This article is from Aug 03, 2019

சத்தமில்லாமல் 1,21,000 மெட்ரிக் டன் பிளாஸ்டிக்கை இறக்குமதி செய்யும் இந்திய நிறுவனங்கள் !

பரவிய செய்தி

பாகிஸ்தான் உள்பட 25 நாட்டில் இருந்து 1.21 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்யும் இந்திய கம்பெனிகள் : தொண்டு நிறுவன ஆய்வில் அதிர்ச்சி தகவல். உள்நாட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாதுன்னு தடை போடுவாங்க. ஆனா வெளிநாட்டில் இருந்து டன் கணக்கில் இறக்குமதி பண்ண அனுமதி கொடுப்பாங்க. அடுத்த நாட்டு கழிவை கொட்ட இந்தியா என்ன குப்பை தொட்டியா ?

மதிப்பீடு

விளக்கம்

ந்தியாவில் மக்கள் உபயோகிக்கும் பிளாஸ்டிக்கின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தினால் நாடு முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகள் மலையாய் குவிந்து கிடக்கின்றன. எங்கு சென்றாலும் உங்களால் பிளாஸ்டிக் கழிவுகளை காணாமல் இருக்க முடியாது என்ற நிலைமைக்கு மோசமாகி விட்டது. ஒவ்வொரு மாநில அரசும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை பிறப்பித்து உத்தரவிட்டும் வருகின்றன.

எனினும், இங்குள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படாமல் குப்பையாகவே குவிந்து காலம்காலமாக மட்காமல் நிலத்திலேயே தங்குகின்றன. இந்நிலையில் தான், அயல் நாடுகளில் இருந்து இந்தியா நிறுவனங்கள் லட்சக்கணக்கான டன்களில் பிளாஸ்டிக் கழிவுகளை சத்தமில்லாமல் இறக்குமதி செய்வதாக ஓர் தொண்டு நிறுவனம் தன்னுடைய ஆய்வில் தெரிவித்து இருக்கிறது.

பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் ஸ்ம்ரிதி மன்ச்(PDUSM) என்ற என்.ஜி.ஓ அமைப்பு நடத்திய ஆய்வில், ” 1,21,000 மெட்ரிக் டன் அளவிற்கு மேலான பிளாஸ்டிக் கழிவுகளை இந்தியா நிறுவனங்கள் சத்தமில்லாமல் இறக்குமதி செய்கின்றன. இது பிளாஸ்டிக் மாசுபாட்டை குறைக்க மேற்கொள்ளும் முயற்சிகளை பாதிப்படையச் செய்யும். இதில், 55,000 மெட்ரிக் டன் அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இல் இருந்து இறக்குமதி செய்கின்றனர். இந்த இறக்குமதியானது மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 25 நாடுகளில் இருந்து மேற்கொள்ளப்படுகிறது ” எனத் தெரிவித்து உள்ளனர்.

இந்தியாவில் மறுசுழற்சி செய்பவர்கள் மற்றும் பிளாஸ்டிக் நிறுவனங்கள், பயன்படுத்திய PET பிளாஸ்டிக் பாட்டில்களை செதில்கள் மற்றும் கட்டிகள் போன்ற வடிவில் இறக்குமதி செய்கின்றன. இப்படி டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகளை ஒவ்வொரு நாளும் பயன்படுத்தும் பொழுது அவற்றில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் கழிவுகள் நிலத்திலும், கடலிலுமே கொட்டப்படுகின்றன என்பதையும் குறிப்பிட்டு உள்ளனர்.

2018 முதல் 2019 வரை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஆய்வில், 19,000 மெட்ரிக் டன் அளவிற்கும் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் இந்திய தலைநகர் டெல்லிக்கு கொண்டு செல்லப்படுகிறது. மறுசுழற்சி செய்யும் நிறுவனங்கள் பிளாஸ்டிக் கழிவுகளை செதில்களாகவும், கட்டிகளாகவுமே வாங்க விரும்புகின்றன. இந்தியாவில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து, அவற்றை மறுசுழற்சி செய்யும் செலவை விட இறக்குமதி செலவு குறைவு என்பதால் பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்யவே விருப்பம் கொள்கின்றனர்.

இந்தியாவில் 13 மில்லியன் டன்கள் அளவில் பிளாஸ்டிக் கழிவுகளை உபயோகித்து 4 மில்லியன் டன் அளவிற்கு மட்டுமே மறுசுழற்சி செய்தனர். ஆகையால், உள்நாட்டு பிளாஸ்டிக் மறுசுழற்சி நிறுவனங்களை ஊக்குவிக்க, 2015-ல் PET பாட்டில்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதியை இந்திய அரசு தடை செய்தது. ஆனால், 2016-ல் Special Economical Zones(SEZ)-ல் உள்ள ஏஜென்சி மூலம் பிளாஸ்டிக் இறக்குமதிக்கு அனுமதி அளிக்கும் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இப்படி இறக்குமதி செய்யும் பிளாஸ்டிக் கழிவுகளின் எண்ணிக்கை 2016-17-ல் 12,000 டன்னில் இருந்து 2017-18-ல் 48,000 டன் ஆக உயர்ந்துள்ளது. தற்பொழுது 1 லட்சம் மெட்ரிக் டன்களுக்கு மேலாக அதிகரித்து இருக்கிறது.

இங்குள்ள பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய வழியில்லாமல் குப்பைகளாய் விட்டு வைத்து விட்டு, அயல் நாடுகளில் இருந்து செலவு குறைவு என்பதற்காக லட்சக்கணக்கான மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகளை இந்திய நிறுவனங்கள் இறக்குமதி செய்வது நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்தும் பயனில்லை என்பதை எடுத்துரைக்கிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader