This article is from Jun 20, 2020

இந்திய ராணுவ வீரர் பழனியின் இறுதி 10 நிமிடம் என பரவும் இரு வேறு வீடியோக்கள்| உண்மை என்ன ?

பரவிய செய்தி

வீர மரணமடைந்த இராணுவ வீரர் கடுக்கலூர் பழனியின் கடைசி 10 நிமிட போர்க்கள
நிலவரங்கள்.

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவத்திற்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். அதில், தமிழகத்தின் கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவரும் உயிரிழந்தார். அவரின் இறப்புக்கு முன்பாக கடைசி 10 நிமிட போர்க்கள நிலவரம் என மேற்காணும் வீடியோ வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ?

வைரலாகும் 4.49 நிமிட வீடியோவின் தொடக்கத்தில் சீன ராணுவத்தினரிடம் இந்திய தரப்பில் பேசி புரிய வைக்க முயல்வதும், வாக்குவாதம் நிகழ்வதும் பதிவாகி உள்ளது. 1.57வது நிமிடத்தில் வேறொரு வீடியோவாக மாறுவதை பார்க்க முடிகிறது. அந்த பதிவில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படுவது இடம்பெற்று உள்ளது. உன்னிப்பாக கவனித்தால் இரண்டும் வெவ்வேறு வீடியோக்கள் என்பதை அறியலாம்.

முதல் பாதி வீடியோவில் இருந்து ஸ்க்ரீன்ஷார்ட் எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், சிக்கிம் பகுதியில் சீன-இந்திய வீரர்கள் மோதல் என கடந்த மே மாதமே இவ்வீடியோ பரவி இருந்ததை அறிய நேர்ந்தது.

Twitter link | archive link 

ஆனால், முதல் பாதி வீடியோ எடுக்கப்பட்டது சிக்கிம் பகுதியில் அல்ல. 2020 ஜனவரி 13-ம் தேதி YB Vlog எனும் யூடியூப் சேனலில் அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லையில் இந்தோ திபெத் எல்லை போலீஸ் உடன் சீன ராணுவம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக 1.58 நிமிட வைரல் வீடியோ பகுதி வெளியாகி உள்ளது.

2020 ஜனவரி 17-ம் தேதி DWnews எனும் சீன இணையதளத்தில் வைரலாகும் வீடியோவில் இடம்பெற்ற காட்சியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

அடுத்த பாதி வீடியோ, கடந்த 2020 மே 10-ம் தேதி சிக்கிம் பகுதியில் சீன ராணுவத்தினர் உடன் மோதல் ஏற்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் இந்திய டுடே செய்தியில் வெளியாகி உள்ளது. ஆனால், அந்த வீடியோ பகுதியும் தற்போது எடுக்கப்பட்டது அல்ல.

இந்திய-சீன ராணுவத்தினர் மோதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதாக டிவி9 தெலுங்கு சேனலில் 2017-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி பதிவாகி உள்ளது. செய்தியில் 2.29வது நிமிடத்தில் வைரலாகும் வீடியோவின் பகுதி இடம்பெற்று உள்ளது. அதற்கு முன்பாக இரு தரப்பினருக்கு இடையேயான பேச்சு, வாக்குவாதம் உள்ளிட்ட காட்சிகளும் பதிவாகி இருக்கிறது. 2017-ல் நிகழ்ந்த சம்பவத்தின் வீடியோவை சமீபத்தில் இந்திய டுடே செய்தியிலும் வெளியிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இந்திய-சீன ராணுவத்திற்கு இடையே ஏற்பட்ட மோதல் என பல பழைய வீடியோக்கள் தவறாக வைரல் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட ராணுவ வீரர்களின் பெயரை வைத்தும் பழைய வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவு : 

நம்முடைய தேடலில்,  லடாக்கில் இந்திய-சீன ராணுவத்திற்கு இடையே ஏற்பட்ட மோதலில் இறந்த ராணுவ வீரர் பழனியின் கடைசி 10 நிமிட போர்க்கள நிலவரம் என பரப்பப்பட்டு வரும் வீடியோ இரு வேறு பழைய வீடியோக்கள் என்பதை நம்மால் அறிய முடிந்தது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader