இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வழங்கும் ஈரான்: மோடியால் நிகழ்ந்ததா ?

பரவிய செய்தி

முதன் முறையாக அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்திய ரூபாய்க்கு ஈரான் கச்சா எண்ணெய் தர சம்மதம் தெரிவித்து விட்டது. இறங்கி அடிக்கும் மோடி, எதிர்பார்க்கவில்லை அமெரிக்கா.

மதிப்பீடு

சுருக்கம்

ஈரானிடம் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்வது மோடியின் ஆட்சியில் ஆரம்பிக்கவில்லை. 2012-ம் ஆண்டிலேயே தொடங்கி உள்ளது.

விளக்கம்

அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்தியா-ஈரான் இடையே கச்சா எண்ணெய் வர்த்தகத்தை இந்திய ரூபாயில் மேற்கொள்ள ஈரான் சம்மதம் தெரிவித்து உள்ளது எனவும், மோடியின் இந்த செயலால் அமெரிக்க டாலரை சார்ந்து இல்லாமல் இந்தியா ரூபாய் மதிப்பு உயரும் எனவும் சில பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

இந்தியா-ஈரான் ரூபாயில் வர்த்தகம்:

இந்தியா ஈரான் நாட்டிடம் மேற்கொள்ளும் கச்சா எண்ணெய் வர்த்தகம் டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயிலேயே தொடரலாம் என ஈரான் அரசு ஒப்புதல் அளித்தது என்ற தகவல் உண்மையே.!! ஆனால், இதற்கு பின்னால் மோடியின் ஆட்சியே உள்ளது போன்ற மாய பிம்பத்தை தோற்றுவிக்கின்றனர்.

பிரதமர் மோடியின் ஆட்சியில் கச்சா எண்ணெய் வர்த்தகம் ரூபாய் மதிப்பில் தொடங்கியது என்பது முற்றிலும் தவறான தகவல். 2012-ம் ஆண்டிலேயே இந்திய ரூபாய் சார்ந்த வணிக பரிமாற்றம் தொடங்குவதாக செய்திகள் வெளியாகின.

அணு ஆயுத திட்டம் தொடர்பாக ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடையை அமல்படுத்திய காரணத்தினால் இந்தியா உடனான வணிகத்தை இந்திய ரூபாயில் மேற்கொள்ள அந்நாடும் ஒப்புதல் அளித்தது.

அதுமட்டுமின்றி, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 45 சதவீதம் இந்திய ரூபாயே வழங்குவதாக ஈரான் நாட்டின் தூதர் கூறியதாக செய்திகளில் வெளியாகி இருந்தது.

ஈரானிடம் இருந்து பெறும் கச்சா எண்ணெய் எவ்வாறு இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்யப்படுகிறதோ, அதேபோல் இந்தியாவில் இருந்து ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அரிசி, ஜவுளி பொருட்கள், டீ, காஃபி, மருந்து பொருட்கள் அனைத்திற்கும் இந்திய ரூபாயே திருப்பி வழங்கப்படுகிறது.

ஆக, இந்தியா-ஈரான் இடையே இந்திய ரூபாயில் வர்த்தகம் மோடி அரசின் முயற்சியால் கொண்டு வரப்பட்டது என்பது முற்றிலும் தவறான தகவல் என அறிய முடிகிறது.

அரிசி – கச்சா எண்ணெய் பரிமாற்றம் : 

நவம்பர் 4-ம் தேதி முதல் ஈரான் நாட்டிற்கு அரிசி வழங்கி கச்சா எண்ணெயை பரிமாற்றம் செய்ய உள்ளது இந்தியா. பழமையான பண்டமாற்று முறையை நவீனமாக்கி அமெரிக்காவின் டாலரை சார்ந்து இருப்பது குறைந்து இந்திய ரூபாய் புதிய உச்சத்தை தொடும். மோடியின் முயற்சி இந்தியாவை உயர வைக்கும் என பிஜேபியின் மகிளா மோர்ச்சாவின் சோசியல் மீடியா உடைய தேசிய பொறுப்பாளர் ப்ரித்தி காந்தி பதிவிட்டு இருந்தார்.

இந்தியா மற்றும் ஈரான் இடையே கச்சா எண்ணெய் வழங்கி அரிசி ஏற்றுமதி செய்யும் பழங்கால பண்டமாற்று முறை போன்று எந்தவொரு ஒப்பந்தமும் இல்லை. கச்சா எண்ணெய்க்கு வழங்கும் ரூபாயில் அரிசி உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்து கொள்கிறது ஈரான்.

ஈரானிடம் இந்திய ரூபாயில் வணிகம் செய்வது போன்று ரஷ்யா மற்றும் வெனிசுலா போன்ற நாடுகளிடமும் இந்திய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button