ரஷ்யா-உக்ரைன் போரை 6 மணி நேரம் இந்தியா நிறுத்தியதாக வதந்தி!

பரவிய செய்தி

இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக வெளியே வருவதற்காக இந்தியா 6 மணி நேரம் போரை நிறுத்தியது. இது மோடியால் மட்டுமே செய்யப்பட்டது.

Facebook link 

மதிப்பீடு

விளக்கம்

ரஷ்யா – உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரில் இந்திய மாணவர்களை மீட்க  கார்கிவ் பகுதியில் 6-8 மணி நேரம் போரை இந்தியா நிறுத்தி வைத்ததாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிரா பாஜகவின் ட்விட்டர் பக்கத்திலும் இத்தகவல் பகிரப்பட்டு இருக்கிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் தன்னுடைய பேட்டியில் அதைக் குறிப்பிட்டு பேசி இருக்கிறார்.

Archive link 

Archive link 

உண்மை என்ன ?  

மார்ச் 2-ம் தேதி, உக்ரைனில் சிக்கித் தவிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் இந்திய தூதரகம் அவசர ஆலோசனை வழங்கியது. மக்கள் உடனடியாக கார்கிவை விட்டு வெளியேறி பேசொச்சின், பாபே மற்றும் பெஸ்லியுவ்டோவ்காவை அடையுமாறு அறிவுறுத்தி இருந்தது . ஆனால், போர் நிறுத்தம் குறித்து ஏதும் குறிப்பிடவில்லை.

Twitter link 

” கார்கிவ் பகுதியில் இருந்து இந்தியர்கள் தப்பிச் செல்வதற்கு வசதியாக ரஷ்யா போரை 6 மணி நேரம் நிறுத்தி வைத்தது என்ற செய்தியை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்(MEA) மறுத்துள்ளது ” என இந்து ஆங்கில நாளிதழின் ராஜாங்க விவகார ஆசிரியர் சுஹாசினி மார்ச் 3ம் தேதி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

Twitter link 

மார்ச் 3-ம் தேதி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அளித்த பேட்டியில்(20:20) நிமிடத்தில்), ” இதுதான் செல்லக்கூடிய வகையில் இருக்கும் பாதை எனக் குறிப்பிட்ட தகவல்கள் கிடைத்தன. ஆகையால், இந்த நேரத்தில் செல்ல வேண்டிய இடங்கள் இவை என நாங்கள் குடிமக்களுக்கு தெரிவித்தோம்.

யாரோ குண்டுவெடிப்பை (இடைநிறுத்துகிறார்கள்) நடத்துகிறார்கள் அல்லது இதை நாங்கள் ஒருங்கிணைக்கிறோம் எனக் கூறுமளவிற்கு அதை விரிவுப்படுத்துவது என்பது முற்றிலும் தவறானது என்று நான் நினைக்கிறேன் ” எனப் பேசி இருக்கிறார்.

இந்திய மாணவர்களை மீட்கும் பணிக்காக ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துமாறு இந்திய தரப்பில் ஏற்கனவே வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில, உக்ரைன் உடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையில், வோல்னோவாகா மற்றும் மரியுபோல் ஆகிய இரு நகரங்களில் சிக்கி இருக்கும் மக்களை மீட்க தற்காலிகமாக போரை நிறுத்த ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளது.

முடிவு : 

நம் தேடலில், உக்ரைனில் இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக வெளியே வருவதற்காக இந்தியா 6 மணி நேரம் போரை நிறுத்தியதாக பரப்பப்படும் தகவல் தவறானது. அதை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்(MEA) மறுத்துள்ளது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button