This article is from Apr 29, 2018

இந்தியா உலக வங்கியிடம் கடன் வாங்குவதில்லையா ?

பரவிய செய்தி

திரு.நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக பதவியேற்றது முதல் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியா உலக வங்கியிடம் கடன் வாங்குவதை நிறுத்தி உள்ளது . இந்தியா வளர்ச்சியின் உச்சத்திற்கு சென்றுக் கொண்டிருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மதிப்பீடு

சுருக்கம்

இந்தியாவில் செயல்படுத்தப்படும் பெரும்பாலான வளர்ச்சி திட்டத்திற்கான மூலதனம் அனைத்தும் உலக வங்கியின் கடனை சார்ந்தே அமைந்துள்ளது. குறிப்பாக, 2015-ம் ஆண்டில் உலக வங்கியிடம் கடன் பெறுபவர்களில் இந்திய முதலிடத்தை பிடித்துள்ளது.

விளக்கம்

ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த தேவைப்படும் நிதியானது பெரும்பாலும் உலக வங்கியின் கடனை சார்ந்தே இருந்து வருகிறது. நம் நாட்டு அரசாங்கத்தின் பட்ஜெட்டை சீர்குலைக்கச் செய்வதே கடன் சுமைகள் தான். வாங்கிய கடன்கள், அதற்கான வட்டிகள் மற்றும் புதிய கடன்கள் போன்றவையால் தான் நாளுக்கு நாள் கடன் சுமைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

2015 ஆம் ஆண்டில் உலக வங்கியிடம் கடன் பெறுபவர்களில் இந்தியா உச்சவரம்பை எட்டி முதல் இடத்தைப் பிடித்தது.இதைத் தொடர்ந்து, 2016-ம் ஆண்டில் மத்திய அரசின் கடன் தொகை ரூ 45 லட்சம் கோடியாகும். மாநில அரசுகளின் கடன் சுமைகளையும் சேர்த்தால் மொத்தம் ரூ 65 லட்சம் கோடியாக இருந்தன. இவை சென்ற ஆண்டிற்கான கடன் தொகையாகும். தற்போதைய, நாட்டின் கடன் நிலவரம் மேலும் அதிகரித்திற்கும் என்பதில் சந்தேகமில்லை.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில், பல மாநிலங்களின் இயற்கை பேரழிவு சீரமைப்பு, நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி, கல்வி மேம்பாடு, விவாசாய வளர்ச்சி, சூரிய ஒளி மின்திட்டம், ஊரக வளர்ச்சி போன்றவற்றில் தொடங்கி “தூய்மை இந்தியா திட்டம்” வரைக்கும் பல்லாயிரக்கணக்கான கோடிகள் கடனாக உலக வங்கியிடம் பெறப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்தியாவில் வடக்கின் லூதியான முதல் கிழக்கின் கொல்கத்தா வரையிலான 1,840 கி.மீ தொலைவிற்கு சரக்கு ரயில் பாதை அமைப்பதற்கான திட்டத்திற்கு மூன்றாவது தவணையாக மட்டும் 650 மில்லியன் டாலர்களைஅக்டோபர் 2016-ல் உலக வங்கி வழங்கியுள்ளது. இவ்வாறு பல்வேறு திட்டங்களுக்கு உலக வங்கியிடம் இந்திய கடன் பெற்றுக் கொண்டே தான் இருக்கின்றது.

2015-2017 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் 50 திட்டங்களை செயல்படுத்த உலக வங்கியிடம் 96,560 மில்லியன் டாலர்களை இந்தியாவிற்கு வழங்க ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் உள்ளன. உதராணமாக, 2017 ஆம் ஆண்டில் international bank of Reconstruction and Development(IBRD) இந்தியாவில் Skill india mission-க்கான 3,188 மில்லியன் டாலர்களில் 250 மில்லியன் டாலர்களை வழங்க உறுதி அளித்தது. வளரும் நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு கடன் வழங்கும் IBRD உலக வங்கியின் பிரிவு ஆகும். 6 ஆண்டுகளாக நடைபெறும் திட்டமான Skill india mission முடிவடையும் தேதியான 2023 மார்ச் 31-ல் உலக வங்கிக்கு திருப்பி செலுத்த வேண்டும்.

2015-ல் தொடங்கப்பட்ட பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு மிகப்பெரிய கடனான 1.5 பில்லியன் டாலர்கள் வழங்க உலக வங்கி உறுதி அளித்துள்ளது. அதில், திட்டத்தின் ஆய்வு பற்றிய முடிவுகளை வழங்க வேண்டிய இறுதி நாட்களுக்கு முன்பாக வழங்க இந்தியா தவறி விட்டது. மேலும், இன்று வரை இந்தியா வாங்கிய கடனுக்காக 0.5% அதாவது 12.75 கோடியை ” commitment Fees ” ஆக கட்டி வருகிறது. 2015-2017 இடைப்பட்ட காலத்திலேயே இந்தியா IBRD மற்றும் IDA-விடம் இருந்து பல கடனை பெற்றுள்ளது.

மேலும், ” 2015-2018-க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியா 61 திட்டங்களுக்கு பெற்ற கடன் தொகை 1,31,000 மில்லியன் டாலர்கள் ஆகும். 2018 ஆம் ஆண்டு முடிவடைய 6 மாதங்கள் இருப்பதால் அது அதிகரிக்க வாய்ப்புள்ளது.  2015-2018-க்கு இடையே பெற்றப்பட்ட கடனுடன் 2011-2014 ஆண்டுகளில் பெறப்பட்ட கடனை ஒப்பிடுகையில் அன்று 66 திட்டங்களுக்கு 1,32,520 மில்லியன் டாலர்கள் என நிகராகவே உள்ளன “.

சமீபத்தில் இந்திய அரசாங்கம் உலக வங்கியிடம் பிரதான் மந்தரி கிராம் சதக் யோஜனா கீழ் ஊரக சாலை அமைக்கும் திட்டத்திற்கு 3,371  கோடி கடன் பெறும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.  வளரும் நாடான இந்தியா போக்குவரத்து, மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு உலக வங்கியின் உதவியை நாடியே உள்ளது.

நாட்டின் கடன் சுமையில் இருந்து தப்பிக்க வேண்டுமாயின், அரசின் வருமானத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும். மேலும், அரசின் செலவுகளை குறைப்பதோடு, அரசு பதவியில் உள்ளவர்களின் வீண் செலவானது குறைக்கப்பட வேண்டும். உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு செய்வோமேயானால் நாட்டின் கடன் சுமையைக் குறைக்கலாம், புதிய கடன்கள் இன்றி நாட்டை நிர்வகிக்கலாம். இதை விடுத்து வீண் வதந்தியை பரப்புவது தேவையற்றது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader