பாகிஸ்தான் செல்லும் நதி நீரை இந்தியா தடுத்து நிறுத்தப்போகிறதா ?

பரவிய செய்தி

பாகிஸ்தானுக்கு செல்லும் நதி நீரை தடுத்து நிறுத்தும் முடிவை இந்தியா வெளியிட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ட்விட்டரில் தெரிவித்து உள்ளார்.

மதிப்பீடு

சுருக்கம்


பாகிஸ்தானிற்கு செல்லும் இந்தியாவின் கிழக்கு பகுதியில் இருக்கும் நதியின் நமது பங்கு நீரையே ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மக்களுக்கு விநியோகிக்க முடிவு செய்து இருந்தனர். இது நீண்ட கால திட்டமாகும். புல்வாமா தாக்குதலுக்கு முன்பே இத்திட்டம் தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

விளக்கம்

காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்கம் எப்படி இருக்கும் என அனைவரும் கூர்மையாக கவனிக்கும் நேரத்தில் அந்நாட்டின் மீதான வரியை உயர்த்துவது உள்ளிட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது இந்தியா.

இதைத் தவிர, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானிற்கு செல்லும் நதி நீரை நிறுத்துவது தொடர்பான முடிவை மத்திய பிஜேபி அரசு எடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதனுடன், மத்திய அமைச்சர் நிதின் கட்கரின் ட்விட்டர் பதிவும் இணைக்கப்பட்டுள்ளது.

நிதின் கட்கரி ட்விட்கள் : 

“ பிரதமர் மோடி தலைமையிலான நமது அரசு, பாகிஸ்தானிற்கு செல்கின்ற நதியின் நீரைத் தடுத்து நிறுத்துவது தொடர்பான முடிவை எடுத்துள்ளது. கிழக்கு பகுதியில் இருந்து நதி நீரை ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மக்களுக்கு விநியோகிக்க முடிவு செய்துள்ளதாகவும் “ மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பிப்ரவரி 21-ம் தேதி ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

மற்றொரு பதிவில், “ அணைக் கட்டுமானப் பணியானது ரவி ஆற்றின் ஷாக்பூர்-கண்டி பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. UJH பணித்திட்டத்தின் மூலம் நமது பங்கான நீரை சேமித்து ஜம்மு காஷ்மீர் மக்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படும். இரண்டாவது ரவி-பியஸ் நதியில் இருந்து பாயும் நீர் பிற மாநில பகுதிகளுக்கு வழங்கப்படும் “ எனக் குறிப்பிட்டுள்ளார்.

தவறாக புரிந்து கொள்ளப்பட்டவை :

நிதின் கட்கரியின் ட்விட்டர் பதிவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பாகிஸ்தான் செல்லும் நீரை இந்தியா நிறுத்தப் போவதாக பேசி வருகின்றனர். 

ஆனால், நிதின் கட்கரி ட்விட்டர் பதிவில், இந்தியாவின் கிழக்கு நதியின் நமது பங்கு நீரையே சேமித்து மக்களின் குடிநீர் தேவைக்கு வழங்க இருப்பதாக மட்டுமே கூறியுள்ளார். மழைக்காலங்களில் அதிகளவில் நீர் பாகிஸ்தான் நோக்கி செல்வதால் அவற்றை சேமித்து பயன்படுத்த இத்திட்டம்.

கண்டி மற்றும் UJH பணித்திட்டங்கள் மூலம் பாகிஸ்தானிற்கு செல்லும் நதி நீரியின் அளவு குறைக்கப்படும். எனினும், இந்த திட்டம் பாகிஸ்தானை பழிவாங்கும் நோக்கத்தில் அறிவிக்கப்பட்டது அல்ல. கிழக்கு பகுதியில் இருந்து செல்லும் ஆறுகளில் இருந்து அணைகள் மூலம் நீரை சேமித்து இந்திய மக்களின் குடிநீர் தேவைக்கு வழங்குவதன் மூலம் பாகிஸ்தானிற்கு உடனடி ஆபத்து என்று ஏதுமில்லை.

“ ஏனெனில், கிழக்கு நதிகளின் நீரை 93-95 சதவீதத்திற்கு இந்தியாவும், 6 சதவீதம் நீர் மட்டும் பாகிஸ்தான் செல்வதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன “.

கிழக்கின் ரவி, பயஸ் ஆறுகளின் நீரினை ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மக்களுக்கு வழங்கும் திட்டமானது நீண்ட காலமாக முடிவு செய்யப்பட்டு அதற்காக ஷாக்பூர்-கண்டியில் அணை கட்டும் பணிகள் முன்பே தொடங்கப்பட்டு உள்ளன. இது தேசிய திட்டம் என நிதின் கட்கரி தெரிவித்து இருக்கிறார்.

இந்தியாவின் கிழக்கு நதி நீர் தேசிய திட்டத்தால் “ சிந்து நதிநீர் ஒப்பந்தம் “ -க்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. 1960-ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சிந்து நதிநீர் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், கிழக்கு நதிகளான ரவி, பயஸ், சட்லஜ் உள்ளிட்ட நதிகளின் நீரை தடையின்றி இந்தியா உபயோகித்துக் கொள்ளலாம். மேற்கு நோக்கி செல்லும் சிந்து, செனாப், ஜேலும் ஆற்றின் நீரை பாகிஸ்தான் பயன்படுத்த கட்டுப்பாடுகள் இல்லை.

இந்தியா பாகிஸ்தான் செல்லும் நதி நீரை தடுப்பதாக பரவும் செய்திகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டவையே !

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button