இராணுவத்தினர் குடும்பத்திற்கு உதவ “சேனா ஜல்” தண்ணீர் பாட்டில் விற்பனைக்கு வந்ததா ?

பரவிய செய்தி
Bisleri-யும், Aquafina-வும் வெளிநாட்டு நிறுவனங்கள், பாட்டில் தண்ணீர் விற்பனை செய்து கொண்டு இருக்கின்றன. நமது பணம் நாட்டில் இருந்து வெளியேறுகிறது. பயணிக்கும் போது Sena Jal (இராணுவ நீர்) கேளுங்கள். இது எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. இது மலிவானது கூட.
இந்திய இராணுவ வீரர்களின் மனைவிகள் நலன்புரி சங்கம் ” ஜெனரல் வைப்பின் ராவத் அவர்களின் மனைவி மாதுளிகா ராவத் தொடங்கியது. அரை லிட்டர் ரூ 6-க்கும், ஒரு 1 லிட்டர் பேக் ரூ. 10-க்கும் ஆகும். மற்ற நிறுவனங்கள் ரூபாய் 20-க்கு விற்கின்றன. “சேனா ஜல்” இலாபம் இராணுவ நலன்புரி சங்கத்துக்கு செல்கிறது. இந்த பணத்தை இந்திய இராணுவத்தில் உள்ள உயிர் தியாகம் செய்த சிப்பாய்களின் குடும்பங்களுக்கும், தியாகிகளின் குழந்தைகளின் கல்விக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகத்தில் விளம்பரம் தர இராணுவத்திடம் பணம் இல்லை. அதுவும் அதன் குறைந்த விலைக்கு காரணம். ஜெய்ஹிந்த்..! வந்தே மாதரம்
மதிப்பீடு
விளக்கம்
வெளிநாட்டு நிறுவனங்களின் பாட்டில் தண்ணீர்களை தவிர்த்து, இந்திய இராணுவ வீரர்களின் மனைவிகள் நலன்புரி சங்கம் மூலம் தொடங்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் “சேனா ஜல் ” (இராணுவ நீர், ஆர்மி வாட்டர்) எனும் தண்ணீர் பாட்டிலை வாங்கி இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவுமாறும், அந்த தண்ணீர் பாட்டில் அனைத்து இடங்களிலும் குறைந்த விலையில் கிடைப்பதாக கடந்த சில நாட்களாக ஃபார்வர்டு செய்தி ஒன்று ஆயிரக்கணக்கில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
Sena Jal, an initiative of the Army Wives Welfare Association (AWWA), bottles being sold at Rs 6 each; the money collected will be used in the welfare of soldiers & war widows pic.twitter.com/8YmbHYk1xO
— ANI (@ANI) January 20, 2018
இந்திய இராணுவ வீரர்களின் மனைவிகள் நலன்புரி சங்கம் சேனா ஜல் எனும் தண்ணீர் பாட்டில் தயாரித்து விற்பனை செய்யும் முயற்சியை தொடங்கியதாக 2018 ஜனவரியில் இந்திய ஊடகங்கள் பலவற்றில் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் கிடைக்கும் வருவாயை போரில் கணவனை இழந்த இராணுவ வீரர்களின் மனைவிகளுக்கும், இராணுவத்தினரின் குடும்பங்களும் உதவப் பயன்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது.
இராணுவ வீரர்களின் மனைவிகள் நலன்புரி சங்கம்(AWWA) உடைய இணையதளத்தில், சேனா ஜல் தண்ணீர் பாட்டில் முயற்சி 2017 அக்டோபர் 17-ம் தேதி தொடங்கப்பட்டதாகவும், இது இந்திய இராணுவ வீரர்களின் குடும்பத்தினரால் செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த தண்ணீர் பாட்டில்களின் விற்பனை குறித்து எந்த விவரமும் அளிக்கப்படவில்லை. விநியோகம் செய்யும் இடங்கள், விநியோகஸ்தர்கள் என எந்தவொரு தகவலும் இல்லை.
2019-ல் AWWA-ன் யூடியூப் சேனலில் ரூ.5 மற்றும் ரூ.10 போன்ற நாணயங்களை அளித்து தானியங்கி இயந்திரம் மூலம் ” சேனா ஜல் ” பாட்டில் பெறுவது தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. ஆனால், அதிலும் எங்கு விற்பனை செய்யப்படுகிறது என்ற விவரங்கள் இல்லை. சேனா ஜல் தண்ணீர் பாட்டில் முயற்சி தொடங்கப்பட்ட பிறகு எங்கெல்லாம் கிடைக்கிறது என்பது தொடர்பான எந்தொரு தகவலும், செய்தியும் வெளியாகவில்லை.
2018 பிப்ரவரி நியூஸ் 18 இந்தி மொழியில் வெளியான செய்தியில், ” வைரலாகும் பதிவுகளில் உள்ள ஆர்மி வாட்டர் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, உங்களால் சந்தைக்கு சென்று ஆர்மி வாட்டர் பாட்டிலை வாங்க முடியாது. இது இராணுவ பயன்பாட்டிற்கானது. பொதுமக்களுக்கான வணிக விற்பனைக்கு இல்லை ” எனக் கூறப்பட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், சேனா ஜல் எனும் இராணுவ தண்ணீர் பாட்டில் முயற்சியை இராணுவ வீரர்களின் மனைவிகள் நலன்புரி சங்கம் 2017ல் தொடங்கியது உண்மை. ஆனால், அது பொது மக்களின் பயன்பாட்டிற்கு வந்ததாக எந்த தகவலும் இல்லை. அதுதொடர்பாக, AWWA தரப்பிலும் எந்த தகவலும் இல்லை. நீங்கள் செல்லும் இடங்களில் சேனா ஜல் தண்ணீர் பாட்டிலை எதிர்பார்க்க இயலாது என்பதை அறிய முடிகிறது.