ஆசிய நாடுகளின் பொருளாதாரப் பட்டியலில் இந்தியா கடைசி இடமா ? | உண்மை என்ன ?

பரவிய செய்தி
2019-ல் ஆசிய கண்டத்தில் பொருளாதாரத்தில் முன்னேறி வரும் நாடுகளில் இந்தியாவிற்கு கடைசி இடம். இந்தியாவின் ஜிடிபி 5%-ஐ தொட்டது.
மதிப்பீடு
விளக்கம்
இந்தியப் பொருளாதாரம் சரிவை நோக்கி செல்வது தேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு சமூக ஊடகங்களில் ஆட்சியாளர்கள் மீது கேள்விகளை எழுப்பி வருகிறது. அதில், 2019-ல் இந்திய பொருளாதாரத்தை ஆசியக் கண்டத்தில் உள்ள பிற நாடுகளுடன் ஒப்பிட்டு இந்தியாவின் பொருளாதாரம் கடைசி இடத்தில் இருப்பதாக குறிப்பிட்டு உள்ள மீம் பதிவு முகநூலில் வைரலாகி வருகிறது.
அத்தகைய மீம் பதிவில், 2019-ல் ஆசியாவில் பொருளாதாரத்தில் முன்னேறி வரும் நாடுகளில், பங்களாதேஷ் (8.13%), நேபால்(7.9%), பூட்டான்(7.4%), சீனா (6.9%), மியான்மர்(6.8%), பிலிப்பைன்ஸ் (6.7%), மலேசியா(5.9%), பாகிஸ்தான் (5.4%), இந்தோனேசியா(5.1%), இந்தியா(5%) எனக் குறிப்பிட்டு உள்ளனர்.
தரவு எங்கிருந்து எடுக்கப்பட்டது :
ஆசிய நாடுகளின் ஜிடிபி சதவீதம் குறித்த தரவுகள் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்தோம். அந்த தேடலில், 2019 ஆகஸ்ட் 30-ம் தேதி Joseph Tino, R&D at Human Longevity என்பவர் Quora தளத்தில் வெளியிட்ட ஆசிய நாடுகளின் ஜிடிபி விகிதம் குறித்த தரவுகளை காண நேரிட்டது. அதில் உள்ள சதவீதமும், மீம் பதிவில் உள்ள சதவீதமும் ஒன்றாக இருக்கிறது. எனினும், அதில் ஆதாரங்கள் இணைக்கப்படவில்லை. செய்திகளின் புகைப்படங்கள் மட்டுமே இணைக்கப்பட்டு இருந்தன.
2019-ல் இந்தியாவின் ஜிடிபி 5 சதவீதமாக குறைந்து உள்ளது. கடந்த 6 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இந்தியாவின் ஜிடிபி சரிவை கண்டு உள்ளதாக உலக அளவில் செய்தியாகி உள்ளது.
ஆசிய நாடுகளின் ஜிடிபி :
Tradingeconomics என்ற இணையதளத்தில் ஆசிய நாடுகளின் ஜிடிபி சதவீதம் குறித்த தரவுகள் ஆண்டுகள் அடிப்படையில் வெளியிடப்பட்டு உள்ளன. அந்த தரவுகளில், பங்களாதேஷ் நாட்டின் ஜிடிபி சதவீதம் டிசம்பர் 2018 வரையில் 7.90% ஆகவும், நேபாளம் நாட்டின் ஜிடிபி 7.10% ஆகவும், பூட்டான் 4.60%(டிசம்பர் 2018வரை), சீனா 6.9% (ஜூன் 2019), மியான்மர் 6.8% (டிசம்பர் 2018), பிலிப்பைன்ஸ் 5.50%(ஜூன் 2019), மலேசியா 4.90% (ஜூன் 2019), பாகிஸ்தான் 5.20% (டிசம்பர் 2018 ), இந்தோனேசியா 5.1%( ஜூன் 2019), இந்தியா 5% ( ஜூன் 2019) எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.
மீம் பதிவிற்கும், நமக்கு கிடைத்த தரவுகளுக்கும் வித்தியாசங்கள் இருப்பதை தெளிவாய் காணலாம். எனினும், பட்டியலில் குறிப்பிட்டது போன்று இந்தியாவின் பொருளாதாரத்தை விட பங்களாதேஷ், நேபால், சீனா, மியான்மர், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளின் ஜிடிபி சதவீதம் அதிகமாகவே இருக்கிறது.
இதைத் தவிர, வியட்னாம்(6.71%), துர்க்மெனிஸ்தான்(6.20%) உள்ளிட்ட பல நாடுகள் ஆசியப் பட்டியலில் இந்தியாவிற்கு முன்னே இருக்கின்றன.
கடைசி இடம் :
ஆசிய நாடுகளில் வேகமாக பொருளாதார முன்னேற்றம் அடைந்து வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா கடைசி இடத்தில் இருக்கிறது எனக் கூறுவது தவறான தகவல். இந்தியாவை விட குறைவான ஜிடிபி சதவீதம் கொண்ட நாடுகள் பல உள்ளன. Tradingeconomics இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தரவரிசையில் வட கொரியா -4.10 சதவீதத்துடன்(டிசம்பர் 2018) இறுதி இடத்தில் இருக்கிறது.
சிறிய நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிட்டுக் கூறினாலும், உலக வங்கியின் தகவலின் படி 2018-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா 7-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.72 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள்.
இதனை 2024-ம் ஆண்டில் 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்த முயற்சிப்பதாக மத்திய அரசு தெரிவித்து இருந்தது. ஆனால், தற்பொழுது உள்ள பொருளாதார சரிவில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் ஆக உயர்வது சாத்தியமில்லை என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவின் பொருளாதார சரிவை மீட்க சரியான திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என ஆளும் தரப்பில் உள்ளவர்களே தெரிவித்து வருகின்றனர்.
முடிவு :
நம்முடைய தேடலில், 2019 ஆசிய நாடுகளின் ஜிடிபி பட்டியலில் இந்தியா கடைசி இடம் எனக் கூறுவது தவறான தகவல். மேலும், ஒவ்வொரு நாடுகளின் ஜிடிபி சதவீதங்களில் மாற்றங்கள் உள்ளன.
எனினும், இந்தியாவை விட பங்களாதேஷ், நேபால், சீனா, மியான்மர், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளின் ஜிடிபி சதவீதம் அதிகமாக இருக்கிறது எனக் கூறிய தகவல் உண்மை. இந்தியாவின் ஜிடிபி மதிப்பு 5%-த்தை தொட்டது எனக் கூறுவதும் உண்மையே.