This article is from Aug 04, 2019

சரிவில் இந்திய ஆட்டோமொபைல் துறை| உலக வங்கி வெளியிட்ட இந்தியாவின் ஜி.டி.பி !

பரவிய செய்தி

அழிவுப் பாதையில் ஆட்டோமொபைல் தொழில், டாடா நிறுவனம் 30 ஸ்டீல் தொழிற்சாலைகள் மூடல். தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் மாருதி சுஸுகி நிறுவனம், உலக வங்கி வெளியிட்ட தரவரிசை பட்டியலில் 7-வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா.

 

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் முன்னணியில் இருக்கும் மாருதி சுஸுகி, மஹிந்திரா & மஹிந்திரா, ஹ்யுண்டாய், ஹோண்டா உள்ளிட்ட நிறுவனங்களின் விற்பனையானது கடந்த மாதத்தில் சரிவைக் கண்டுள்ளது. டிவிஎஸ் மற்றும் ராயல் என்பீல்டு உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் அதே நிலையே.

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி நிறுவனத்தின் விற்பனையானது கடந்த 6 மாதங்களில் சரிவை கண்டு வருகிறது. அறிக்கைபடி, ஜூலை 2019-ல் 1,09,264 யூனிட்ஸ் என மொத்த விற்பனையில் 33.5 சதவீதம் அளவிற்கு சரிவு ஏற்படுத்து உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. ஜூன் 30 இறுதி வரையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் லாபமானது 2019-20FY-ல் முதல் காலாண்டு பகுதியில் மட்டும் 27.3 % வரை சரிந்துள்ளது.

கடந்த மாதத்தில் ஹ்யுண்டாய் மோட்டார் இந்தியாவின் மொத்த விற்பனையில் 3.8 சதவீதம் சரிவு ஏற்பட்டு உள்ளது. இதேபோன்று, ஜூலை மாதத்தில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 15 சதவீதமும், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் விற்பனை 13 சதவீதமும், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் விற்பனை 22 சதவீதமும் குறைந்து இருப்பதாக வெளியாகி இருக்கிறது.

ஸ்டீல் தொழிற்சாலைகள் :

ஜார்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூர் சுற்றியுள்ள பகுதியில் அமைந்து இருக்கும் ஆதித்யபூர் தொழிற்சாலை பகுதியில் இயங்கி வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிளான்ட்கள் கடந்த மாதத்தில் தொடர்ந்து மந்தமான சந்தை நிலவரத்தால் மூடப்பட்டு வருகிறது. சென்ற மாதத்தில் மட்டும் நான்காவது முறையாக வேலையின்றி மூடப்படுவதாக செய்திகளில் கூறப்பட்டு உள்ளது.

வாரத்தில் வியாழன் முதல் சனி வரையில் மற்றும் ஞாயிறு விடுமுறை என நிறுவனம் இயங்குவதில்லை. நிரந்தர பணியாளர்கள் ஆகஸ்ட் 5-ம் தேதியில் இருந்தும், நிரந்தரமில்லா தொழிலாளர்கள் 1000 பேர் ஆகஸ்ட் 12-ம் தேதி மீண்டும் வேலையில் வந்து சேருமாறு அறிவித்து உள்ளது.

ஆட்டோமொபைல் துறையின் மந்தமான நிலையால் கடந்த இரண்டு மாதங்களில் 15 நாட்கள் மட்டுமே உற்பத்தி நடைபெற்று உள்ளது. ஆதித்யபூர் தொழிற்சாலை அமைப்பின் தலைவர் அகர்வால் கூறுகையில், ஏப்ரல் மாதத்தில் இருந்து மாநில அரசு மின் கட்டணத்தை 38% வரை உயர்த்தி இருப்பதன் விளைவாக 25-30 ஸ்டீல் துறை நிறுவனங்கள் மூடப்படுவது உறுதி. உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது, அவர்களுக்கு மூடுவதை தவிர வேறு வழிகள் இல்லை ” எனத் தெரிவித்து இருக்கிறார்.

இந்திய பொருளாதாரம் :

உலக வங்கி வெளியிட்ட 2018-ம் ஆண்டிற்கான சர்வதேச ஜிடிபி தர வரிசை பட்டியலில், இந்தியா 7-ம் இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. அறிக்கையின் படி, பொருளாதார மதிப்பில் அமெரிக்கா 20.5 ட்ரில்லியன் டாலர்கள் உடன் முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்ததாக இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக 13.6 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் உடன் சீனா உள்ளது.

மூன்றாவது இடத்தில் ஜப்பான்($5 ட்ரில்லியன்), ஜெர்மனி நான்காவது இடத்திலும் ($4 ட்ரில்லியன்), ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் $2.8 ட்ரில்லியன் உடன் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் உள்ளன. இந்தியா 2.7 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் உடன் 7-வது இடத்தில் உள்ளது.

2017 அறிக்கையின் படி, இந்தியா பொருளாதார மதிப்பில் 2.65 ட்ரில்லியன் டாலர்கள் உடன் ஐந்தாம் இடத்தில் இருந்தது. 2024-25 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார மதிப்பை 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்த வேண்டும் என்ற திட்டத்தை அரசு கொண்டுள்ளது. 2018-ல் பணத்தின் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியில் சரிவு ஆகியவையே இந்தியா 7-வது இடத்திற்கு தள்ளப்பட காரணம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader