மத்தியில் ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும் என எடப்பாடி பழனிசாமி கூறியதாகப் பரவும் தவறானச் செய்தி !

பரவிய செய்தி

“மத்தியில் ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும்” – எடப்பாடி பழனிசாமி உறுதி

X link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகிய நிலையில் அக்கட்சியின் 52வது ஆண்டு துவக்க விழா பொதுக் கூட்டம் சங்கரன்கோவிலில் கடந்த 18ம் தேதி நடைபெற்றது. 

அக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாக ‘நக்கீரன்’ செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், ‘பா.ஜ.க. கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. விலகியதால் பலர் அச்சத்தில் இருக்கிறார்கள். தேசிய கட்சிகள் மாறி மாறி மத்தியில் ஆட்சி அமைக்கும். மக்களவை தேர்தலில் அ.தி.மு.க. சிறப்பான கூட்டணி அமைத்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். அ.தி.மு.க. யாருக்கும் அஞ்சியதில்லை. பயப்படவில்லை. தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். நாங்கள் பா.ஜ.க.வின் ‘பி’ டீம் அல்ல. மத்தியில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும்’ எனப் பேசியதாக உள்ளது. 

இதேபோல், ‘மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: பாஜ கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் எடப்பாடி பரபரப்பு பேச்சு’ என்ற தலைப்பில் ‘தினகரன்’ இணையதளத்திலும் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் ‘இந்து தமிழ் திசை’ இன்றைய (20.10.2023) நாளிதழில் ‘மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும்! – எடப்பாடி பழனிசாமி’ கூறியதாக 16வது பக்கத்தில் கருத்துச் சித்திரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

உண்மை என்ன ?

சங்கரன்கோவில் பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய முழு வீடியோ ‘நியூஸ் ஜெ’ யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் 16வது நிமிடத்திற்கு மேல் (16:27) அவர் பேசியது, “பாரதிய ஜனதா கட்சியிலிருந்து அண்ணா திமுக பிரிந்து விட்டது என நாம் கூறினால். இல்லை இல்லை அவர்கள் B டீமாக செயல்படுகிறீர்கள் என்கிறார்கள். உனக்கு (மு.க.ஸ்டாலின்) என்ன கவலை. அண்ணா திமுக கட்சி நாங்கள் அதை விட்டுப் பிரிந்து வந்து விட்டோம். நீ ஏன் கவலைப்படுகிறாய். பயப்படுகிறார். அச்சப்படுகிறார். 

ஆகவே பயம் வந்து விட்டது ஸ்டாலினுக்கு. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெறாது. திமுக கூட்டணி வெற்றி பெறாது. ‘நீங்கள் யாரைப் பிரதமராகச் சொல்லுவீர்கள்’ என்று கேட்கிறார். நாங்கள் யாரைப் பிரதமராகச் சொல்வது இருக்கட்டும். இந்தியா கூட்டணியில் நீங்கள் அங்கம் வகிக்கிறீர்கள். உங்கள் பிரதமர் யார் என்று ஸ்டாலின் சொல்ல முடிந்ததா? தைரியம் இருந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம்.

அண்ணா திமுக-வை பொறுத்த வரையில் தேசிய கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. ஆனால், தமிழ்நாட்டு மக்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. நம்மை ஒரு துரும்பாகத்தான் பார்க்கின்றார்கள். ஆகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலேயே சிறப்பான கூட்டணி அமைக்கப்படும். பாராளுமன்ற தேர்தலிலே வெற்றிபெறும். 

நமது எண்ணம் தமிழக மக்களின் உரிமையைக் காக்க வேண்டும். தமிழகத்திற்கு புதிய திட்டங்களை மத்தியிலே பெற வேண்டும். திட்டங்களுக்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கும், தமிழகத்தில் உள்ள சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் எங்கள் கழகத்தின் தேர்தல் முழக்கம். 

ஸ்டாலின் அவர்களே உங்களைப் போல் மத்தியில் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று அண்ணா திமுக நினைக்கவில்லை. இந்த தமிழ்நாட்டு மக்கள் தான் எஜமானர்கள். இந்த தமிழ்நாட்டு மக்கள் தான் வாக்களிக்கின்றார்கள். வாக்களிக்கின்ற மக்களுக்கு நன்மை செய்யவேண்டும். வாக்களிக்கின்ற மக்களின் குரல் நாடாளுமன்றத்திலே ஒலிக்க வேண்டும். அதுதான் அண்ணா திமுக-வின் லட்சியம். 

ஆகவே யாருக்கும் அண்ணா திமுக அஞ்சியது கிடையாது. அஞ்சப் போவதும் இல்லை. ஸ்டாலின் அவர்களே, பாண்டிச்சேரியுடன் சேர்த்து தமிழகத்தில் 40 நாடாளுமன்றங்கள் இருக்கிறது. 40-திலும் அண்ணா திமுக வெல்லும். மீண்டும் தமிழகத்திலே ஆட்சி மாற்றம் வரும். 2026ல் அண்ணா திமுக ஆட்சிக்கு வரும். 2024ல் அதற்கு அச்சாணி அமைப்போம்” என்று கூறியுள்ளார்.  

அதாவது, மத்தியில் தேசிய கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்நாட்டைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. நம்மை ஒரு துரும்பாகத்தான் பார்க்கின்றார்கள் என்று ஒரு இடத்தில் பேசியுள்ளார். பிறகு, 2026ல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வருவதற்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 இடங்கள் வெற்றி பெற்று அச்சாணியை அமைப்போம் என்றும் பேசியுள்ளார்.

அவர் எந்த இடத்திலும் மத்தியில் ஆட்சி மாற்றம் வரும் எனக் கூறவில்லை. அவர் பேசியது திரித்து தவறாகச் செய்தி வெளியிட்டுள்ளனர். 

முடிவு :

மத்தியில் ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாக ஊடகங்கள் வெளியிட்ட செய்தி தவறானது. அவர் அப்படிக் கூறவில்லை. 2026ல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வருவதற்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் (2024) 40க்கு 40 இடங்கள் வெற்றி பெற்று அச்சாணியை அமைப்போம் என்றுதான் கூறியுள்ளார்.

Please complete the required fields.
Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader