இந்தியா ஏற்றுமதி செய்யும் பெட்ரோலின் விலை ரூ.34 மட்டுமா???

பரவிய செய்தி

ஒரு லிட்டர் பெட்ரோல் 70 ரூபாய்க்கு விற்கும் இந்தியா தான் ஒரு லிட்டர் பெட்ரோலை 15 நாடுகளுக்கு ரூ.34-க்கு விற்பனை செய்கிறது. இந்த தகவல் ஆனது பெட்ரோல் ஏற்றுமதி குறித்து RTI தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை விட ஏற்றுமதி செய்யப்படும் விலை குறைவானதே..!! எனினும், இந்தியாவில் விற்கப்படும் எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரிகளே அதிக விலைக்கு காரணம். வெளிநாட்டிலும்  பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் போது வரி விதித்தே விற்பனை செய்வர்.

விளக்கம்

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயின் ஏற்றுமதி விலை பற்றி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஏற்றுமதி விலை குறித்த விவரங்கள் வெளியாகி இந்திய நுகர்வோர்களை கோபமடையச் செய்துள்ளது.

மங்களூரில் உள்ள இந்திய அரசுக்கு சொந்தமான Refinery and petrochemicals லிமிடெட் தரப்பில் இருந்து வெளியான ஆர்.டி.ஐ தகவலின்படி, “ 2018 ஜனவரி 1-ம் தேதி முதல் ஜூன் 30 வரையிலான இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவை ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர், மொரிசியஸ் மற்றும் ஐக்கிய அமீரக எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஏற்றுமதி செய்யப்படும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 32 to 34 ரூபாய், ஒரு லிட்டர் டீசல் 34 to 36 ரூபாய் வரை. இவை ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளை பொருத்து வேறுபடும். இந்த தருணத்தில் பெட்ரோலின் விலை 69 to 75 ரூபாய்க்கும், டீசல் 59 to 67 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த நாட்டிலும் வரி விதித்து தான் பெட்ரோல் விற்கப்படும் . உதாரணமாக யுனைடெட் கிங்டமில் (UK) வரியுடன் சேர்த்து இன்றைய நிலவர படி இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.119.70 – க்கு பெட்ரோல் விற்கப்படுகிறது. 

பெட்ரோலின் ஏற்றுமதி & உள்நாட்டு விற்பனை வேறுபாடு :

இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடு. அதே நேரத்தில் மிகப்பெரிய அளவில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை ஏற்றுமதி செய்யும் நாடு.

இந்தியா சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஏற்றுமதியில் 10 வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மட்டுமின்றி எண்ணெய் வளமிக்க நாடுகளான ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது. 2017-ல் இந்தியாவின் ஏற்றுமதி 24.1 பில்லியன் டாலர்கள், இது மொத்த உலக வர்த்தகத்தில் 3.9%.

ஏற்றுமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயின் விலையானது சந்தையில் நிலவும் தேவை மற்றும் விநியோகத்தை பொருத்தது. போட்டி அதிகம் நிலவுவதால் ஏற்றுமதியில் அதிகளவில் விலையை நிர்ணயம் செய்ய முடியாது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தகவலின்படி, ஒரு லிட்டர் கச்சா பெட்ரோல் ( 20 ஆகஸ்ட்) 35.90 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் கச்சா டீசல் 38.25 ரூபாய்க்கும் இந்திய நிறுவனங்களுக்கு வருகிறது. இந்தியன் ஆயில் இடம் இருந்து வியாபாரிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.37.93 மற்றும் டீசல் ரூ.41.04 என நிர்ணயிக்கப்படுகிறது. காரணம் வரி விதிப்பு ஏதுமில்லை என்பதே..!!

100 சதவீத அளவிற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளால் விதிக்கப்படும் வரிகளால் உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயின் விலை அதிகமாக உள்ளது. 

” டெல்லியில் விற்பனை செய்யப்படும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 77.49ரூபாய் ( ஆகஸ்ட் 20), இதில் கலால் வரி 19.48/லி , டீசர் கமிசன் 3.61ரூ/ லி , வாட் வரி ரூ.16.47/லி . டெல்லியில் ஒரு லிட்டர் டீசலின் விலை 69.04ரூபாய் ( ஆகஸ்ட் 20), இதில் கலால் வரி 15.33/லி , டீசர் கமிசன் 2.51ரூ/ லி , வாட் வரி ரூ.10.16/லி  ஆகும் ” பெட்ரோலின் மீதான மத்திய சுங்க வரி ரூ.19.48 (அக்டோபர் 2017 நிலவரப்படி)ஆகவும் VAT  என்னும் மாநில மதிப்பு கூட்டப்பட்ட வரி 34% (தமிழகத்தில்) ஆகவும் இருக்கிறது.

தகவல் அறியும் உரிமம் சட்டத்தின்படி வெளியான தகவல் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருந்தாலும் உண்மை என்னவென்று தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அதிகப்படியாக விதிக்கப்படும் மத்திய, மாநில வரிகளே அதிக விலையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விற்பனைக்கு காரணம். இதன் மூலமே அரசுகள் அதிக வருவாயும் ஈட்டுகின்றனர்.

Source: India today

Please complete the required fields.
ஆதாரம்

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close