தா.பாண்டியன் சீனாவிற்கு ஆதரவு தருவதாக பரப்பப்படும் போலி நியூஸ் கார்டு !

பரவிய செய்தி
சீனா கம்யூனிச நாடு. சீனா இந்திய பகுதிகளை ஆக்கிரமித்தாலும், சீனா இந்தியாவுடன் போரிட்டாலும் இரு கம்யூனிச இயக்கங்களும் சீனாவை தான் ஆதரிக்கும். இந்தியா என்ற இந்து நாட்டிற்கு எப்போதும் இடதுசாரிகளின் ஆதரவு கிடையாது – தா.பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட்
மதிப்பீடு
விளக்கம்
சீனாவிற்கும், இந்தியாவிற்கும் இடையே எல்லை பிரச்சனை நிலவி வரும் வேளையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தா.பாண்டியன் அவர்கள் சீனாவிற்கு ஆதரவாக இருப்போம், இடதுசாரிகள் இந்தியாவிற்கு ஆதரவு அளிக்காது எனக் கூறியதாக பழைய புதியதலைமுறை செய்தியின் போலியான நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது.
இந்த நியூஸ் கார்டில் இருக்கும் வாக்கியத்தை வைத்து தேடிய பொழுது கடந்த ஆண்டு ஜூலை மாதமும் இதே தகவல் பகிரப்பட்டு உள்ளது. தற்போது சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வரும் நியூஸ் கார்டில் 2018-ம் ஆண்டு பிப்ரவரி எனத் தேதி இடம்பெற்று இருக்கிறது. ஆனால், 2018-ல் கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் இவ்வாறாக கருத்து தெரிவித்தார் என எந்தவொரு செய்தியிலும் வெளியாகவில்லை. இடதுசாரிகள் இப்படியொரு கருத்தை கூறி இருந்தால் மிகப்பெரிய அரசியல் விவாதங்கள் எழுந்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
2018-ம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் புதியதலைமுறை செய்தியின் முகநூல் பக்கத்தில் வெளியான நியூஸ் கார்டை தேடிப்பார்த்தோம். அதில், அப்படி எந்தவொரு நியூஸ் கார்டும் கிடைக்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய நியூஸ் கார்டு என்பதால் சரியான தேதியின் நியூஸ் கார்டு தேடி எடுப்பதில் சிரமங்கள் இருந்தன.
மாறாக, 2018 பிப்ரவரி மாதத்தில் வெளியான மற்றொரு நியூஸ் கார்டு கிடைத்தது. அதையும், பரப்பப்படும் நியூஸ் கார்டையும் ஒப்பிடும் பொழுது எழுத்து நடை, எடிட் செய்யப்பட்ட விதம் தெளிவாய் தெரிகிறது. பழைய புதியதலைமுறை நியூஸ் கார்டில் தா.பாண்டியன் கூறியதாக போலியான தகவலை டைப் செய்து இருக்கிறார்கள் என்பதை நன்கு கவனித்தால் புரிந்து கொள்ள முடிகிறது. அவற்றை ஒப்பிட்டு காண்பித்து உள்ளோம்.
மேலும் படிக்க : இந்திய ராணுவத்திற்கு எதிராக சிபிஐ(எம்) போராடியதாக முகநூல் வதந்தி !
இந்தியாவில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி இயக்கங்கள் சீனாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பதாக, சீனாவிற்கு ஆதரவாகவும் இருப்பதாக வலதுசாரிகள் வதந்திகளை பரப்பி இருந்தனர். அதன் தொடர்ச்சியாக பல வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன.
மேலும் படிக்க : 59 சீன செயலிகளின் தடைக்கு மதுரை எம்.பி எதிர்ப்பு என போலி ட்வீட் !
முடிவு :
நமது தேடலில், சீனா கம்யூனிச நாடு. சீனா இந்திய பகுதிகளை ஆக்கிரமித்தாலும், சீனா இந்தியாவுடன் போரிட்டாலும் இரு கம்யூனிச இயக்கங்களும் சீனாவை தான் ஆதரிக்கும். இந்தியா என்ற இந்து நாட்டிற்கு எப்போதும் இடதுசாரிகளின் ஆதரவு கிடையாது என தா.பாண்டியன் கூறியதாக பரப்பப்படும் புதியதலைமுறை நியூஸ் கார்டு போலியானது. அப்படி எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை என்பதை அறிய முடிகிறது.