இந்தியா கேட்டில் இஸ்லாமியர், கிறிஸ்தவர் பெயர்கள் இடம்பெறவில்லை எனப் பரப்பப்படும் தவறான தகவல் !

பரவிய செய்தி

இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் பங்கேற்கவில்லை. டெல்லி இந்தியா கேட் நினைவுச் சுவரில் இஸ்லாமியர் பெயர் இடம்பெறவில்லை.

Facebook link 

மதிப்பீடு

விளக்கம்

“இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்கள் பங்கேற்றது உண்மையா?” என்ற தலைப்பில் ‘Fact crescendo’ என்னும் fact check இணையதளம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளதாகப் புகைப்படம் ஒன்றினை வலதுசாரி ஆதரவாளர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

அதில், “இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் பெயர் டெல்லி இந்தியா கேட்  நினைவுச் சுவரில் பொறிக்கப்பட்டுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு இஸ்லாமியர்கள் தகவல் பரப்பி வந்தனர்! இதன் உண்மைத் தன்மையை கண்டறிய ஆய்வு செய்தோம், அந்த ஆய்வில் ஹிந்துக்கள், சிங்குகள் மற்றும் ஜெயினர்களின் பெயர் மட்டுமே உள்ளதாக முன்னாள் இராணுவ மேஜர் தெரிவித்தார்.

Archive link 

இதில் 50% ஹிந்துக்கள், 30% சிங்குகள் மற்றும் 20% ஜெயினர்களின் பெயர் மட்டுமே உள்ளது, இந்த பட்டியலில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்தவர்களின் பெயர்கள் இல்லை. ஏன் இவர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இல்லை என உங்களுக்குள் கேள்வி எழும்பலாம் காரணம் இஸ்லாமியர்களோ, கிறிஸ்தவர்களோ இதில் பங்கேற்கவில்லை என்பதே உண்மை”  எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மை என்ன ? 

AIMIM (All India Majlis-E-Ittehadul Muslimeen) கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவாய்சி 2019ம் ஆண்டு ஜூலை மாதம் மும்பையில் அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, இந்தியா கேட்டில் இடம்பெற்றுள்ள 95,300 சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களில், 61,945 பெயர்கள் முஸ்லீம்கள் எனக் கூறி இருந்தார். அப்போதே அதன் உண்மைத் தன்மை குறித்து யூடர்ன் கட்டுரை வெளியிட்டிருந்தது.

மேலும் படிக்க : இந்தியா கேட் சுதந்திரப் போராட்ட வீரர்களை கெளரவிக்கவா ?| அதில் முஸ்லீம்களின் எண்ணிக்கை அதிகமா ?

டெல்லியில் உள்ள இந்தியா கேட் நினைவுச் சின்னம் சுதந்திரப் போராட்டத்தில் இறந்த வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டதில்லை. இந்தியா கேட் குறித்த தகவல் அரசின் அதிகாரப் பூர்வ இணையதளமான ‘Delhi Tourism’ பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Archive link 

அதில், “1919ம் ஆண்டு ஆஃப்கான் போரில் வடமேற்கு எல்லையில் கொல்லப்பட்ட 13,516 பிரிட்டிஷ் மற்றும் இந்திய வீரர்களின் பெயர்கள் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. Edwin Lutyens என்பவரால் வடிவமைக்கப்பட்ட நினைவுச் சின்னம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டிற்காக லார்டு இர்வினால் அர்ப்பணிக்கப்பட்டது” என்றுள்ளது.

அதாவது முதலாம் உலகப் போரில் பிரிட்டிஷ் படையுடன் இந்திய வீரர்கள் இணைந்து போரிட்டு உயிரிழந்தனர். அவர்களின் நினைவாக அமைக்கப்பட்டதே இந்தியா கேட். 

அப்போரில் உயிரிழந்தவர்களின் விவரம் Commonwealth War Graves Commission (CWGC) என்ற சர்வதேச அமைப்பின் இணையதளத்தில் உள்ளது. இறந்தவர்கள் எந்த மதத்தினை சேர்ந்தவர்கள் என்ற தகவல் அதில் இடம்பெறவில்லை. எனவே அவர்களின் பெயர்களைக் கொண்டு அவர்களது மதத்தினை அறிய முற்பட்டோம்.

அதில் அப்துல், முகமது, அலி முஹம்மத், யூசப் அலி போன்ற இஸ்லாமிய மத பெயர்களும், ஜோசப், இயேசு நாயக் போன்ற கிறிஸ்தவ மத பெயர்களும் இருப்பதைக் காண முடிந்தது. இதிலிருந்து முதல் உலகப் போரில் பிரிட்டிஷ் வீரர்களுடன் இணைந்து இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு மதத்தினரும் போரிட்டுள்ளனர் என்பதைக் காண முடிகிறது. 

‘Fact crescendo’ பெயரில் பரவக் கூடிய தகவல் குறித்து அவர்களது இணையதளத்தில் தேடுகையில், இந்தியா கேட்டில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதா?” என்ற தலைப்பில் 2019ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டுள்ள கட்டுரை கிடைத்தது. அக்கட்டுரையில், இந்தியா கேட்டில் இஸ்லாமியர்கள். கிறிஸ்தவர்கள் பெயர் இடம்பெறவில்லை என எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. அது ஒரு போலிக் கார்டு என்பதை அறிய முடிகிறது.

மேலும் பரப்பப்படும் பதிவில் உள்ள புகைப்படம் டெல்லி இந்தியா கேட் அருகே உள்ள “National war Memorial” இடத்தில் எடுக்கப்பட்டது. அதில், வீரமரணம் அடைந்த இந்திய இராணுவ வீரர்களின் பெயர்கள் இடம்பெற்று உள்ளன. இதிலும், இஸ்லாமியர் பெயர்கள் இடம்பெற்று இருப்பதை காணலாம்.

முடிவு : 

நம் தேடலில், இந்தியா கேட் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவாகக் கட்டப்பட்டது. இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ளாததினால் அவர்களின் பெயர்கள் அதில் இடம்பெறவில்லை எனப் பரவும் தகவல் உண்மை அல்ல.

இந்தியா கேட் முதல் உலகப் போரில் பிரிட்டிஷ் படையினருடன் இணைத்துப் போரிட்ட இந்திய வீரர்களை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்டது. அதில் இந்துக்கள், இஸ்லாமியர், கிறிஸ்தவர் எனப் பல மதத்தினரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button