இந்தியா மற்றும் கேரளாவில் நாள் ஒன்றுக்கு அதிக அளவில் முஸ்லிம் குழந்தைகள் பிறப்பதாகப் பரவும் பொய் !

பரவிய செய்தி

கேரளாவில் அரசு மருத்துவமனையில் ஒரு நாளில் பிறந்த குழந்தைகள் எண்ணிக்கை : இந்து – 37, கிறிஸ்டின் – 12, சீக்கியர் – 17, முஸ்லிம் 167.

இந்திய அளவில் ஒரு நாளில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை விவரம் : இந்து – 3337, கிறிஸ்டின் – 1222, சீக்கியர் – 1117, முஸ்லிம் 58,167.

மதிப்பீடு

விளக்கம்

கேரளாவில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒரு நாளைக்குப் பிறக்கும் குழந்தைகளில், இந்து குழந்தைகள் 37, இஸ்லாமியக் குழந்தைகள் 167 என்ற தகவல் பதிவிடப்பட்டுள்ளது. இதே போல் இந்தியாவில் நாள் ஒன்றுக்குப் பிறக்கும் குழந்தைகளில் 3337 பேர்தான் இந்து குழந்தைகள்,  58,167 இஸ்லாமியக் குழந்தைகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகவல் கடந்த சில ஆண்டுகளாகவே சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

உண்மை என்ன ? 

கேரளா அரசின் பொருளாதார மற்றும் புள்ளியியல் துறை சார்பில் 2021ம் ஆண்டுக்கான அறிக்கை ஒன்று 2023, மே மாதம் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் கேரளாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளில் எண்ணிக்கை, அவர்களின் மதம் போன்ற பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளது. 

குழந்தை பிறப்பு குறித்த எண்ணிக்கை மதம் வாரியாக வகைப்படுத்தியது மட்டுமின்றி, குழந்தை பிறப்பின் போது தாயின் வயது, எத்தனையாவது குழந்தை, குழந்தை பிறந்த இடம் நகரமா, கிராமமா என்கிற விவரங்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதன்படி, கேரளா மாநிலத்தில் 2021ம் ஆண்டு ஒட்டு மொத்தமாக 4,19,767 குழந்தைகள் பிறந்துள்ளன. இதன்படி, சராசரியாக நாள் ஒன்றுக்கு 1,150 குழந்தைகள். இந்த எண்ணிக்கை என்பது கிராமம் மற்றும் நகர பகுதியை சேர்த்ததாகும்.  

இந்த ஒட்டு மொத்த எண்ணிக்கையில் அதிகப்படியாக இந்துக்களுக்கு 1,81,396 (43.2%) குழந்தைகள் பிறந்துள்ளது. அடுத்தபடியாக இஸ்லாமியர்களுக்கு 1,69,296 (40.3%), கிறிஸ்தவர்களுக்கு 59,766 (14.2%) குழந்தைகளும் பிறந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், 2021ம் ஆண்டு கேரள மருத்துவமனையில் பிறந்த 4.14 லட்சம் குழந்தைகளில், 68 சதவீதம் தனியார் அல்லது அரசு சாரா மருத்துவமனையிலும், 32 சதவீதம் அரசு மருத்துவமனையிலும் பிறந்துள்ளன. அவற்றில் அரசு மருத்தவனையில் எந்த மதத்தை சேர்ந்த எத்தனை குழந்தைகள் பிறந்தன எனக் குறிப்பிடப்பவில்லை.  

இந்திய அளவில் : 

இதேபோல் இந்திய அளவில் பிறக்கும் குழந்தைகளில் நாள் ஒன்றுக்கு இஸ்லாமிய மதத்தினருக்கு 58,167 குழந்தைகள் பிறப்பதாகவும் ஒரு தகவல் பரப்பப்படுகிறது. 

இது முற்றிலும் தவறாத தகவலாகும். பிறக்கும் குழந்தைகளின் மதம் சார்ந்த எண்ணிக்கை குறித்து ஒன்றிய அரசு எந்த தரவுகளையும் வெளியிடவில்லை. 

இந்தியாவின் கருவுறுதல் விகிதம் என்பது ஒட்டு மொத்தமாகவே குறைந்துள்ளது. இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும் (சராசரியாக ஒரு பெண் எத்தனை குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார் என்பதாகும்). ‘Pew Research Center’ அறிக்கையின்படி, 1992–93 கால கட்டத்தில் இந்து பெண்களின் கருவுறுதல் விகிதம் என்பது 3.3 ஆகவும், இஸ்லாமியப் பெண்களின் கருவுறுதல் விகிதம் என்பது 4.4 ஆகவும் இருந்தது. அது தற்போது முறையே 1.9 மற்றும் 2.3 எனக் குறைந்துள்ளது. இந்துக்களை காட்டிலும் இஸ்லாமிய பெண்களின் கருவுறுதல் விகிதம் தான் அதிக அளவு குறைந்துள்ளது (2.1 குறைந்துள்ளது).

மேலும் 1992-93 முதல் கருவுறுதல் விகிதமானது இந்து பெண்களிடையே 41.2 சதவீதமும், இஸ்லாமியப் பெண்களிடையே 46.5 சதவீதமும் குறைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையின்படி, இந்திய முஸ்லிம்களின் மக்கள் தொகை எண்ணிக்கை என்பது மற்ற மதத்தினரைக் காட்டிலும் அதிகரித்துள்ளது. இதற்குக் கருவுறுதல் விகிதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றமே காரணம். அதே நேரத்தில் இஸ்லாமிய பெண்களின் கருவுறுதல் விகிதமும் அதிகப்படியாக குறைந்துள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த 1951ம் ஆண்டு முதல் மதரீதியாக மக்கள் தொகையில் சிறிய மாற்றங்களே நிகழ்ந்துள்ளன. 

2011ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 120 கோடி. இதில் 79.8 சதவீதம் பேர் இந்துக்கள். இது 2001ம் ஆண்டு (80.45%) நிலவரப்படி 0.7 சதவீதம் குறைவானதாகும். இதே காலகட்டத்தில் 13.4 சதவீதமாக இருந்த இஸ்லாமியர்களின் மக்கள் தொகை 14.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனைத் தவிர்த்து கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் மற்றும் ஜைனர்கள் 1951ம்  ஆண்டு கணக்கெடுப்பில் 6 சதவீதமாக இருந்தவர்கள் தற்போதும் ஒப்பீட்டளவில் அதே விகிதத்தில் உள்ளனர். 

கருவுறுதல் என்பது ஒருவரின் சமூகச் சூழல், கல்வி, உடல்நலம், எதிர்காலம் குறித்த திட்டமிடல் என பல்வேறு காரணிகளை உள்ளடக்கியது. மதம் என்பதும் அதன் ஒரு அங்கம். ஆனால், மதம் மட்டுமே ஒருவரை எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என நிர்ப்பந்திப்பதில்லை. 

இவற்றில் இருந்து இந்தியா, கேரளா குழந்தை பிறப்பு எண்ணிக்கை குறித்து பரப்பப்படும் தகவல் உண்மை அல்ல என்பதை அறிய முடிகிறது.

முடிவு : 

நம் தேடலில், இந்தியாவில் நாள் ஒன்றுக்கு  58,167 முஸ்லிம் குழந்தைகளும், கேரளாவில் 167 முஸ்லிம் குழந்தைகளும் பிறப்பதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல என்பதை அறிய முடிகிறது. 

Please complete the required fields.
ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader