இந்தியாவின் தோல்வி சந்தோசம் என தமிழில் பதிவிட்டவர் இந்தியரா ?

பரவிய செய்தி
எங்களுக்கு பாக்கிஸ்தான் வின் பண்ணினத்தை விட இந்தியா தோத்தது தான் சந்தோஷம்..!
மதிப்பீடு
விளக்கம்
2021 டி20 உலககோப்பையில் இந்தியா அணி பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்ததால் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய அணியின் பந்து வீச்சாளர் முகமது சமியை மத அடையாளத்துடன் திட்டி போடப்பட்ட வெறுப்பு பதிவுகள் நாடு முழுவதும் பரப்பப்பட்டது, அதற்கு எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டன.
இந்நிலையில், முகமது முஜாஹித் எனும் முகநூல் பக்கத்தில், ” எங்களுக்கு பாக்கிஸ்தான் வின் பண்ணினத்தை விட இந்தியா தோத்தது தான் சந்தோஷம்..! ” என தமிழில் வெளியான பதிவு கண்டனத்தைப் பெற்று வருகிறது. இந்தியாவில் வாழும் இஸ்லாமியர் ஒருவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பதிவிட்டதாக இப்பதிவிற்கு கண்டனம் தெரிவித்து, நாட்டை விட்டு செல்லுமாறு பகிர்ந்து வருகிறார்கள்.
உண்மை என்ன ?
தமிழில் பதிவை வெளியிட்ட முகமது முஜாஹித் எனும் முகநூல் பக்கம் இந்தியாவைச் சேர்ந்தது அல்ல. அந்த நபர் இலங்கையின் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என அவருடைய முகநூல் விவரத்திலும், அந்த பதிவின் கமெண்டில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அந்த முகநூல் பக்க விவரத்தில், இலங்கை நாட்டின் முகவரி மற்றும் மொழி பிரிவில் ஆங்கிலம், சிங்களம், தமிழ் என இடம்பெற்று இருப்பதையும் பார்க்க முடிந்தது.
அவருடைய பதிவால் எழுந்த எதிர்வினை குறித்து தன்னுடைய முகநூல் பக்கத்தில் வரிசையாக பதிவிட்டு இருக்கிறார். அந்த முகநூல் பக்கத்தில் பாகிஸ்தான் வீரர் தொழுகை செய்யும் வீடியோ,அவருடைய ட்விட்டர் பக்கத்தில் இலங்கை அணி வென்றது தொடர்பான பழைய பதிவுகள் உள்ளிட்டவையும் பார்க்க முடிந்தது.
இலங்கையைச் சேர்ந்த முகமது முஜாஹித் என்பவர் பாகிஸ்தான் வெற்றியை விட இந்தியாவின் தோல்வி சந்தோசம் அளிப்பதாக தமிழில் பதிவிட்டதால், தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமியர் என நினைத்துக் கொண்டு அந்த பதிவு கண்டனத்துக்கு உள்ளாகி வைரலாகி வருகிறது.
முடிவு :
நம் தேடலில், எங்களுக்கு பாக்கிஸ்தான் வின் பண்ணினத்தை விட இந்தியா தோத்தது தான் சந்தோஷம் என முகநூலில் பதிவிட்ட இஸ்லாமியர் இந்தியாவைச் சேர்ந்தவர் அல்ல, இலங்கையைச் சேர்ந்தவர். தமிழில் வெளியிட்ட பதிவால் இங்குள்ள இஸ்லாமியர் பதிவிட்டதாக நினைத்து கண்டனம் தெரிவித்து தவறாக வைரலாகி வருகிறது என அறிய முடிகிறது.