This article is from Oct 20, 2019

6 ஆண்டில் உலக வங்கியின் முழு கடனையும் மோடி அடைத்து விட்டாரா ?

பரவிய செய்தி

70 வருடங்களாக இந்தியா உலக வங்கியிடம் மிகப்பெரிய கடனாளி, பிறக்கும் ஒவ்வொரு இந்தியரும் கடனாளியாகவே பிறந்தார்கள். ஒரு சிறந்த பொருளாதார வல்லுனரால் செய்ய முடியாத விசயங்களை, ஒரு டீ விற்பவர் செய்திருக்கிறார். அவர் இந்தியாவின் மற்றும் இந்தியர்களின் விதியை மாற்றியுள்ளார். 6 ஆண்டுகளில் நரேந்திரமோடி உலக வங்கியில் இந்தியா பெற்ற கடனை ஒரு பைசா விடாமல் அனைத்தையும் செலுத்தி உள்ளார். ஐ.நாவில் முழு தொகையும் இந்தியா மூலம் செலுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் பொருளாதார மந்தநிலை இருப்பதாக பேசுபவர் யார் ?

மதிப்பீடு

விளக்கம்

Syed Akbardudin என்பவர் 35 நாடுகள் பட்டியலில் இந்தியா இருப்பதாக பதிவிட்ட ட்விட்டர் பதிவுடன், உலக வங்கியிடம் வாங்கிய அனைத்து கடன்களையும் இந்தியா செலுத்தியுள்ளதாக இருப்பதாக வைரல் செய்தி ஒன்று இந்திய அளவில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சிறந்த பொருளாதார வல்லுனரால் முடியாததை பிரதமர் மோடி செய்து இருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியா உலக வங்கியிடம் அனைத்து கடன்களையும் செலுத்தி விட்டதாக பரவி வரும் பதிவின் ஸ்க்ரீன்ஷார்டை யூடர்ன் தளத்தின் முகநூல் பக்கத்தில் மற்றும் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஃபாலோயர்கள் பலரும் அனுப்பி, இதன் உண்மைத்தன்மையைக் கூறுமாறு கேட்டுக் கொண்டனர்.

உண்மை என்ன ? 

மேற்காணும் ஸ்க்ரீன்ஷார்ட் உடன் சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன. அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக இங்கே விரிவாக காண்போம்.

அக்பருதீன் உடைய ட்வீட் : 

Twitter post archived link 

சயீத் அக்பருதீன் தன் ட்விட்டர் பக்கத்தில் அக்டோபர் 11-ம் தேதி பதிவிட்ட பதிவில், ” 193 நாடுகளில் 35 நாடுகள் மட்டுமே ஐக்கிய நாடுகள் சபைக்கு நிலுவை தொகையை செலுத்தியுள்ளது. அனைத்தும் செலுத்தப்பட்டு விட்டது ” என அந்நாடுகளின் பட்டியலை பதிவிட்டு இருந்தார். அதில் , இந்தியாவும் இடம்பெற்று இருந்தது.

சயீத் அக்பருதீன் ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாவர். அவர் கூறிய தகவல் என்னவென்றால், ” ஐக்கிய நாடுகள் சபைக்கு செலுத்த வேண்டிய தொகை முழுவதும் செலுத்தப்பட்டு உள்ளது என்பதே, உலக வங்கியிடம் வாங்கிய கடன் குறித்து அல்ல ” .

ஐ.நா சபைக்கு தேவையான வருடாந்திர பட்ஜெட்டிற்கு பணம் வழங்கிய 35 நாடுகளின் விவரங்களை வெளியிட்டு உள்ளது ஐநா. இந்திய தரப்பில் இருந்து முழு தொகையும், சரியான நேரத்திற்கு செலுத்தப்பட்டு இருப்பதாக NDTV செய்தியில் அக்டோபர் 9-ம் தேதி வெளியாகி இருக்கிறது. அந்த விவரத்தையே சையத் அக்பருதீன் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

2019 ஆக்டோபர் 11-ம் தேதி “ The United nation financial situation  ” வெளியிட்ட அறிக்கையில், சயீத் அக்பருதீன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சர்வதேச நாடுகளின் விவரங்கள் உள்ளதை காணலாம் “.

