இந்தியாவின் கடன் 82 லட்சம் கோடி ! | நான்கரை ஆண்டில் 49 % உயர்வு

பரவிய செய்தி
2014-ம் வருடம் இந்தியாவின் மொத்த கடன் 54 லட்சம் கோடி. 2019-ம் வருடம் இந்தியாவின் மொத்த கடன் 82 லட்சம் கோடி.
மதிப்பீடு
சுருக்கம்
மத்திய நிதியமைச்சகம் 11, டிசம்பர் வெளியிட்ட செப்டம்பர் காலிறுதி வரையிலான மத்திய அரசின் கடன் குறித்த தரவுகளில் மொத்த கடனாக 82,03,253 கோடியாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
விளக்கம்
இந்தியாவின் முந்தைய கடன் சுமை குறைவதற்கு எதிர்மாறாக ஆண்டுதோறும் கடன் தொகை அதிகரிப்பதே நிகழ்கிறது. எந்தவொரு திட்டங்களுக்கும் கடனை நம்பியே ஆட்சியும் நடைபெறுகிறது. 2019 வரையில் இந்தியா கொண்டிருக்கும் கடன் சுமையானது 82 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது என்ற தகவல் இணையத்தில் அதிகம் பரவி வருகிறது.
மத்திய அரசின் தரவு :
மத்திய நிதி அமைச்சகத்தின் அரசின் கடன் விவரம் பற்றிய தரவுகளில் செப்டம்பர் 2018 காலிறுதி வரையிலான ஒட்டுமொத்த கடன் 82,03,253 கோடியாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
நிதியமைச்சகத்தின் கடன் தரவுகள் விவரங்கள் கொண்டு கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு முன்பிருந்த தரவுகளுடன் ஒப்பிடுகையில், 2014-ல் 54,90,763 கோடியாக இருந்த நாட்டின் கடன் 2018 செப்டம்பர் வரையில் 82,03,253 கோடியாக வந்து நிற்கிறது. இந்தியாவின் கடன் சுமை 49% உயர்ந்து இருக்கிறது என்கிறார்கள்.
நாட்டின் ஒட்டுமொத்த கடன் அதிகரிக்க பொதுக் கடன் அதிகரிப்பே காரணமாகி இருந்துள்ளது. நாட்டின் பொதுக் கடன் 51.7% உயர்ந்துள்ளது. 2014-ல் 48 லட்சம் கோடியாக இருந்த பொதுக் கடன் 2018 செப்டம்பர் வரையில் 73,22,311.03 கோடியாக உயர்ந்து இருக்கிறது.
தற்போதைய நிலையில் சந்தை கடனும் 47.5 சதவீதம் அதிகரித்து 52,65,284 கோடியாக உயர்ந்து இருக்கிறது. தங்க பத்திரக் கடன் 2014 ஜூன் வரையில் ஏதுமில்லாமல் இருந்த நிலையில் தங்க நாணயம் உள்ளிட்ட திட்டங்களால் 2018 செப்டம்பரில் தங்க பத்திரம் மீது ரூ.9089 கோடியாக கடன் உள்ளது.
நாட்டின் கடன் உயர்விற்கு நிதிப்பற்றாக்குறையும் சிறிய காரணம் என்கிறார்கள். கடந்த வருடம் முதல் எட்டு மாதங்களுக்கான நிதிப்பற்றாக்குறை ரூ.7.17 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், அந்த ஆண்டு முழுவதற்கும் நிர்ணயிக்கப்பட்ட ரூ.6.24 லட்சம் கோடியை விட அதிகரித்து சென்றுள்ளது.
நாட்டின் கடன் சுமை 82 லட்சம் கோடி குறித்த தரவுகள் மத்திய நிதியமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் டிசம்பர் 11 -ம் தேதியே வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் பதவியேற்ற பிறகு உலக வங்கியுடன் இருந்து கூட கடன் வாங்குவதில்லை என்ற தவறான தகவலும் கூட பகிரப்பட்டன. நாட்டின் மக்களுக்கான திட்டங்களுக்கு கடன் பெறுவது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.