளுக்காக. – முகமது சிராஜ்
மதிப்பீடு
விளக்கம்
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 கடந்த 5ம் தேதி (அக்டோபர்) தொடங்கியது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 14ம் தேதி) குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது.
அப்போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 42.5 ஓவருக்கு 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 30.3 ஓவரில் 192 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை இஸ்ரேலில் உள்ள நமது சகோதரர்களுக்கு சமர்ப்பிப்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் கூறியதாக அவரது பெயரில் ஒரு டிவிட்டர் பதிவு பரப்பப்பட்டு வருகிறது. மேலும் அவர் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் சில பதிவுகள் பரவுகிறது.
– This is Mohammad Siraj, a patriotic Indian Pasmanda Muslim and a Narendra Modi fan.
– He dedicated his great performance to Israel.
– Siraj said, “He stands with Israel.”
– He stated that every Indian should support Israel as it is India’s official stand.
– He also… pic.twitter.com/EnYGpX4PdO— BALA (@rightarmleftist) October 14, 2023
உண்மை என்ன ?
பரவக் கூடிய முகமது சிராஜின் டிவிட்டர் பதிவு குறித்து ஆய்வு செய்ததில் அது ‘Parody’ (பகடி) பெயரில் உள்ள ஒரு போலி பக்கம் என்பதை அறிய முடிந்தது. அது முகமது சிராஜின் அதிகாரப்பூர்வ பக்கம் அல்ல.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றி குறித்து, முகமது சிராஜ் பெயரில் பரவும் பதிவின் டிவிட்டர் பக்க பயோவில் ‘PARODY’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அப்பக்கத்தை சுமார் 2,700 பேர் மட்டுமே பின் தொடர்கின்றனர். அதில் ‘Mohammad Siraj’ என்று உள்ளது. ஆனால், ‘Mohammed Siraj’ என்பதுதான் அவரது சரியான பெயர்.
மேற்கொண்டு அவரது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தை ஆய்வு செய்ததில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான வெற்றியைத் தொடர்ந்து ‘3 W We continue the work’ எனப் பதிவிட்டுள்ளார். அதேபோல் இஸ்ரேல் குறித்தும் சமீபத்தில் எந்த பதிவுகளும் அவரது பக்கத்தில் இல்லை..
3 W ✅ We continue the work 🇮🇳💪 pic.twitter.com/2eqcIiLZEd
— Mohammed Siraj (@mdsirajofficial) October 14, 2023
பகடி என்பது நையாண்டியாக ஒரு விஷயத்தை எடுத்துக் கூறுவது. ஆனால், விளையாட்டு வீரர் ஒருவரின் பெயரில் போலிக் கணக்கை உருவாக்கி அதற்குப் பகடி எனப் பெயர் வைத்துக் கொண்டு பொய் செய்தியைப் பரப்புவது பகடி ஆகாது.
மேலும் இந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் 49 ரன்னில் அவுட்டாகி பெவிலியன் திரும்பிய போது ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கம் எழுப்பப்பட்டது. இது மற்ற நாட்டு வீரர்களை அவமதிக்கும் செயல் என்கிற விமர்சனங்களும் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.
முடிவு :
நம் தேடலில், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டியில் இந்தியாவின் வெற்றியை இஸ்ரேலில் வாழும் நமது சகோதரர்களுக்கு சமர்ப்பிப்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் தனது டிவிட்டரில் பதிவிட்டதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அது ஒரு போலி டிவிட்டர் பக்கம் என்பதை அறிய முடிகிறது.