உலக வங்கி கடன் : 

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக் காலத்தில் இந்தியா உலக வங்கியிடம் பெற்ற அனைத்து கடன்களையும் செலுத்தி விட்டதாக வதந்திகளை பரப்பி வந்ததை யூடர்ன் பலமுறை உண்மை எதுவென்று செய்தி வெளியிட்டு வருகிறது.

மேலும் படிக்க : இந்தியா உலக வங்கியிடம் கடன் வாங்குவதில்லையா ?

உலக வங்கியின் தரவுகளின் படி, 2019-ல் இந்தியாவிற்கு 3277 மில்லியன் அல்லது 3.2 பில்லியன் டாலர்களை கடனாக கொடுக்க உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொரு ஆண்டிற்கு 3 பில்லியன் டாலர்கள் பெறப்பட்டு வருகிறது. வைரலாகும் ஸ்க்ரீன்ஷார்டில் கூறியது போன்று இந்தியா உலக வங்கியிடம் வாங்கிய கடன்களை முழுவதுமாக திரும்பி செலுத்தவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் அரசு சார்ந்த திட்டங்களுக்கு உலக வங்கியிடம் கடன் வாங்கி வருகிறோம் என்பதே உண்மை. 2019 ஜூன் மாதம் ஜார்கண்ட் மாநிலத்தின் நகராட்சி மேம்பாட்டு திட்டத்திற்கு உலக வங்கி 147 மில்லியன் டாலர் கடனை ஜார்கண்ட் மாநிலத்திற்கு வழங்குவதை ஏற்றுக் கொண்டதாக Press Information Bureau வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் கடன் சுமை : 

இந்திய மத்திய நிதியமைச்சகம் 2018 டிசம்பர் 11-ம் தேதி அன்று வெளியிட்ட, செப்டம்பர் காலிறுதி வரையிலான மத்திய அரசின் கடன் குறித்த தரவுகளில், இந்தியாவின் மொத்த கடனாக 82,03,253 கோடியாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். 2014-ம் வருடம் இந்தியாவின் மொத்த கடன் 54 லட்சம் கோடியாக இருந்தது, 2019-ம் வருடம் இந்தியாவின் மொத்த கடன் 82 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க : இந்தியாவின் கடன் 82 லட்சம் கோடி ! | நான்கரை ஆண்டில் 49 % உயர்வு

முடிவு : 

நம்முடைய தேடலில் இருந்து, இந்தியா உலக வங்கியிடம் வாங்கிய அனைத்து கடன்களையும் செலுத்தி விட்டதாக பரவும் பதிவின் ஸ்க்ரீன்ஷார்ட் தவறான தகவலே. அதனுடன் இணைக்கப்பட்ட ட்விட்டர் பதிவு ஆனது ஐக்கிய நாடுகள் வரவு செலவிற்கு இந்தியா தரப்பில் செலுத்தப்பட்ட தொகை பற்றியே. உலக வங்கியின் கடன் அல்ல.

இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பல்வேறு மேம்பாட்டு திட்டங்களுக்கு, கல்விக்கு, சுகாதார சீர்திருத்த திட்டங்கள் என பலவற்றிற்கும் உலக வங்கியிடம் கடன் வாங்கிக் கொண்டு தான் இருக்கிறோம்.

உலக வங்கியிடம் இந்தியா வாங்கிய கடன்கள் செலுத்தி முடிந்தப்பாடில்லை, அதேபோல் நரேந்திர மோடியின் ஆட்சியில் உலக வங்கியிடம் முழு கடனும் செலுத்தப்பட்டு விட்டதாக பரவும் வதந்திகளுக்கும் நின்றபாடில்லை.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader