பிற நாடுகளை விட இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளதா ?

பரவிய செய்தி
உலகின் அனைத்து முக்கிய பொருளாதாரங்களையும் விட இந்தியா மிகச் சிறப்பாக உள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
2020-ம் ஆண்டில் உலகின் அனைத்து முக்கிய பொருளாதாரங்களையும் விட இந்தியா மிகச் சிறப்பாக உள்ளதாக மேற்காணும் அட்டவணை சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. தமிழில் பாஜகவின் ஆதரவு பக்கமான கதிர் நியூஸ் உடைய முகநூல் பக்கத்தில் இப்பதிவு வெளியாகி இருக்கிறது. அதற்கு முன்பாக, பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் இதே தரவரிசை அட்டவணை ஆகஸ்ட் 22-ம் தேதி வெளியாகி உள்ளது.
While the world continues to grapple with economic bloodbath with major economies projected to register negative growth in the aftermath of #COVID pandemic, India will be a shining spot with positive growth in 2020. It will also retain its status of the fastest growing economy. pic.twitter.com/lELEbZaDl3
— BJP (@BJP4India) August 22, 2020
” கோவிட்-19 தொற்றுக்குப் பின்னர் எதிர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்றுக் கணிக்கப்பட்டுள்ள முக்கிய பொருளாதார நாடுகளுடன் உலகம் தொடர்ந்து பொருளாதார வீழ்ச்சியில் ஈடுபடுகையில், 2020-ம் ஆண்டில் இந்தியா நேர்மறையான வளர்ச்சியுடன் பிரகாசிக்கும் நாடாக இருக்கும் என்றும், வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நிலையை தக்க வைத்துக் கொள்ளும் ” என பாஜக ட்விட்டர் பதிவில் வெளியாகி இருக்கிறது.
மேற்காணும் தரவரிசையில் இந்தியா 1.9 மற்றும் சீனா 1.2 ஜி.டி.பி வளர்ச்சி விகிதத்தை கொண்டுள்ளதாகவும், மற்ற நாடுகள் வீழ்ச்சியை சந்திப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மை தெரிந்து கொள்ள ஆராய்ந்து பார்க்கத் தீர்மானித்தோம்.
உண்மை என்ன ?
2020-ம் ஆண்டில் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி 1.9% ஆக இருக்கும் என பாரதிய ஜனதா கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தரவுகள் சர்வதேச நாணய நிதியம் (IMF) உடைய மதிப்பீடுகள் என இடம்பெற்று இருக்கிறது. இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி 1.9% ஆக இருக்கும் கணிக்கப்பட்டது உண்மையே, ஆனால் சமீபத்தில் இல்லை. கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய ஏப்ரல் மாதத்தில் வெளியாகியதை தற்போது பகிர்ந்து உள்ளனர்.
ஐஎம்எஃப் கடந்த ஏப்ரல் மாதம் ” World Economic Outlook (WEO) “-வை வெளியிட்டது. அதில், இந்தியா மற்றும் சீனா ஆகிய சில நாடுகள் மட்டுமே நேர்மறையான வளர்ச்சியை நோக்கி நகரும் என மதிப்பிடப்பட்டது. ஆனால், ஜூன் மாதத்தில் மதிப்பீடுகள் தலைகீழாக மாறியது. 2021 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (-)4.5% குறையும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. ஜூன் மாதம் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில் இதைக் குறிப்பிட்டு உள்ளது.
ஜூன் மாத்தில் வெளியிடப்பட்ட இந்தியப் பொருளாதாரம் குறித்த மதிப்பீட்டை வெளியிடாமல் அதற்கு முன்பாக ஏப்ரல் மாதத்தில் வெளியான மதிப்பீட்டை வெளியிட்டு வருகிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், உலகின் அனைத்து முக்கிய பொருளாதாரங்களையும் விட இந்தியா மிகச் சிறப்பாக உள்ளதாக பகிரப்படும் மதிப்பீட்டு தரவுகள் ஐஎம்எஃப் ஆல் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்டவை, ஜூன் மாதத்தில் வெளியிட்ட தரவுகளின் படி (-)4.5% ஆக இந்தியப் பொருளாதாரம் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது என்பதையும் அறிய முடிகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.