இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிப்பா ?

பரவிய செய்தி
2006-ல் இந்தியாவில் 1,411 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை , 2018 வரையில் 2,967 ஆக உயர்ந்துள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
இயற்கையை தேக்கி வைத்திருக்கும் காடுகளின் சூழலை மற்றும் உணவுச் சங்கிலியை சமநிலைப்படுத்துவது புலிகள் என்பதால் அவை இன்றியமையாத வன உயிரியாக இருக்கிறது. எனினும், இந்தியாவின் தேசிய விலங்கு எனக் கூறப்படும் புலிகளின் எண்ணிக்கை மிகச் சொற்பமே.
காடுகள் அழிக்கப்பட்டு மனித இருப்பிடங்களை உருவாக்கியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலக அளவில் உள்ள காடுகளின் பரப்பளவும், புலிகளின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது. இந்நிலையில், புலிகள் குறித்த விழிப்புணர்விற்காக ஜூலை 29-ம் தேதி சர்வதேச புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
சமீபத்தில் சர்வதேச புலிகள் தினத்தன்று பேசிய பிரதமர் மோடி, ” புலிகளின் கணக்கெடுப்பு முடிவுகள் ஒவ்வொரு இந்தியருக்கும், இயற்கையை நேசிப்பவருக்கும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. 9 ஆண்டுகளுக்கு முன்பாக, 2022-க்குள் புலிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்ந்த வேண்டும் என பீட்டர்பெர்க்கில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்தியாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே அதனை முடித்துள்ளோம் ” என கூறி இருந்தார்.
On #InternationalTigerDay PM @narendramodi releases trailer of movie “Counting Tigers”.
Check out ⬇️ the procedure of counting tigers in India@PrakashJavdekar @moefcc pic.twitter.com/ci4eS0U3fr
— PIB India (@PIB_India) July 29, 2019
அதுமட்டுமின்றி, ” Management Effectiveness & Evaluation of Tiger reserves ” என்ற அறிக்கையையும், புலிகளின் எண்ணிக்கையை கணக்கிட்ட ” Counting Tigers ” படத்தின் வீடியோவையும் வெளியிட்டார்.
2006-ல் இருந்து கேமிரா பொறிகள் மற்றும் கேப்சர்-மார்க்-ரீகேப்சர் முறை ஆகியவற்றை பயன்படுத்தி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை புலிகளின் சதவீதம், ஆண் மற்றும் பெண் எண்ணிக்கை உள்ளிட்ட கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது.
சமீபத்திய கணக்கெடுப்பு தகவலில் இருந்து 2006-ல் இருந்த புலிகளின் எண்ணிக்கையை விட தற்பொழுது உள்ள புலிகளின் எண்ணிக்கை இரு மடங்காக உள்ளது. 2006-ல் இந்தியாவில் இருந்த மொத்த புலிகளின் எண்ணிக்கை 1,411, அதன்பின் 2010-ல் 1,706, பின்னர் 2014-ல் 2226 ஆக இருந்துள்ளது.
தற்பொழுது 2018 வரையில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 2967 ஆக உயர்ந்திருக்கிறது. அதாவது, தோராயமாக 2,603 முதல் 3,346-க்கு இடைப்பட்ட நிலையில் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. புலிகளின் கணக்கெடுப்பிற்கு நாடு முழுவதிலும் 141 இடங்களில் 26,838 கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.
Status of Tigers in India Report-2018 படி, இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 526 புலிகளும், அதற்கு அடுத்தபடியாக கர்நாடகாவில் 524 புலிகளும், உத்தரகாண்ட்டில் 442 புலிகளும் உள்ளன. மற்ற மாநிலங்களிலும் புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 2018 கணக்கெடுப்புபடி தமிழகத்தில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 264-ஐ எட்டி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். எனினும்,பல்வேறு பகுதிகளில் புலிகள் ஊருக்குள் புகுந்து மனிதர்களை தாக்கும் எண்ணிக்கையும் ஒருபுறம் உயர்கிறது. இதனால் புலிகளும் கொல்லப்படுகின்றன. இந்நிலை மாற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன உயிரி ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.