இதுவரை இந்தியா காமன்வெல்த் பதக்கப் பட்டியல்களில் கடைசியில் இருந்ததாக பொய் சொன்ன அண்ணாமலை !

பரவிய செய்தி

பர்மிங்ஹாம் இல் நடைபெற்ற 72 நாடுகள் பங்கேற்ற 22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நிறைவடைந்துள்ளது. இந்த போட்டிகளில் பதக்கப்பட்டியலில் இந்தியாவின் பெயர் இடம் பெறுவது கனவாக இருந்தது அப்படியும் ஓரிரு பதக்கங்கள் பெற்று இருந்தாலும் இந்தியா பதக்கப் பட்டியலில் இறுதியில் காணப்படும் நிலை இருந்தது – அண்ணாமலை தமிழக பாஜக தலைவர் .

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

2022ம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டியில் 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்ற இந்தியா பதக்கப் பட்டியலில் 4ம் இடத்தை பிடித்துள்ளது. இந்திய விளையாட்டு வீரர்களின் வெற்றிக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் வெற்றிப் பெற்றது குறித்து ஆகஸ்ட் 9-ம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் ,” பர்மிங்ஹாம் இல் நடைபெற்ற 72 நாடுகள் பங்கேற்ற 22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நிறைவடைந்துள்ளது. இந்த போட்டிகளில் பதக்கப்பட்டியலில் இந்தியாவின் பெயர் இடம் பெறுவது கனவாக இருந்தது. அப்படியும் ஓரிரு பதக்கங்கள் பெற்று இருந்தாலும் இந்தியா பதக்கப் பட்டியலில் இறுதியில் காணப்படும் நிலை இருந்தது. ஆனால், இன்று ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ,விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.

பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் மாண்புமிகு பாரதப் பிரதமர் நேர்மையாக முறையாக தகுதி அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக தற்போது நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்தியா மொத்தமாக 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் 4வது இடத்தை பதிவு செய்திருக்கிறது. இந்தச் சாதனை இதற்கு முன்பு நிகழ்த்தப்பட்டது இல்லை ” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

Advertisement

மேலும், காமன்வெல்த் போட்டிகளில் இதுவரை இந்தியா பெறாத இடத்தை தற்போது மோடி ஆட்சியில் இந்தியா பெற்று உள்ளதாக பதக்கப் பட்டியலை பாஜகவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை என்ன ? 

காமன்வெல்த் போட்டிகளில் இதுவரை பெறாத இடத்தை இந்தியா பெற்று இருப்பதாகவும், இதுவரை காமன்வெல்த் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் இந்தியா கடைசி இடங்களில் இருந்ததாக அண்ணாமலை கூறிய தகவல் பொய்யானது.

இதற்கு முன்பாக பாஜக ஆட்சியில், 2018ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 66 பதக்கங்கள் உடன் 3-ம் இடத்திலும், 2014-ல் ஸ்காட்லாந்த்தில் நடைபெற்ற போட்டியில் 64 பதக்கங்கள் உடன் 4-ம் இடத்திலும் இந்தியா இருந்து உள்ளது.

2010ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் 38 தங்கங்கள், 27 வெள்ளி , 36 வெண்கலம் என மொத்தம் 101 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 2ம் இடத்தைப் பிடித்ததே இன்றுவரை சாதனையாக இருந்து வருகிறது.

மேலும், 2006-ம் ஆண்டு 50 பதக்கங்கள் உடன் 4-ம் இடத்திலும், 2002-ம் ஆண்டு 69 பதக்கங்கள் உடன் 4-ம் இடத்திலும் இந்தியா இருந்து உள்ளது. 2002-ல் இருந்து கடந்த 20 ஆண்டுகளாக காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா பல பதக்கங்களை பெற்று 4 இடங்களுக்குள்ளே இருந்து வருகிறது. ஆனால், இந்தியா காமன்வெல்த் போட்டிகளில் கடைசி இடங்களில் இருந்து வருவதாக பொய்யான தகவலை பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

முடிவு : 

நம் தேடலில், காமன்வெல்த் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் இதுவரை இந்தியா கடைசி இடங்களில் இருந்து வந்ததாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பொய்யான தகவலை அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.

அதேபோல், கடந்த காமன்வெல்த் போட்டிகளின் பட்டியலில் இதுவரை பெறாத இடத்தை இம்முறை இந்தியா பிடித்து உள்ளதாக பாஜகவினர் பரப்பும் தகவலும் தவறானது என அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button