This article is from Sep 06, 2019

ரஷ்யாவின் வளர்ச்சிக்கு இந்தியா நிதியுதவி அளிக்கிறதா ? | வைரலாகும் செய்தி.

பரவிய செய்தி

ரஷ்யாவின் வளர்ச்சிக்காக 1 பில்லியன் டாலர் நிதி கொடுத்து உதவுகிறது இந்தியா.

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவின் பொருளாதார நிலை சரிவை நோக்கி செல்வதால் ஆட்சியாளர்கள் மீது சமூக வலைதளவாசிகள் கண்டனங்களையும், விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இனி வரும் காலங்களில் இந்தியாவின் பொருளாதாரம் மீளுமா அல்லது சரிவை நோக்கி செல்லுமா என்பதை கணிக்க இயலாத நிலையில் இருக்கிறது.

இந்நிலையில், ரஷ்யாவின் வளர்ச்சிக்காக இந்தியா 1 பில்லியன் டாலரை நிதியாக கொடுத்து உதவுவதாக வெளியான செய்தி மீம் வடிவில் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அதில், நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி சேனலின் ட்விட்டர் பதிவை வைத்து வைரலாகும் மீம் உடைய உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு கேட்டுக் கொண்டனர்.

ட்விட்டர் :

இதையடுத்து, நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திற்கு சென்று ஆராய்கையில் செப்டம்பர் 5-ம் தேதி ” ரஷ்யாவின் வளர்ச்சிக்காக 1 பில்லியன் டாலர் நிதி கொடுத்து உதவுகிறது இந்தியா..” என்ற தலைப்பில் ட்விட் செய்திருக்கிறார்கள். சேனலின் இணையதளத்தில் செய்தி வெளியாகி இருக்கிறது. ஆனால், அந்த பதிவுகள் உடனடியாக நீக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியா தரப்பில் 1 பில்லியன் டாலர்களை கடனாக(லைன் ஆஃப் கிரெடிட்) அளிப்பதாக கூறியதை நிதியுதவி எனக் கூறியதால் நீக்கி உள்ளனர்.

ரஷ்ய வளர்ச்சி :

ரஷ்ய நாட்டின் தூர கிழக்கு(ஃபார் ஈஸ்ட்) பகுதியில் வியாபார வளர்ச்சியையும், முதலீடுகளை அதிகரிக்க நடைபெறும் நிகழ்ச்சியே கிழக்கு பொருளாதாரம் ஃபோரம். இந்நிலையில், விலாடிவோஸ்டாக்கில் நடந்த 5-வது கிழக்கு பொருளாதார ஃபோரம் நிகழ்ச்சியில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ” இந்தியாவின் தரப்பில் இருந்து ரஷ்யாவின் ” ஃபார் ஈஸ்ட்” (தூர கிழக்கு) பகுதியின் வியாபார மற்றும் முதலீடு வளர்ச்சிக்காக 1 பில்லியன் டாலர்கள் கடன் (லைன் ஆஃப் கிரெடிட்) அளிக்க முன்வருவதாக ” எனத் தெரிவித்து இருப்பதாக செய்திகளில் வெளியாகி உள்ளது.

” கிழக்கு ஆசியப் பகுதியில் இருக்கும் தேசங்களுடன் ” ஆக்ட் ஈஸ்ட் ” என்னும் கொள்கையின் கீழ் எனது தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்து இயங்கி வருகிறது. இன்று வெளியான அறிவிப்பின் மூலம் ” ஆக்ட் ஃபார் ஈஸ்ட் பாலிசி ” இல் மிகப்பெரிய முன்னேற்றம் இருக்கும் என நம்புவதாக மோடி தெரிவித்து இருக்கிறார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக ரஷ்யா சென்ற பொழுது ” கிழக்கு பொருளாதாரம் ஃபோரம் ” நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். மேலும், ரஷ்யாவின் தூர கிழக்கு பகுதிக்கு பயணித்த முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடியே.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader