இந்தியா டுடேவில் மமக தலைவர் ஜவாஹிருல்லா புகைப்படம் வெளியானதாக வதந்தி!

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாவின் புகைப்படத்தை ” கறைபடியாத கரம். சேவை அரசியல்- மீண்டு(ம்) உயிர்த்தெழும் ஜனநாயகம் ” எனும் தலைப்பில் இந்தியா டுடே தமிழ் வார இதழின் அட்டைப்பட செய்தி வெளியிட்டதாக ஓர் புகைப்படம் முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மை பற்றி கூறுமாறு ஃபாலோயர் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரான ஜவாஹிருல்லாவின் 2011-16 காலக்கட்டத்தில் ராமநாதபுரம் தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். இந்தியா டுடே தமிழ் வார இதழ் வெளியிட்டதாக பரவும் அட்டைப்பக்கத்தில் 2015 மே 27-ம் தேதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதச் செய்தியில், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வரும் வார இதழ் வெளியீட்டை நிறுத்த உள்ளதாக வெளியாகி இருக்கிறது.
இந்தியா டுடே இதழின் அட்டைப்படம் என பரவும் புகைப்படம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே பரவியப் புகைப்படமாகும். மேலும், 2015-ம் ஆண்டிலேயே மமக தலைவர் ஜவாஹிருல்லா தன்னைப்பற்றி பரவும் அட்டைப்படச் செய்தி வதந்தி என முகநூலில் பதிவிட்டு இருக்கிறார்.
2015 மே 27-ம் தேதி தன் முகநூல் பக்கத்தில், ” இந்தியா டூடே அட்டைப்படச் செய்தியாக என்னைப் பற்றி வெளிவந்ததாக கூறப்படும் செய்தி ஒரு கிராபிக்ஸ் மாய்மாலம். இந்தியா டுடே தமிழ் பதிப்பு பிப்ரவரியில் நிறுத்தப்பட்டு விட்டது. இந்தியா டூடேவில் வந்த அட்டை செய்தி யாரே திட்டமிட்டு பரப்பி கொண்டு இருக்கிறார்கள் இந்த அட்டை செய்தி உண்மை இல்லை தேவையில்லாத வதந்தி இதை யாரும் ஷேர் செய்யவேண்டாம் ” எனப் பதிவிட்டு இருந்தார்.
முடிவு :
நம் தேடலில், இந்தியா டுடே தமிழ் வார இதழ் மமக தலைவர் ஜவாஹிருல்லா பற்றிய அட்டைப்படத்துடன் கூடிய கட்டுரையை வெளியிட்டதாக உலாவும் புகைப்படம் ஃபோட்டோஷாப் செய்யப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக இந்த போலியான புகைப்படம் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது என அறிய முடிகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.