இந்தியா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என கனடா எதிர்க்கட்சி தலைவர் பேசுவதாகப் பரவும் பழைய வீடியோ !

பரவிய செய்தி

இந்தியா மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளதா ஆசியாவின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் நட்பை இழந்து விட்டீர்கள் – கனடா எதிர்கட்சி தவைவர் !

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும், இந்திய அரசுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பத்தக்கத் தகவல் உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசியதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கு இடையேயான உறவில் சலசலப்பு எழத் தொடங்கியது. 

இந்நிலையில் கனடா நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஆண்ட்ரூ ஸ்கீர் பேசுகையில் இந்தியாவின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டினை கனடா பிரதமர் முன்வைக்கிறார் என்று பேசியதாக 1 நிமிடம் 9 வினாடி வீடியோ ஒன்றினை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். 

Archive link

உண்மை என்ன ? 

கனடா எதிர்க்கட்சி தலைவர் ஆண்ட்ரூ ஸ்கீர் பேசியதாகப் பரவும் வீடியோவின் தொடக்கத்தில் வலது பக்கம் ‘The Canadian Press’ என்னும் லோகோ வருவதைக் காண முடிந்தது. அப்பெயரைக் கொண்டு தேடியதில் யூடியூப் பக்கம் ஒன்றில் அந்த வீடியோவின் முழு பகுதி இடம் பெற்றுள்ளது. 

Scheer accuses Trudeau of damaging Canada-India relationship’ எனத் தலைப்பிடப்பட்ட அந்த வீடியோ 2018, மார்ச் 1ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அதன் நிலைத்தகவலில் ‘Justin Trudeau is defending an adviser who suggests the Indian government played a role in a convicted terrorist attending events with the prime minister. Tory Leader Andrew Scheer is accusing Trudeau of “incompetence” over the incident. (Feb. 28, 2018)’ என்றுள்ளது.

இதனைக் கொண்டு 2018ம் ஆண்டு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்த போது நடைபெற்ற நிகழ்வுகள் குறித்துத் தேடினோம். ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் காலிஸ்தான் பிரிவினைவாதியாகக் கருதப்படும் ஜாஸ்பல் அத்வால் என்பவர் கலந்து கொண்டது அந்நேரத்தில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.  

1986ம் ஆண்டு பஞ்சாப் அமைச்சர் மால்கியாத் சிங் சுடப்பட்ட வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றவர்தான் ஜாஸ்பல் அத்வால். 

எனவே, ஜாஸ்பல் அத்வால் ஜஸ்டின் ட்ரூடோவின் நிகழ்ச்சிக்கு வந்தது தொடர்பாக ஆண்ட்ரூ ஸ்கீர் கனடா நாடாளுமன்றத்தில் 2018ல் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ஜஸ்டின் ட்ரூடோ பதிலளிக்கையில், தனக்குச் சங்கடத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்தியாவே அவரை வரவழைத்ததாக கூறினார். அப்போதே இந்திய அரசும் இக்குற்றச்சாட்டினை மறுத்துள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர்  ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்த போது நடந்த ஒரு சம்பவத்திற்குக் கனடா பாராளுமன்றத்தில் ஆண்ட்ரூ ஸ்கீர் எழுப்பிய கேள்வியை, தற்போது நடந்தது போலத் தவறாகப் பரப்பி வருகின்றனர். 

மேலும் படிக்க : உ.பி பாஜகவினர் கனடா கொடிக்குப் பதிலாகக் கர்நாடகா மாநில கொடியை எரித்ததாகப் பரவும் போலிச் செய்தி !

இதே போல் ஹர்தீப் சிங் படுகொலையைத் தொடர்ந்து பரப்பப்பட்ட போலி செய்திகள் குறித்த உண்மைகளும் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க : கனடாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ததாகப் பரவும் தவறான தகவல் !

முடிவு : 

நம் தேடலில், இந்தியா மீது கனடா பிரதமர் ஆதாரமற்ற குற்றச்சாட்டினை முன்வைப்பதாகப் பரவும் ஆண்ட்ரூ ஸ்கீர் பேசிய வீடியோ ஹர்தீப் சிங் மரணத்துடன் தொடர்புடையது அல்ல. அது 2018ம் ஆண்டு  ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்து சென்றதைத் தொடர்ந்து பேசியது என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader